கொங்கம்பட்டு ஏ.வி. முருகையனின் முன்னோர் நாகஸ்வர, தவில் இசையையும், விவசாயத்தையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். தந்தை விவேகானந்தனின் நிழலில் வளர்ந்தவர் முருகையன். ஐந்து வயதில் கணிதமும் கற்பனையும் கலந்த ராஜவாத்யமான தவிலின் மீது முருகையனுக்கு இருந்த ஆர்வத்தை அறிந்த அவருடைய தந்தை, சிறிதும் தயக்கம் காட்டாமல் முருகையன் தவிலிசை கற்கச் சம்மதித்தார்.
“இசை உணர்ச்சிகளின் வெளிப்பாடு, எங்கு பார்த்தாலும் அந்தக் காலத்தில் கோவில்களில் நாகஸ்வர தவிலிசையின் அதிர்வு, இசைக் கலைஞர்களின் மேல் மக்களுக்கு உள்ள மோகம், அவர்களுடைய அலங்காரமும் அவர்களின் வாசிப்புகளுக்குக் கிடைக்கும் பாராட்டுகளும் கைதட்டலும் என்னைப் போன்ற இளம் இசைக் கலைஞர்களுக்கு இசையின் மீது ஆர்வம் கூடியது.
பல நாகஸ்வர, தவில் மேதைகள் இருந்த காலத்தில் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. அவர்களுடன் வாசித்த அனுபவமே என்னை இந்த இடத்திற்கு அழைத்துவந்துள்ளது. முதல் குரு திருவையாறு அரசு இசைக் கல்லூரி தவில் விரிவுரையாளர் திருவிடைமருதூர் ரங்கசுவாமி. மத்திய அரசு வழங்கிய உதவித்தொகையுடன் வலையப்பட்டி சுப்பிரமணியம் அவர்களிடம் இரண்டு ஆண்டு சிறப்புப் பயிற்சி பெற்றேன். பிறகு குருவுடன் பத்து ஆண்டுகள் இரண்டாவது தவிலாகவும் பயணித்தேன். இவையே எனக்குத் தனி அடையாளம் கிடைக்கக் காரணமாக இருந்தது.
எனது குருவுடனும், இசைப் பயணத்தில் என்னை நல்வழிப்படுத்திய தவிலிசைக் கலைஞர்களான ஆச்சாள்புரம் சங்கரன், திருநாகேஸ்வரம் சுப்பிரமணியன், தஞ்சாவூர் வெங்கடேசன், மாயூரம் பாலு ஆகியோர் தொழில் சார்ந்த நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டது மறக்க முடியாத அனுபவம். அதனால்தான் பல நாகஸ்வரக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் வாசிக்கும் பாவங்களுக்கு ஏற்றாற்போல என்னால் வாசிக்க முடிகிறது. பத்ம விருது எனது இசைக்கருவிக்குக் கிடைத்த பெருமை” என்கிறார் முருகையன்.