ஆனந்த ஜோதி

பூமியில் சமாதானம் எப்போது?

செய்திப்பிரிவு

பேரழிவு ஆயுதங்கள் பெருகிவிட்ட இந்நாட்களில் உலகமே சமாதானத்தை விரும்புகிறது. ஆனால், ஆதிக்க மனப்பான்மை சமாதானத்தைக் கொன்றுவிடுகிறது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது அதன் சகோதர நாடான ரஷ்யா தன்னுடைய ராணுவத் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருக்கிறது. அங்கே மட்டுமல்ல; எங்கே நடந்தாலும் போரினால் ஏற்படும் அழிவுகளும் நஷ்டமும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதவை. மக்கள் எந்த அளவு துன்பத்தை அனுபவிப்பார்கள் என்பதை நாம் வரலாறு நெடுகிலும் பார்த்துப் பாடம் கற்றிருக்கிறோம். அப்படியும்கூட, உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை உலகத் தலைவர்களால் தடுக்க முடியவில்லை. உண்மையில் போரைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில், மத்தேயூ புத்தகம், அதிகாரம் 24இல் 6 மற்றும் 7ஆவது வசனங்களில் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, ‘போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள்; இருந்தாலும், திகிலடையாதீர்கள். இதெல்லாம் நடக்க வேண்டும், ஆனால் முடிவு அப்போதே வராது. ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்” என்று சொல்லியிருக்கிறார்.

அதேபோல் பழைய ஏற்பாட்டில், சங்கீதப் புத்தகம் 46ஆவது பாடல் இப்படிக் கூறுகிறது. “இந்தப் பூமியில் பரலோகத் தந்தை செய்திருக்கிற பிரமிப்பான காரியங்களைப் பாருங்கள். அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார்.

போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார். ஆயுதங்களால் விளைந்த காயங்களுக்கு அவர் மருந்திட்டுக் குணப்படுத்துகிறார்’.

இறைமகனாகக் கொள்ளப்பட்டிருக்கும் இயேசுவும் கடவுளின் ராஜ்யத்தைப் பற்றித்தான் அதிகமாகப் பேசினார். கடவுளை நோக்கி எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் கற்றுக்கொடுத்தபோது. “வானுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உங்களுடைய பெயர் தூயது என போற்றப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் இந்தப் பூமியிலும் வர வேண்டும். உங்களுடைய விருப்பம், வானுலகில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்று உருக்கமாக வேண்டினார்.

அது மட்டுமல்ல, “மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ‘கடவுளுடைய அரசாங்கம் என்பது வானுலகில் இருக்கும் ஓர் அரசாங்கம். அது கடவுளுடைய விருப்பத்தின்படி இந்தப் பூமியை மாற்றியமைக்கும். அப்போது, இங்கே சமாதானம் நிறைந்து சண்டைகள் இல்லாமல் போகும்’ என்கிற நம்பிக்கையைத் தருகிறது விவிலியம்!

தொகுப்பு: ஜெயந்தன்

SCROLL FOR NEXT