புனித ரமலான் மாதத்தில் பல அருளாளர்களின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். நம் மனக் கதவைத் திறந்து வெளிச்சம் பாய்ச்சும் எத்தனையோ பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. அவற்றில் இன்றைக்கும் இணைய தளங்களின் வழியாக தலைமுறைகளை தாண்டி ஆன்மிக வெளிச்சம் வீசும் பல பாடல்களும் இருக்கின்றன. அதைப் பற்றிய சிறு தொகுப்பு இது:
பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் என்றாலே அதிரடியான அவரின் பாடல் ஆல்பங்களின் பெயர்தான் நம் எல்லோரின் நினைவுக்கும் வரும். ஆனால் ஆங்கிலத்தில் 'கிவ் தேங்க்ஸ் டு அல்லாஹ்' என்னும் பாடலை கேட்பவர் நெஞ்சம் உருகிவிடும். இதைவிட புனித ஹஜ் பயணத்தைப் பற்றியும் புனித மெக்காவைப் பற்றியும் அவர் பாடியிருக்கும் 'ஓ அல்லாஹ் ஐயாம் வெயிட்டிங் தி கால்' பாடல் நெகிழ்ச்சியான பக்தி விருந்தை உங்களின் செவிகளுக்குப் படைக்கும்.கிவ் தேங்க்ஸ் டு அல்லாஹ் பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=C_QEvHnzpzA
முகமது ரஃபியின் பல பிரபலமான பாடல்கள் இந்த ரமலான் மாதத்தில் நினைவுகூறத்தக்கது. மறக்கமுடியாத திரைக் காவியமான 'ஆலம் ஹரா' படத்தில் இடம்பெற்ற 'சுனோ ரம்ஸான் கி தஸ்தன்' பாடலும், 'ரம்ஸான் கி அஸ்மத், ஹடிம்டாய் (1956ல் வெளிவந்த படம்) இடம்பெற்ற 'பர்வர் திகார் எ ஆலம்', 'கம்லி வாலே கா ரோஸா' போன்றவை இந்தப் பட்டியலில் முக்கியமானவை.'சுனோ ரம்ஸான் கி தஸ்தன் பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=M5n9CF6AAjM
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தனக்கு புகழ் கிடைக்கும் எந்த மேடையிலும் சொல்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுவதும் அவருடைய இசையைக் கேட்டு மக்கள் உற்சாகமாக ஆடிப்பாடுவதை நிறைய மேடை நிகழ்ச்சிகளில் கண்டிருக்கிறோம். ஆனால், அமைதியான தீர்க்கமான அவருடைய சூபி இசைப் பாடலைக் கேட்டு இறை அனுபவத்தில் ரசிகர்கள் மூழ்கியிருந்ததை சிட்னியில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி காணொலியில் பார்க்கமுடியும். பதிமூன்றாம் நூற்றாண்டில், வட இந்தியாவில் உள்ள அஜ்மீரில் வாழ்ந்த ஒரு துறவி க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி. ஈரானிலிருந்து இந்தியா வந்து மிகப்பெரிய சூபி மரபை உருவாக்கியவர் இவர். இவரது இன்னொரு பெயர் ‘கரீப் நவாஸ்' என்பதாகும். அதற்கு ‘ஏழைகளின் பாதுகாவலர்' என்று அர்த்தம்.
ஹார்மோனியத்தின் ஸ்ருதி கட்டைகளில் அவருடைய விரல்களின் நுனியில் ஆதார இசை பிறக்க, `க்வாஜா ஜி... க்வாஜா.. ஜி.. க்வாஜா' பாடலைத் தொடங்க, ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அந்த இறை அனுபவத்தில் லயிக்கிறது.
''ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் இரங்கும் இறைவனே.. வா வந்து என் இதயத்தில் தங்கு...'' என்று பரிபூரணமான இறைவனை உருக்கமாக வேண்டும் வரிகளை, அதன் உருக்கம் சிறிதும் வழுவாமல் பாடும் ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் மொத்த கூட்டமும் கட்டுண்டு கிடக்கிறது. இந்தப் சூபி பாடலை எழுதிப் பாடியவர் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி.
இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் மக்களாலும் வழிபடப்படும் இவருடைய தர்கா ஷெரிஃப் அஜ்மீரில் உள்ளது. எல்லா மதத்தினரும் இந்த தர்காவில் வழிபாட்டுக்கு வருகின்றனர். இந்த உலகத்துக்குக் கிடைத்த மகத்தான சூபி ஞானிகளில் ஒருவரான க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியே இந்த சூபி பாடலில் `க்வாஜா' என்று கருதப்படுகிறார்.ஆன்மிகப் பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிக்கும் 'மர்ரஹாபா யா முஸ்தபா', ஓவஸிஸ் ரஸா காதரியின் பல பாடல்களில் 'மகே ரம்ஸான் ஆகயா' ஆகியவையும் புகழ்பெற்றவை.மர்ரஹாபா யா முஸ்தபா பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=vfg18vpuyoo