திருத்தலங்களைத் தேடி | வனஜா இளங்கோவன், மைதிலி வைத்தியநாதன்,
பத்மா பதிப்பகம், அலைபேசி: 99413 85795.
திருத்தலங்களைக் குறித்து எழுதும்போது சிலர் தாங்கள் தரிசித்து பெற்று வந்த ஆலயங்களைப் பற்றிய அருமை பெருமைகளை அந்தத் தலங்களுக்கே உரிய தனிப்பட்ட புராண, மரபார்ந்த செழுமைகளை எடுத்துக் கூறுவதோடு நிறுத்திக்கொள்வர். ஆனால், இந்த நூலின் ஆசிரியர்கள் கூடுதலாகத் தாங்கள் சென்றிருக்கும் ஆலயத்தின் சிறப்புகளைச் சிரமேற்கொண்டு சேகரித்துத் தந்திருக்கின்றனர். கரையாத உப்பு லிங்கம், மீன்கள் வளரா பொற்றாமரைக் குளம், இளநீரில் எரியும் தீபம், புல்லுண்ட கல் நந்தி போன்ற செய்திகள் வியக்க வைக்கின்றன. கோதாவரி முகத்துவாரம், கங்காசாகர் தீவு, வசிஷ்டர் குகை போன்ற அரிதான இடங்களைப் பற்றியும் இந்த நூலில் கவனப்படுத்தியிருப்பது, ஆன்மிகப் பயணத்துக்குத் தயாராகும் பக்தர்களுக்குப் புதிய தரிசனத்தை நிச்சயம் கொடுக்கும்.
இறைவன் இருக்கிறான்? | மவ்லானா வஹீதுத்தீன் கான் தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி,
குட்வோர்ட் புக்ஸ், அலைபேசி: 9790853944.
அறிவியலின் துணை கொண்டு மதத்துக்கு எதிரான கருத்துகளைப் பலரும் பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆனால், அதே அறிவியலின் துணை கொண்டு மதத்துக்கு ஆதரவான கருத்துகளையும் தன்னுடைய பண்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்த நூலில் சாத்தியப்படுத்தி இருக்கிறார் மூல நூலாசிரியர். காலம்காலமாக நாத்திக வாதத்துக்கு அறிவியலைத் துணைக்கு அழைத்துக்கொள்ளும் போக்கு உள்ளது. அதே அறிவியலை மதம் சார்ந்த இறை நம்பிக்கைக்கும் பொருத்திப் பார்க்கிறது இந்நூல்.
Melakarthas - The Gems of Carnatic Music கர்னாடக இசையின் முத்துக்களான மேளகர்த்தா ராகங்கள் பாகம் 1; 1 முதல் 36 ராகங்கள் | வித்யா பவானி சுரேஷ்; ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ், தொலைபேசி: 044-2466 1661.
கர்னாடக இசையை படிப்பவர்களுக்கும் கச்சேரி செய்பவர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நூலாசிரியர் வித்யா பவானி சுரேஷுக்கு இசை மற்றும் நடனத் துறைகளில் இருக்கும் அனுபவம், இந்த நூலை எவரும் விளங்கிக் கொள்ளும் வகையிலான ஆங்கில மொழி நடையில் எழுதுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. கர்னாடக இசையில் தாய் ராகம், ஜனக ராகம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் 72 ராகங்களை மேளகர்த்தா ராகங்கள் என்பர். இவற்றில் 32 மேளகர்த்தா ராகங்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.
மேளகர்த்தா ராகமாக அழைக்கப்படுவதற்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும், அந்த ராகங்களின் ஸ்வரஸ்தானங்கள் எப்படியெல்லாம் அமைந்திருக்க வேண்டும், நம்முடைய முன்னோடிகள் மேளகர்த்தா ராகங்களை எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கையேடு போன்ற இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் வித்யா பவானி சுரேஷ். கர்னாடக இசையைப் பற்றித் தெரிந்துகொள்வ தற்கும் அதன் ராக அமைப்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும், ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கும் இந்நூல் உங்கள் கைவிரலைப் பிடித்து அழைத்துச் செல்லும்!
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் | பெரும்பற்றப்புலியூர் நம்பி; உரையாசிரியர்: முனைவர் மு. அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ், அலைபேசி: 94440 47790.
வலை வீசியது, வளையல் விற்றது, இசைவாதத்தில் வென்றது, மாணிக்கம் விற்றது, சங்கப்பலகை கொடுத்தது என சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களை உ.வே.சாமிநாதர் குறிப்புரையோடு வெளியிட்டிருப்பார். திருவிளையாடற் புராணத்தில் உள்ள 1753 விருத்தப் பாடல்களுக்குமான பொருள், விளக்கத்துடன், அர்த்தத்தையும் எளிய தமிழில் உரையாகவும் அனைவருக்கும் புரியும் மொழிநடையிலும் அளித்திருக்கிறார் உரையாசிரியர் மு.அருணகிரி. மிகப் பெரிய பணியை இறைவன் தனக்கு இட்ட கட்டளையாக எண்ணி பல்வேறு தகவல்களையும் சேகரித்து, திருவிளையாடற் புராணத்தின் சிறப்பை அனைவருக்கும் கொண்டுசெல்லும் வகையில் நூலினை முழுமையாக அளித்திருக்கிறார் நூலாசிரியர்.
சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும் | குடவாயில் பாலசுப்பிரமணியன்,
அன்னம், அலைபேசி: 75983 06030.
ஆலயங்களில் அருள் பொழியும் இறைவனை வழிபடுவதோடு அந்த ஆலயத்தின் தல விருட்சத்தையும் தீர்த்தத்தையும் வழிபடும் நெடிய மரபு நம்மிடையே உண்டு. இந்த நூலில் ஆலயங்களோடு ஆலயங்களின் திருக்குளம் குறித்தும் நூலாசிரியரின் ஆய்வுபூர்வமான அணுகுமுறை, தகுந்த சான்றுகளோடு எழுதப்பட்ட கட்டுரைகள் அணிவகுக்கின்றன. நூலாசிரியரின் ஆழங்கால்பட்ட அனுபவ அறிவும் பண்பட்ட பார்வையும் தெளிவான நீரோடை போன்ற எழுத்து நடையும் கட்டுரைகளைச் சித்திரம் போல் படிப்பவரின் மனத்தில் பதியவைக்கின்றன. திருக்குளத்தின் பெயராக இன்றைக்கு வழக்கில் இருக்கும் கமலாலயம்தான் திருவாரூர் ஆலயத்தின் பெயராகவே ஒரு காலத்தில் இருந்திருக்கிறது என்பது போன்ற வியப்பூட்டும் செய்திகள் இந்நூலில் ஆவணமாகியிருக்கின்றன.