இயற்கையும் இறையும் வெவ்வேறு அல்ல, ஒன்றுதான் என்பதை கலாபூர்வமான தன்னுடைய கற்பனையின் மூலம் நிலைநாட்டியிருப்பவர் நிகர் சாஹிபா.
காஷ்மீரின் கவிமுகம் நிகத் சாஹிபா என்றால் இசை முகம் ஹாபா ஹன்ஜுரா. காஷ்மீரி மொழியில் தலைமுறை தலைமுறையாகப் பாடப்பட்டுவரும் தாலாட்டுப் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்களைக் கிராமிய இசை, மேற்கத்திய இசையின் இசைக் கூறுகளோடு சேர்த்து உலக மக்களின் செவிகளுக்கு புதிய அனுபவத்தோடு காஷ்மீரித் தேனைப் பாய்ச்சுபவர் ஹாபா.
தால் ஏரியின் பின்னணியில் இவர் பாடிய ஹுகுஸ் புஹுஸ் பாடலில் வரும் சேர்ந்திசை வரிகளை மதமாச்சரியங்களைக் கடந்து இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து பாடி சகோதரத்துவத்தைப் போற்றிய தருணங்கள் முக்கியமானவை. பாரம்பரியமான பாடல்களைப் போலவே அதற்கான இசையை அமைப்பதிலும் பாரம்பரியமான வாத்தியங்களைப் பயன்படுத்துவது ஹாபாவின் பாணி. ரபாப் எனப்படும் நரம்பு இசைக் கருவி, சந்தூர், தும்பக்நாரி எனும் தாள வாத்தியம் போன்றவை பிரதான இடம்பிடித்திருக்கும். அவரின் இசையில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளுக்கே உரிய ஆச்சரியங்களும் தால் ஏரியின் அமைதியும் ஒருங்கே குடிகொண்டிருக்கும்.
ஹாபா ஹன்ஜுரா அண்மையில் வெளியிட்டிருக்கும் `கூப்சூரத் ஹே' பாடல் கிராஃபிக் நுட்பத்தில் அமைந்த காட்சிகளுடன் காஷ்மீரின் இயற்கையைக் கொஞ்சுகிறது. காஷ்மீரின் வசந்தகாலத்தைப் பாட்டில் வார்த்தைகளில் ஹாபாவே வடித்திருக்கிறார். பாட்டின் இடையிடையே சந்தூர், ரபாப் மற்றும் தும்பக்நாரி, தபேலாவின் ரசவாதம் நம்மை காஷ்மீரின் சமவெளிகளில் மானசீகமாக உலவவைக்கும் அனுபவத்தைத் தரக்கூடியவை. கூடவே இயற்கையும் இறையும் ஒன்றே என்னும் உணர்வை நம் மனத்துக்குள் எதிரொலிப்பவையாக இந்தக் கீதங்கள் இருக்கின்றன.