இறைவன் ஏசுவின் நாமத்தை நாடுங்கள்
நாடுங்கள் கூடுங்கள் மகிழ்ந்து பாடுங்கள்
உலகம் போற்றும் உத்தமன் ஏசுவை
தேடினால் கிடைப்பான்
தட்டினால் திறப்பான்
நம்மையே வாழ்விப்பான் இறைவன்...
இந்தப் பாடலை வாணி ஜெயராம் பாடியிருப்பார். 1975இலேயே இந்தப் பாட்டை ஆரோகணம் என்று சொல்லப்படும் ஏறு வரிசை ஸ்வரங்களைப் பயன்படுத்தியே இசையமைத்தவர் புகழ் பெற்ற கீபோர்ட் வாத்தியக் கலைஞரான ஏ.சி.தினகரன். 1985இல் வெளியான `சிந்து பைரவி' திரைப்படத்தின் வழியாக ஆரோகண ஸ்வரங்களை மட்டுமே கொண்ட ‘கலைவாணியே...’ பாடல் மக்களிடம் பரவலானது. வாணி ஜெயராம் பாடிய கிறிஸ்தவப் பாடலை 1980இல் இறங்கு வரிசை ஸ்வரங்களைப் பயன்படுத்தி அவரோகண முறையிலும் இசையமைத்திருக்கிறார் தினகரன். இந்தப் பாடலையும் வாணி ஜெயராம் பாடியிருப்பார். இப்படி இசையில் பல விஷயங்களைப் பரீட்சார்த்த முறையில் எடுத்தாண்டு இளைஞர்கள் பலருக்கு முன்னோடியாக இருப்பவர் ஏ.சி.தினகரன். அவரின் 65 ஆண்டுக் கால இசைப் பணிக்காக அவரைக் கெளரவிக்க ஒரு பாராட்டு விழாவை, எஸ்தர் ஃபைன் ஆர்ட்ஸோடு இணைந்து ஜீவராஜா ஸ்ருதி இன்னிசைக் குழு நடத்தவுள்ளது.
இளமையில் இசை
சென்னை, அயனாவரம் பகுதியில் சொக்கலிங்கம் பிள்ளை, அன்னபூரணி இணையருக்கு 1951இல் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்தார் தினகரன். 3 வயதில் பாலகனாக இருந்தபோதே, தன் தந்தையாரோடு இணைந்து திருத்தணியில் நடக்கும் படி உற்சவத்தில் திருப்புகழ் பாடினார். ஹார்மோனியம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின் இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவரான இவரின் தந்தையே இவருக்கு முதல் குருவாகத் திகழ்ந்தார்.
இவரின் தந்தையாரின் இசைக் குழுவில் ஹார்மோனியம் கலைஞர் தன்ராஜ், குன்னக்குடி வைத்தியநாதன், வி.குமார், மேண்டலின் நித்யானந்தம் ஆகியோர் இருந்தனர். பின்னாளில் இவர்களில் சிலர் இசையமைப்பாளர்களாகவும் இசை ஆராய்ச்சியாளர்களாகவும் மிளிர்ந்தனர். இந்தக் கலைஞர்களின் வாசிப்பில் லயித்த தினகரன், 5 வயது முதல் 8 வயது வரை வயலின் இசைக் கருவியைப் பயின்றார்.
புகழ் பெற்ற ஹார்மோனிய இசைக் கலைஞர்கள் பாப் ஜான், சேதுபதி ஆகியோரின் வாசிப்பைக் கண்டு ஆர்வம் ஏற்பட்டு, தனது பத்து வயதில் ஹார்மோனியம் இசைக் கருவியை வாசிப்பதற்குப் பயிற்சி செய்து முழு இசைக் கலைஞராக உருவானார்.
பள்ளியில் படிக்கும்போது தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ள செய்யுள் பகுதிகளுக்கு மெட்டமைத்துப் பாடும் தினகரனின் திறமையைக் கண்ட அவரது பள்ளி ஆசிரியர், பள்ளி விழாக்களில் நடைபெற்ற நாடகத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அளித்து ஊக்கமளித்தார்.
சமயங்கள் கடந்த இசை
இசை ஆராய்ச்சியாளர் ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய பக்தி இசைக் கோவைகளை அதன் பழமை மாறாமல், இக்காலத்தின் இசையமைப்புக்கு ஏற்றவாறு புதிய வடிவம் கொடுத்துப் பின்னணிப் பாடகர் ஜாலி ஆபிரகாம், சுஜாதா ஆகியோரைப் பாடவைத்தார். ஜாலி ஆபிரகாம் பாடிய `இயேசுவே சரணம்', போதகர் மோசஸ் ராஜசேகர் பாடிய `கிருபையே தேவகிருபையே', போதகர் வின்சன்ட் சாமுவேல் பாடிய `மகிமை மாட்சிமை நிறைந்தவரே' போன்ற இவர் இசையமைத்த பாடல்கள் புகழ் பெற்றவை.
அபிராமி அந்தாதி பாடல்களுக்கு 102 ராகங்களில் இசையமைத்து சைந்தவியைப் பாடவைத்து வெளியிட்டிருக்கும் படைப்பு பக்தி இசை உலகில் முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமிய ஆன்மிகப் பாடல்களுக்கு இவரது இசையமைப்பு மிகவும் புகழ் பெற்றவை. நாகூர் மீரானின் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
திருச்சி கலைக்காவிரி கிறிஸ்துவக் கலைத் தொடர்பு நிலையம் தயாரிப்பில், கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியத்திற்கு இசையமைத்திருக்கிறார். திரையிசையிலும் இவரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஜி.அனந்த், ரவீந்திரன் மாஸ்டர், கீரவாணி ஆகியோர் முதலில் அறிமுகமான திரைப்படத்தில் இணை இசையமைப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குழுவிலும் பங்கெடுத்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், லண்டன், துபாய் போன்ற பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் தினகரன். திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் கட்டிட நிதிக்காகவும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் பங்கெடுத்துச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.