புனித விவிலியத்தில் இடம்பெற்றுள்ள பல தலைசிறந்த வாழ்வியல் நூல்களில் ஒன்று ‘நீதிமொழிகள்’. இதன் பெரும்பாலான பகுதிகளை பொ.ஆ.மு.1037 முதல் இஸ்ரவேல் தேசத்தை ஆட்சிசெய்த பேரரசன் சாலமோன் எழுதியதாக பைபிள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்நூலில் மொத்தம் 31 அதிகாரங்கள் இருக்கின்றன. நீதிமொழிகளை எடுத்து வாசித்தால் குடும்ப வாழ்க்கையில் உறவுகளுக்கு மத்தியில் உருவாகும் பிரச்சினைகளுக்கு அற்புதமான தீர்வுகளைத் தருகிறது.
எடுத்துக்காட்டாக, மன்னித்தலின் வழியே குடும்பத்தில் அமைதி எனும் அற்புதமான சாதனம் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் என்று எடுத்துக்காட்டுகிறது. கொலோசெயர் புத்தகம் அதிகாரம் 3-ல் 13ஆவது வசனம், ‘ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்’ என வழிகாட்டுகிறது. இந்த வசனத்தை நீதிமொழிகள் இன்னும் எளிதாக்கி நமக்குச் சொல்லித் தருகிறது. இனிய இல்லற வாழ்வில், கணவன் - மனைவி இருவரும் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அந்தத் தவறுகளைப் பெருங்குற்றமாகக் கருதிக்கொண்டு, அதை அப்படியே மனத்தில் வைத்து, ‘நீங்கள் எப்போதுமே இப்படித்தான். எதையும் சரியாகச் செய்ய மாட்டீர்கள். நான் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்க மாட்டீர்கள்’ என்று குத்திக்காட்டுவது சரியல்ல என்கிறது நீதிமொழிகள். அப்புத்தகத்தின் 19ஆவது அதிகாரம் 11ஆவது வசனம், ‘விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும். தன் மனத்தைப் புண்படுத்துகிறவர்களை மன்னிப்பதே அழகு’ என்று சொல்கிறது.
மன்னிப்பு என்கிற குணம் மனிதர்களாகிய நமக்கு யாரிடமிருந்து கிடைத்தது என்பதையும் நீதிமொழிகள் எடுத்துக்காட்டுகிறது. கடவுள் எப்போதுமே மன்னிக்கிறவராக இருக்கிறார் என்கிறது. ஆனால், மனிதர்களாகிய நாம், அவருடைய படைப்புகளாக இருந்தும் அவரைப் போல் எப்போதும் மன்னிப்பதில்லை. ஒருவர் செய்த தவறுகளை அவரோடு பேசித் தீர்க்க வேண்டும் என்று நீதிமொழிகள் சொல்கிறது. இது குடும்பத்துக்குள்ளும் பொருந்துகிறது. கணவன் - மனைவி இடையிலான சிறு பிரச்சினைகளைப் பேசித் தீர்க்காவிட்டால் மனக்கசப்பு வளரும். சிறிய பிரச்சினைதானே என மனத்தாங்கல்களை விட்டுவிட்டால் அவை பெருங்குற்றம்போல் மனத்துக்குத் தோன்றத் தொடங்கும். பிறகு, அவை மன்னிக்கவே முடியாததுபோல் தோன்றும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே பேசா மடந்தைகளாகிவிடுவதைப் பார்க்கிறோம். சக வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிகளைத் பொருட்படுத்தாத கல்நெஞ்சக்காராகக் கணவன் - மனைவி ஆகிய இருவருமே ஆகிவிடுகிறார்கள். அன்போ, பிணைப்போ இல்லாத ஒரு உறவுக்குள் சிக்கிவிட்டதாக இருவரும் நினைக்கத் தொடங்குகிறார்கள். அது உறவில் பெரும் விரிசலைக் கொண்டுவருகிறது. பிரச்சினைகளால் குடும்பத்துக்குள் வெறுப்பு தலைதூக்குவதற்கு முன் உங்களுக்குள் இருந்த அளவுகடந்த அன்பை நினைத்துப் பார்த்து, மீண்டும் அதே அன்பைக் காட்ட முயலுங்கள். முதன்முதலில் உங்கள் துணையிடம் உங்களைக் காந்தம்போல் கவர்ந்த பண்புகள் என்னென்ன என்று யோசித்துப் பாருங்கள். அதைத்தான் நீதிமொழிகள் ‘ஒருவருக்கொருவர் கூறும் ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியைப் பெற்றுகொண்டு இணக்கமாக இருங்கள். அப்போது நீங்கள் ஞானவான்கள் ஆகிவிடுவீர்கள். மன்னிப்பதே தலைசிறந்த ஞானம்’ என்கிறது.