ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் என்று பாடுகிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி வணங்குவோம் என்கிறார்கள் ஒடிசா பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் புவனேஸ்வர் சென்றிருந்தபோது கானகத்தில் வசித்த பழங்குடியினர் வீடுகளைப் பார்க்கச் சென்றிருந்தோம், புல்வேய்ந்த அந்த வீடுகளுக்குக் கதவுகள் இல்லை. அதைப் பற்றிக் கேட்டபோது ஓடிப்போய் ஆள் உயரத்தில், நாணல் போல் இருந்த ஒற்றைப் புல்லை பிடுங்கிக் கொண்டு வந்து காண்பித்தார்கள். இதோ இதை கதவுபோல் குறுக்கே வைத்துவிடுவோம் வீட்டில் யாரு மில்லை என்று பொருள். புல்தான் எங்களைக் காக்கும் கடவுள் என்று அவர்கள் கீச்சுக்குரலில் சொன்னதை எங்கள் ஜீப் ஓட்டுநர் மொழிபெயர்த்தார். பழங்குடியினரின் இறை வழிபாடு என்பது அவர்களின் முன்னோர், இயற்கை, வாழ்க்கைமுறை மரபுகளோடு தொடர்புடையது. நாகரிக மனிதன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு மனிதக் கூட்டத்திலிருந்து வெகுதொலைவில் மானுடப் படைப்பின் முதற்கண்ணியாக அடர்கானகங்களில் தனித்து வாழ்பவரின் கடவுள் வேறொருவராகக் காட்சி தருகிறார்.
கல்லாக மரமாக நீத்தார் நினைவுகளாக அவர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டிருக்கிறார்.
ஒடிசாவில் வாழும் 62வகைப்பட்ட பழங்குடியினரில் அதிக மக்கள் தொகை கொண்ட 'கந்தா’ இனத்தவர் ஏறத்தாழ 14லட்சம் பேர் வசிக்கிறார்கள் இயற்கையை வழிபடும் இம்மக்களின் வழிபாட்டுச் சடங்குகள் இயற்கையை ஒட்டியே இருப்பதைக் காணலாம் நெற்றியிலும் உடம்பிலும் விபூதியும் குங்குமமும் பூசிக் கொள்கிறார்கள். இதற்குப் பட்டி என்றுபெயர். பஞ்சபூதங்களின். பல்வேறு வெளிப் பாடுகளுக்கும் பெண் அல்லது தாய் சார்ந்து பெயரிட்டு வணங்குகின்றனர். பூமாதேவி (தர்ணி பெணு) தான் அவர்களின் முதற் கடவள். சாருபெணு (மலைக்கடவுள்) சுகா பெணு (அருவிக் கடவுள்) பிஜூபெணு (மழைக்கடவுள்) நஜூபெணு (கிராமதேவதை) பிடேரி பெணு (மூதாதையர் வம்ச கடவுள்) இப்படி ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட பெணுகள் உள்ளனர். பிடேரிபெணு என்பது பிடாரி தெய்வத்தைக் குறிக்கக் கூடும். சடங்குகள் பலவும் தமிழகப் பூர்வகுடிகளின் சடங்குகளை ஒத்திருக்கின்றன. கடவுளாக நிற்கும் கல்லுக்கு முன்னால் படைக்கப்படும் மதுவிற்கு கள்ளு என்றே பெயர். ஒருவர் இறந்தபின் ஒப்பாரி வைக்கும் வழக்கமும்,உடலை சுடுகாட்டில் எரித்து நீரில் மூழ்கி சடங்குகள் செய்து, கறிவிருந்து வைப்பதும் தமிழகப் பண்பாட்டை ஒத்திருக்கிறது.
தென் அமெரிக்க பூர்வகுடி யினரிடம் பச்சிமோ என்ற பெண் தெய்வ வழிபாடு தமிழகத்தின் சிறுதெய்வ வழிபாட்டைச் சேர்ந்த பச்சையம்மன் வழிபாட்டை ஒத்திருக்கிறது. இது மரத்தையும், இயற்கையின் பசுமையையும் குறிக்கிற சொல்லாகவும் குறியீடாகவும் இருக்கிறது.
இயற்கைக்குள் ரகசியங்கள்
கார்லஸ் காஸ்டநேடா எழுதிய ‘டான் ஜூவானின் போதனைகள்’ என்ற புதினத்தில் தென் அமெரிக்கப் பழங்குடியினரின் வழிபாட்டுச் சடங்குகளின் உச்சாடனங்களுக்கு காஸ்டநேடா உட்படுத்தப்படுகிறார். இப்புதினம் பியோட் கொட்டை, மரங்கள், காக்கை, ஓணான் போன்ற உயிரினங்களின் விசித்திர மாந்திரிக சக்திகளை அறிமுகப்படுத்துகிறது.அறிமுகப்படுத்துபவர் சிவப்பிந்திய ஆதிவாசி கிழவரான ஒரு மந்திரவாதி. பிரளயங்களை உருவாக்குவதிலும் நோய் அலைகளை ஏவுவதிலும் மந்திரவாதிகள் சக்தி படைத்தவர்கள் என்று காட்டுவாசிகள் நம்பினார்கள். தமிழ்நாட்டின் நீலகிரி, ஏற்காடு, ஜவ்வாது மலை வாழ் மக்கள் வழிபாட்டு முறைகள் குறித்து பிலோ இருதயநாத் என்ற மானிடவியல் ஆய்வாளர் எழுதிய கட்டுரைகளும் புத்தகங்களும் பேசுகின்றன.
நீலகிரி படுகர் இன மக்களும் கோத்தகிரி பூர்வகுடியினரும் இறை வழிபாட்டை விடவும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். மக்களை தேடிச் செல்லும் மானுடவியல் ஆய்வாளர்கள், கானக ஆய்வாளர்கள் பிலோ இருதயநாத் போன்ற கட்டுரையாளர்கள் மலைவாழ் மக்களின் பொதுவான பண்பாக விருந்தோம்பலை குறிப்பிடுகின்றனர். தேயிலைத் தோட்டங்களுக்கு அவர்களை தேடி செல்லும்போதெல்லாம் பருகுவதற்கும் உண்பதற்கும் தமக்கு ஏதாவது கொடுத்த பின்னரே அவர்கள் உரையாடலைத் தொடங்கியதாகவும் தம்மைச் சுற்றி ஆடியபடியும் பாடிய படியும் தமது வருகையை கொண்டாடி மகிழ்ந்ததையும் குறிப்பிட்டு "விருந்தினரே அவர்களின் கடவுள், விருந்தோம்பலே அவர்களின் வழிபாடு" என்று புகழ்ந்திருக்கிறார்கள்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு என்று திருக்குறள் கூறும் விருந்தோம்பல் பண்பு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு. இதனை இன்றளவும் காத்துவரும் எளிய மனிதர்கள் மலைவாழ் மக்கள்.
சாமியாடிகளும் மூதாதையரின் தொல் மொழியும்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா வெங்கும் உள்ள பழங்குடியினரிடையே சாமியாடிகள் இருந்திருக்கிறார்கள். சாமியாடி உச்சகதியை அடையும் வேளையில் மொழிகளைத் தாண்டிய அவரது முழக்கம், மூதாதையின் தொல் மொழியின் சாயல்களை பெற்றுவிடும் என்று ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். முதன்முதலாக அப்பகுதிக்கு புலம்பெயர்ந்த ஒரு மனிதக் கூட்டத்தின் வலிகளை கூவித் திரியும் அவலம் பல தலைமுறைகளைத் தாண்டி சாமியாடிகளுக்கு வந்து சேர்கிறது.
தமிழ்நாட்டுப் பழங்குடியினரிடமும் ஆதிவாசிகளிடமும் காணப்படும் சிறுதெய்வ வழிபாடு சாமியாட்டம், காளி ஆட்டம் பற்றிய வழிபாடு சார்ந்த பண்புகளை உளவியல் கோணத்தில் அலசியும், ஆன்மிகத் தேடலில் பெண்களின் ஈடுபாடு குறித்தும் பல நுணுக்கமான செய்திகளை முன்வைக்கும் நூல் The cult of Angala parameswari in Tamilnadu. தமிழ்நாட்டில் அங்காளபரமேஸ்வரி வழிபாடு என்ற நூல் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வறிஞர் எவலின் மாசிலாமணி மேயர் என்பவரால் வெளியிடப்பட்டிருக்கிறது..
பழங்குடி மக்களிடையே சாமியாடிகளின் குரலில் அடிக்கடி எழுந்து மேல் வரும் சொல்லான "படிமத்தங்கா" சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழங்குடி மக்கள் நமது மரபின் தொடர்ச்சியாக வழிபாடுகளை மட்டுமின்றி வழக்கொழிந்த சொற் களையும் காப்பாற்றி வருகிறார்கள்.
திபெத்திய லாமாக்கள் வழிபாடுகளையும் தியானத்தையும் முன்நின்று நடத்துவதற்கு தகுதி படைத்தவர்களாக ஆவதற்கு அவர்களுக்கு கண் திறக்கும் சடங்கு எப்படிச் செய்யப்படுகிறது என்பதை தனது மூன்றாவது கண் என்ற நூலில் லோக்சாங் ரம்பா விவரித்திருப்பார். தஞ்சைக்கு அருகே அக்காலத்தில் மின்வசதியற்ற எங்கள் குக்கிராமத்தில் குறி சொல்லும் ஒரு பெண்மணி வசித்தார். ஒரு தாம்பாளத்தில் விபூதியைப் பரப்பி நடுவில் கற்பூரம் ஏற்றுவார். கற்பூர வெளிச்சத்தில் விபூதிப் பரப்பில் வட்டமாகச் சுழித்தபடி செல்லும் வரிவடிவங்களை எழுதி நடுநடுவே கொட்டாவி விட்டபடி அவற்றை வாசிப்பார். அவர் ஆருடம் சொல்லி முடிக்கும்வரை கற்பூரம் எரியும். பின்னர் அணையும். எழுதப் படிக்க அவருக்குத் தெரியாது.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayer@gmail.com