ஆதிசங்கரர் தனது பால்யத்தில் யாசகம் கேட்டு புறப்பட்டார். துறவிகள், யார் வீடு என்று பார்ப்பதில்லை. அவரின் செல்வநிலையை, கொடையை, அந்தஸ்தை கருத்தில் கொள்ளாமல் யாசகம் கேட்பார்கள்.
சங்கரர் சோமதேவர் என்பவருடைய வீட்டுக்குச் சென்று “பவதி பிஷாந்தேஹி” என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் வறுமையின் பிடியில் இருந்து வந்தார். பொருளைப் பெறுவதற்காக சோமதேவர் வெளியே சென்று விட்டார். வீட்டில் சோமதேவர் மனைவி தருவசீலை இருந்தார். பாலசங்கரரைப் பார்த்தவுடன் அவரது மனம் அங்கலாய்த்தது. ஈஸ்வர சொரூபத்தைக் கொண்ட அந்தச் சிறுவனைப் பார்த்து அதிசயித்தார், ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கு ஏதும் இல்லை. கொத்திப் பிடுங்கும் வறுமையும் சூரிய ஒளி ஒழுகும் கூரையும் என்றோ சமைத்த சுவடும் கொண்ட வீடு அது.
ஆடு நாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே.
என்கிறது சிவ வாக்கியர் பாடல். மிகுந்த வருத்தத்துடன் அந்த அம்மையார் சங்கரரைப் பார்த்து, “நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும்போது, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு வருந்துகிறேன் என்னை மன்னிக்க வேண்டும்” எனக் கேட்டார். ஆனால் சங்கரரோ, தாயே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமில்லை என்றால் பரவாயில்லை. அன்னத்துக்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடியது எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்” என வேண்டினார்.
தருவசீலை ஏதாவதொரு பொருள் கிடைக்குமா என்று தேடினார். ஒன்றும் இல்லை. என்றோ சேகரித்து வைத்த ஒரு நெல்லிக்கனி வாடிய நிலையில் இருந்தது. மிகுந்த தயக்கத்துடன் பால சங்கரருக்கு அந்த நெல்லிக்கனியை இட்டார்...
அதிதிக்கு அளித்த நெல்லிக்கனி
தாயே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயை விடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் இல்லை.. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த நெல்லிக்கனியால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமி தேவியாரை மனத்தால் நினைத்து தியானம் செய்து “கனகதாரா” ஸ்தோத்திரத்தைப் பாடி லட்சுமி தேவியாரை வழிப்பட்டார்.
தேவியும் சங்கரர் முன் தோன்றி முன்பு செய்த பாவத்தின் பயனாக, இந்தப் பிறவியில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்ற உண்மையைப் புலப்படுத்தினார்.
சங்கரரோ, மனமுவந்து பிச்சையிட்ட அந்தத் தாயின் வறுமையைப் போக்க வேண்டும் என்று வேண்டினார். கொடும் வறுமையிலும் திடமனத்துடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனியைப் பிச்சையாக இட்ட காரணத்தால், லட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அவர்களின் செல்வம் பெருகி வறுமை ஒழிந்தது...
கவியரசு கண்ணதாசன் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.