ஆனந்த ஜோதி

எதிரிகளை நண்பர்களாகக் கருத முடியுமா?

செய்திப்பிரிவு

மனிதர்களால் உலகில் உருவாக்கப்பட்டதே மதம். கருணை, அன்பு, சகோதரத்துவம், மன்னிப்பு, சமாதானம் ஆகியவற்றை உலகில் உள்ள எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால், இன்றைய நவீன உலகில், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிற மனிதர்களுக்கு மத்தியில் பகைமைக்கும் வன்முறைக்கும் மதமே வழிவகுப்பதாக மதங்களின் மீது ஒவ்வாமை கொண்டவர்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக அரசியல், இனம், மொழி, தேசம் ஆகியவற்றோடு மதம் இணையும்போது அப்படி நினைக்கிறார்கள். ஆனால், எந்தவொரு மதமும் ஒருபோதும் சக மனிதனை, வேற்று மதத்தவரை வெறுக்கும்படி கூறவில்லை.

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில், இயேசு தன்னுடைய போதனையில், “கடவுளின் பிள்ளைகளாக இருப்பவர்கள் கடவுளைப்போல் அன்பு காட்டுகிறார்கள். தங்களுடைய எதிரிகளிடமும்கூட அப்படி அன்பு காட்டுகிறார்கள்” என்கிறார். மத்தேயு புத்தகம் அதிகாரம் 5-ல் வசனங்கள் 44 மற்றும் 45-ல்இயேசுவின் வார்த்தைகளைப் பதிந்திருக்கிறார் அவருடைய முதன்மைச் சீடர்களுள் ஒருவரான மத்தேயு. “நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்; அப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தந்தையின் பிள்ளைகளாக இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் கதிரவனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதியாளர்களுக்கும் மாமழையைப் பொழியச் செய்கிறார்” என்றார் இயேசு.

இயேசுவின் வழியைப் பின்பற்றி உலகின் பல பகுதிகளுக்கு அவருடைய போதனைகளை எடுத்துச்சென்ற புனித பவுல் எழுதிய ரோமர் புத்தகம் அதிகாரம் 12, வசனங்கள் 20 மற்றும் 21-ல் இப்படிச் சொல்கிறார். “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவருக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவர் தாகமாயிருந்தால், ஏதாவது குடிக்கக் கொடுங்கள். தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்”. ‘சகோதர நாடுகளே போர் செய்துகொண்டு மடியும் இக்காலத்தில் பவுலின் இந்த வார்த்தைகளை பின்பற்ற நாம் ஏன் தவறிவிட்டோம்?’ எனச் சிந்திக்க வேண்டிய தவ நாட்கள் இவை.

ஒரு கள்வனைக் கைது செய்வதுபோல, கொடூர ஆயுதங்களுடன் வந்து கையைப் பிணைத்து கைதுசெய்த அந்த இரவிலும்கூட, அந்தக் காவலர்கள் மீது அன்பு காட்டினார் இயேசு. அவரைக் கைதுசெய்ய வந்தவர்களில் ஒருவரைத் தன்னுடைய சீடரான பேதுரு வாளால் தாக்கியபோது அவரைக் குணப்படுத்தினார். அந்தத் தருணத்தில், “வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்கிற வன்முறையின் விளைச்சலைப் பற்றி அவர் குறிப்பிட்டார். எதிரிகளை நண்பர்களாக மாற்றிக்கொள்வது உங்கள் வாழ்க்கையை சமாதானமும் அன்பும் நிறைந்ததாக மாற்றிவிடும்.

SCROLL FOR NEXT