ஆனந்த ஜோதி

40 எனும் எண்!

செய்திப்பிரிவு

மார்ச் முதல் வாரத்தில் ‘தவக் காலம்’ தொடங்கியிருக்கிறது. மொத்தம் 40 நாட்கள். இந்தத் தவக்காலம் கொண்டுவரும் செய்தி என்ன?
மனமாற்றம் பெறவும் அதன்மூலம் நம்மை விண்ணுலகிற்குத் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்ளவும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது இந்தத் தவக் காலம்.

மண்ணுலகில் தேவையற்ற பலவற்றின் மீது தேவைக்கு அதிகமாகவே பற்றுகொண்டவர்களாக நாம் இருக்கிறோம். ஞாயிறுதோறும் தேவாலயம் சென்றாலும் பரலோகத் தந்தையிடமிருந்து நம்மை விலக்கி வைத்துவிடுகிறது இந்த மண்ணுலக வாழ்க்கை. அதிலிருந்து மீண்டு வர அவகாசம் அளிக்கின்றன இந்த 40 நாட்கள்.

நோவாவின் காலத்தில் பூமி கண்ட முதல் பெருவெள்ளம் குறித்த கதையானது மனிதர்கள் மீதான நம்பிக்கையின்மையிலிருந்து இறை நம்பிக்கைக்குக் கடந்து வருதலுக்குரிய செய்தியை நமக்கு வழங்குகிறது. ஆதாம் மரித்து 126 ஆண்டுகள் கடந்த பின் பொ.ஆ.மு. 2970-ல் நோவா பிறந்தார் என விவிலியத்தின் காலக் கணக்கு காட்டுகிறது.

நோவாவின் நாட்களில், ஆயிரக்கணக்கான மக்கள் தன்னிச்சையாக வாழ்கிறேன் என்கிற பெயரில் அறமற்ற வாழ்க்கையில் அமிழ்ந்து போனார்கள். ஆகவே ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் பரலோகத் தந்தை கண்டார்’ என விவிலியத்தின் பழைய ஏற்பாடு (6:5, 11, 12) பதிந்து வைத்திருக்கிறது. கெட்ட மனிதர்கள் அனைவரையும் அழித்துவிடச் சித்தம் கொண்ட பரலோகத் தந்தை பெருவெள்ளத்தை அனுப்புகிறார். மனித இனத்தைக் காக்க, பூமி வாழ்க்கையின் பொருட்டு தன்னுடனான உறவைத் துண்டித்துகொள்ளாத நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் தேர்ந்தெடுக்கிறார் கடவுள். நோவா, கடவுள் சொன்னதை முழுமையாக நம்பி, பெருங்கப்பலைக் கட்டுகிறார்.

இங்கே பெருவெள்ளப்பெருக்கானது நோவா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் கீழ்ப்படிதலுக்கான போராட்டத்தைக் குறிக்கிறது. நோவா கட்டிய பெருங்கப்பல் அவர்கள் தீமையைக் கடந்து வருதலை எடுத்துரைக்கிறது. வெள்ளத்திலிருந்து அவர்களைக் காக்க இறைவன் தோன்றச் செய்யும் வானவில்லானது அவருடைய உறுதியான அன்பின் உடன்படிக்கைக்கு அடையாளமாகிறது.

நோவா காலத்தின் பெருவெள்ளம் நாற்பது பகலும், நாற்பது இரவும் நீடித்தது. சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளைப் பெறும் முன்பு, மோசே நாற்பது பகல், நாற்பது இரவு உண்ணாமல் கடவுளுடன் இருந்தார். ஒரே மலையில், நாற்பது பகல், நாற்பது இரவுகள் கடவுளுடன் எலியா நடந்தார். நாற்பது என்கிற இந்த எண், விவிலியத்தில் ஆன்மிகப் பொருள் மிகுந்த எண் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இயேசு கிறிஸ்துகூட, தன்னுடைய பணி வாழ்வைத் தொடங்கும் முன், பாலைவனத்தில் நாற்பது பகலும், இரவும் நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். இந்தப் பின்னணியில் விவிலிய வார்த்தைகள் மற்றும் திருச்சபை மரபுப் பின்னணிகள் நாற்பது நாட்கள் தவக்கால நோன்பை ஆழமான அர்த்தத்தைக் கொண்டதாக மாற்றிவிடுகின்றன.

SCROLL FOR NEXT