ஈரேழு உலகமும் தனக்கு அடிபணிவதற்கு சிவபெருமானைத் தன் மருமகனாக அடைய வேண்டும் என்று நினைத்தார் தட்சன் என்னும் அரசர். அதற்காக சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தார். சிவபெருமானின் வரம் கிடைத்ததால், தன் மகள் தாட்சாயணியை (பார்வதி தேவி) சிவபெருமானுக்கு மணம் முடித்தார்.
திருமணம் முடிந்ததும், தட்சனிடம் கூறிக் கொள்ளாமல், சிவபெருமான் தாட்சாயணியுடன் கயிலாயம் திரும்பினார். இதனால் கோபம் கொண்ட தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்று நடத்தினார். தங்களை அழைக்காததால் சிவபெருமானும், தாட்சாயணியும் தட்சன் மீது கோபம் கொண்டனர். அதன்விளைவாக, சிவபெருமானிடம் இருந்து வீரபத்திரரும், பார்வதி தேவியிடம் இருந்து காளியும் தோன்றி யாகத்தை அழித்தனர். தட்சனின் தலையும் உருண்டது. `தட்சனின் மகள்’ என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாத தாட்சாயணி, தன் உடலை தீக்கிரையாக்கினார்.
இதைத் தொடர்ந்து, தேவியின் உடலைச் சுமந்தபடி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால், அனைத்து உலகங்களும் நடுங்கின. ஈசனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தும்பொருட்டு, தன் சுதர்சன சக்கரத்தை திருமால் ஏவினார். சுதர்சன சக்கரம் சுழன்று, தாட்சாயணியின் அங்கத்தைப் பல கூறுகளாகச் சிதைத்தது. அந்தக் கூறுகள் அனைத்தும் பாரத தேசத்தின் பல பகுதிகளில் (51 இடங்கள்) விழுந்தன. அவையே அன்னை பராசக்தியின் சக்தி பீடங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தொடங்கி அசாம் மாநிலம் காமாக்யா கோயில் வரை உள்ள 51 சக்தி பீடங்கள் குறித்த தகவல்களை, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 45 ஆண்டுகளாக பூஜை செய்து வரும் நடராஜ சாஸ்திரி, தன் யூடியூப் அலைவரிசை வாயிலாக அளிக்க உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மகாபாரதம், ராமாயணம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். 51 சக்தி பீடங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் (நாபி) தொடங்கி, அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயில் (யோனி) வரை அந்தந்த இடங்களுக்கே சென்று அக்கோயில்களின் தல வரலாறு, சிறப்புகள், திருவிழாக்கள், அங்கு செல்லும் வழி குறித்து கூறப்படும்.
மேலும் இது அஷ்டமா சித்திகள் தொடர்பானது. சாஸ்திர சம்பிரதாயங்கள் அர்த்தமுள்ளவை. இல்லங்களில் பூஜை தொடங்குவதற்கு முன் புண்ணியா வாசனம் செய்வது, ஹோமங்கள் செய்வது, மாவிலைக் கொத்து கட்டுவது என்று ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் வாராவாரம், சாஸ்திர சம்பிரதாயங்கள், அஷ்டமா சித்திகள், சக்தி பீடங்கள் குறித்து Sri Mathrey Namaha https://bit.ly/3q6m7ry என்கிற யூடியூப் சேனலில் சிறு சிறு வீடியோக்களாக விளக்க உள்ளோம். அனைவரும் கண்டு, கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.