வேற்றுமையும் வெறுப்பும் நிரம்பி வழியும் இன்றைய வாழ்க்கை முறையில் சமூக உறவைப் பேணுவது என்பது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது. இந்தச் சூழலில், எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எழுதியிருக்கும் ‘நபிகளாரின் சமூக உறவு’ எனும் நூல், முகம்மது நபிகளாரின் சமூக உறவை நமக்கு அறிமுகம் செய்வதன் மூலம், சமூக உறவை மேம்படுத்தும் வழிமுறைகளைக் கோடிட்டுக்காட்டுகிறது.
இஸ்லாமியர் அல்லாதோருடன் நபிகளார் கொண்டிருந்த சமூக உறவு கிறிஸ்தவ அறிஞரான வராக்கா பின் நவ்பலிடமிருந்து தொடங்குகிறது. மதினாவில் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற நிலையில் அங்கே வாழ்ந்த பன்முக சமூகத்தாருடன் நல்லுறவை நிலைநாட்ட நபிகளார் செய்துகொண்ட மதினா பிரகடனம், யூதர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் மட்டுமின்றி, தாம் பிறந்த மக்கா நகரிலிருந்து தம்மை வெளியேற்றிய மக்கத்து இறைநிராகரிப்பாளர்களுடன் செய்துகொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை முதலியவற்றைச் சமூக உறவுகள் கண்ணோட்டத்துடன் அலசுகின்றது இந்தப் புத்தகம். நபிகளாரின் சமூக உறவுகள் இந்திய இஸ்லாமியர்களுக்குக் காட்டும் வழியும் அனுபவப்பூர்வமாக விவரிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக, அறப்பணிகள் வழியாகச் சமூக உறவுகளைப் பலப்படுத்தும் முறைமைகளும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
மனிதநேயம், சகோதரத்துவம், பிற சமயத்தின ருடன் இணக்கமாக வாழ்தல் போன்றவற்றை இந்த நூலில் ஜவாஹிருல்லாஹ் மிகவும் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறார். நபிகளாரின் வரலாற்றைச் சொல்லும் மற்றொரு நூல் அல்ல இது. இந்தப் புத்தகம் இன்றைய தலைமுறைக்கான சமூக அறிவியல் பாடம்.
நபிகளாரின் சமூக உறவு, எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மாற்றுப் பிரதிகள், தொடர்புக்கு: 8220658318