அறிதொறும் அறிதொறும் அறியாமை புலனாவதும், அது தொலைவதும், பலப்பல அனுமானங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் உண்மைக்கும் இன்மைக்கும் இடையில் அலைவுறுவதுமாய் கற்றலும் அது தரும் அறிவும் வினையாற்றுகின்றன. அறிவாகவும் அறியப்படுவதாகவும் அறியாமையாகவும் விளங்கும் பிரபஞ்ச காரணன் ஈசன், அத்தனை எளிதில் தன்னைக் காட்டிக்கொள்வதில்லை.
அன்றாட நிகழ்ச்சிகளைச் சந்திப்பதற்கே கற்றவையும் பெற்றவையும் உதவியாக இருப்பதில்லை. கணப்பொழுது, பெரும்பிரளயம் நடக்கப் போதுமானதாக இருக்கிறது.அதிலிருந்து மீள்வதற்குதான் நீண்டகால அவகாசமும் புரிதலும் மனஓர்மையும் தேவைப்படுகின்றன.படைத்தவனோ, துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்’ விளையாடிக் கொண்டிருக்கிறான்.
கற்றலும் கற்பித்தலும் ஒன்றை ஒன்று சார்ந்த தனித்துவம் மிக்க இருபெரும் வெளிகள் ஆகும்.புலமையும் அனுபவமும்மிக்க ஆசானாக இருப்பினும்கூட ஒரு மாணவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் பயிற்றுவித்துவிட முடியாது. கற்க வேண்டிய பரப்பை வரையறுத்துவிடவும் முடியாது. ஆனால் கற்பதற்கும் புதிதாய்த் தேடுவதற்குமான ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கிவிட முடியும். ஒரு நல்ல ஆசான் இதைத்தான் செய்வார்.நெகிழ்வும் உறுதியும்மிக்க இந்த மனநிலையே ஆன்மபலத்தைத் தருகிறது. இப்படியான பக்குவம் கைகூடப் பெறாத நிலையைத்தான் மாணிக்கவாசகர் “கல்லாதப் புல்லறிவின் கடைப்பட்ட நாயேனை” (கண்டபத்து: 4) என்று குறிப்பிடுகிறார்.
ஒவ்வொரு ஆன்மாவும் தன் அக உலகுக்கும் புற உலகுக்கும் இடையிலான மாயப் பிம்பங்களை ஒழித்துவிட்டால் துன்பங்களில் உடலும் உள்ளமும் துவளாது.பிதற்றல்கள் தேவையில்லை. இத்தகு தேர்ந்தநிலை, பலப்பல தடைகளைத் தாண்டிவந்தால் கிடைக்கக்கூடும்.
எனக்கு நிகர் எவர் எனும் செருக்கைத் தருகின்ற செல்வம் எனும் அல்லல், கொல்லாமல் கொல்லும் வறுமை எனும் கொடிய நஞ்சு, இவற்றிற்கு முன்னதாக மெய்ப்பொருள் உணரும் வாய்ப்பினை நல்காத கல்வி எனும் பல கடல்கள், பயனற்ற சிறுசிறு முயற்சிகள் இவற்றிலிருந்து எல்லாம் தப்பித்துவிட்டால் வெறுப்பற்ற ஒரு பெரும்பொருளின் மீது நாட்டம் ஏற்படும்.
கல்வி எனும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் எனும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம்பு ஆய பல்துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவிலாததோர் பொருளது கருதலும்
என்கிறார் மாணிக்கவாசகர்.
வினைகளை அனுபவிப்பதற்கு என்று எடுத்த இந்த உடல் இற்று விழும்போது ஆன்மாவுடன் தேடிய பொருளும் கூடிய உறவுகளும் பின்செல்வதில்லை. உயிரோடு வாழ்ந்த காலத்தில் கொண்ட விரதத்தின் பயனும் ஞானமும் ஆன்மாவைப் பிரிவதில்லை.
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே
(திருமந்திரம்:144)
என்கிறார் திருமூலர். மாணிக்கவாசகரும் சுட்டி அறியக்கூடிய உற்றாரும், ஊரும், பேரும், மெய்ஞ்ஞானம் அற்ற கலைஞானம் உடையாரும், உடல் உயிர், ஆன்மா இம்மூன்றையும் நேர்க்கோட்டில் பொருத்தும் திறனற்ற கல்வியில் இனி தேடுவதும் தனக்கு வேண்டாம் என்கிறார்.பசுவின் மனம் போல் ஈசன் திருவடிகளில் கசிந்துருகும் மனம் வேண்டுகிறார்.
உற்றாரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே”
(திருப்புலம்பல்:3)