முல்லாவின் வீட்டில் ஓர் இரவு மூன்று திருடர்கள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்து அச்சத்துடன் எழுந்த முல்லா, இருட்டில் ஓடி, மூலையில் உள்ள பெரிய டிரங்குப் பெட்டியைத் திறந்து அதில் ஒளிந்துகொண்டார். திருடர்கள் வீடு முழுவதும் ஏதாவது பொருள் கிடைக்குமா வென்று தேடினார்கள். முல்லாவின் வீட்டில் ஒன்றுமே இல்லை. கடைசியில் மூலையில் இருந்த அந்தப் பழைய டிரங்குப் பெட்டியைத் திறந்தனர்.
அங்கிருந்து முல்லா வெளியே குதித்து வெளியே வந்தார்.
இந்த டிரங்குப் பெட்டியில் என்ன செய்கிறாய் நீ? என்று கேட்டான் ஒரு திருடன். முல்லா பணிவுடன் பதில் சொன்னார்.
“எனது வீட்டில் உங்களுக்கு எந்த மதிப்பான பொருளும் கிடைக்காது என்று எனக்குத் தெரியும். அதை நினைத்து வெட்க மாக இருந்தது. உங்களை எதிர்கொள்ள முடியாத அவமானத்தில் தான் இங்கே ஒளிந்துகொண்டேன்" என்றார் முல்லா.
பான் அபஹ் டீ
முல்லா தனக்கு வந்த வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கி உல்லாசக் கப்பல் பயணத்துக்குத் திட்டமிட்டு வந்திருந்தார். முதல் நாள் சக பயணியாக வந்திருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவருடன் மதிய உணவுக்காக அமர்ந்தார். உணவுக்கு முன்னர் அந்த பிரெஞ்சு மனிதர் முல்லாவுக்கு ‘பான் அபஹ் டீ’ என்று சொன்னார். முல்லாவோ, அவருக்குப் பதிலாக முல்லா நஸ்ரூதின் என்றார்.
அடுத்து இரவு உணவிலும் அந்த பிரெஞ்சுக்காரர் ‘பான் அபஹ் டீ’ என்று கூறினார். முல்லாவோ, முல்லா நஸ்ரூதின் என்று சொல்லி சாப்பிடத் தொடங்கினார். இப்படி மூன்று நாட்கள் கழிந்தன. முல்லாவுக்குக் குழப்பம் ஏற்பட்டது. அவர் இன்னொரு பயணியிடம் சென்று, முதல் நாளிலிருந்து அந்த மனிதர் தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்துகிறார். பதிலுக்குத் தானும் தன் பெயரைச் சொல்லியும் தினசரி சாப்பாட்டின் போது இந்த அறிமுகம் ஏன் நடக்கிறது என்று கேட்டார்.
அந்தப் பயணியோ முல்லாவின் அறியாமையை நினைத்துச் சிரித்து, ‘பான் அபஹ் டீ’ என்றால் ‘மகிழ்ந்து உண்ணுங்கள்’ என்ற அர்த்தமுடைய வாழ்த்து என்று விளக்கினார்.
முல்லாவுக்கு விஷயம் புரிந்து, அன்றைக்கு மதியம் விருந்தில் உட்கார்ந்தபோது அந்த பிரெஞ்சுக்காரரிடம் ‘பான் அபஹ் டீ’ என்றார். அந்த பிரெஞ்சுக்காரரோ, முல்லா நஸ்ரூதின் என்று பதில் அளித்தார்.
தொகுப்பு : ஷங்கர்