ஆனந்த ஜோதி

அந்த நிலவொளி இரவில்

வா.ரவிக்குமார்

நடனக் கலைஞர் டாக்டர் சொர்ணமால்யா கணேஷ், பழைமையான கலைச் செல்வங்களில் ஒன்றான சதிர் நடனம் குறித்து தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை செய்திருப்பதோடு அதை நிகழ்த்தி, அரங்கேற்றியும் வருகிறார்.

ஆலயங்களில் இறைவன் முன்பாக நடத்தப்பட்ட சடங்குகளின்போதும், திருவீதி உலாவின்போதும் ஆடப்பட்ட ‘வீதி சதிர்’ போன்றவற்றை மீட்டுரு வாக்கம் செய்து `அந்த நிலவொளி இரவில்’ என்னும் தலைப்பில் அண்மையில் தமிழ் கல்சுரல் அகாடமியின் ஆதரவில் நாரத கான சபா அரங்கில் அரங்கேற்றினார். சதிர் நாட்டிய வடிவம் பன்மைத்துவத்தோடு ஆடப்பட்டு வந்த தருணங்களை அழகாகக் காட்சிப்படுத்தியது. ``அந்திப் பொழுது என்றாலே அக வாழ்க்கைக்கு உரியது என்பதால் இப்படியொரு தலைப்பை நிகழ்ச்சிக்கு வைத்தேன்” என்றார் சொர்ணமால்யா ரசனையுடன்.

இன்றைக்கு நவீனமாக ஆடப்பட்டுவரும் பரதநாட்டியத்தின் தொன்மையான வடிவம்தான் சதிர். அதன் பாரம்பரியப் பெருமைகளையும் அந்த நாட்டிய முறைக்கு செழுமை சேர்த்த மேதைகளையும், அது கடந்து வந்திருக்கும் பாதைகளையும் வரலாற்றின் துணையோடு சொர்ணமால்யா நினைவுகூர்ந்தார்.

‘வீதி சதிர்’ என்னும் நடனத்தை புதுக் கோட்டை தேவதாசிக் கலைஞர்கள் வழிவந்தவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார் சொர்ணமால்யா. தேர் மல்லாரியின்போது நிகழ்த்தப் படுவது வீதி சதிர். தேர் மல்லாரியில் பொதுவாக சிறு தெய்வங்கள் உலா வருவதாகக் காட்சிப்படுத்த மாட்டார் கள். ஆனால் அன்றைக்கு நடந்த நிகழ்ச்சியில் அங்காள மாரியம்மனை வர்ணிக்கும் விருத்தத்தைப் பாடி, வீதி சதிர் நடனத்தில் பிரதான தெய்வமாக கொண்டுவந்தது முக்கியமான கலை நகர்வு.

சொர்ணமால்யாவிடம் நடனம் பயிலும் மாணவிகள் பத்மாசினி, ருக்மிணி, பூஜா ஆகியோர் `துரை சலாம்’ என்னும் நடனத்தை வழங்கினர். ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வழியாகவே நமக்கு சலாம் அறிமுகமாகியிருக்கிறது. அது அடுத்துவந்த நாயக்கர், விஜயநகர அரச பரம்பரையினரின் தர்பார்களில் எப்படித் தொடர்ந்தது என்பதும் இந்த சிறிய நடனத்தின் பின்னணியில் புரிந்தது.

தஞ்சை சரஸ்வதி மகாலில் இருக்கும் சுவடியில் இருந்த பாடலுக்கு தான் இசையமைத்து மீட்டுருவாக்கம் செய்து மேடையேற்றியதாகச் சொன் னார் சொர்ணமால்யா.

வீதி உலா வரும் தியாகேசர்

நாட்டியத்துக்கென்றே பிரத்யேக மாக தஞ்சை நால்வரால், பைரவி ராகத்தில் அமைக்கப்பட்ட பதவர்ணம் `மோகமான என்மீதில் நீ இந்த வேளையில்’ என்று தொடங் கும். இந்தப் பாடல் வீதி உலா வரும் தியாகேசரின் மீது ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்தும் சிருங்கார பக்தியை முதன்மைப்படுத்துவதாக அமைந்திருக்கும். “வீதி உலா வருகையில் உங்களின்மீது நான் மோகமான இவ்வேளையில் தியாகேசா நீங்கள் மோடி (என்னை கண்டும் காணாமலும் இருக்கலாமா?) செய்யலாமா?” என்ற வரிகளுக்கு சொர்ணமால்யாவின் அபிநயம் அந்தக் காலத்திய திருவாரூர் வீதிக்கே நம்மை அழைத்துச் சென்றது!

``சதிரில் இந்துஸ்தானி நாட்டியமும் இருந்தது என்பதை என் ஆய்வில் அறிந்தேன். அதையொட்டிய என்னுடைய தேடலில் இந்தப் பாடல் கிடைத்தது. திருவல்லிக்கேணியில் நவாப்பாக இருந்த சாதத்துல்லா கான் அரசவையில் பல பெண்கள் நடனக் கலைஞர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் `காஞ்சினி’ என்று அழைக்கப்பட்டனர்” என்று அடுத்த நடனத்துக்கான அறிமுகத்தை சொர்ண மால்யா வழங்கினார்.

தொடர்ந்து, காஞ்சினி ஒருவர் வடக்கில் துமிரி என்றழைக்கப்படும் ஒரு இசை வடிவத்துக்கு கதக்கும் சதிரும் சேர்ந்த ஒரு நாட்டியத்தைச் சித்தரித்து ஆடியது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்த நடனத்துக்கான பாடலை எழுதியிருப்பவர் மௌலானா ஃபக்கீர் ஹாகா வெள்ளூரி என்னும் சூஃபி ஞானி. அவர் இந்தப் பாடலை `டக்கினி’ என்னும் மொழியில் எழுதியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. காதலுக்கு வரையறையே கிடையாது என்பதை அர்த்தமாகக் கொண்டிருக்கும் இந்தப் பாடல், யார் மீது காதல் என்பதை சொல்லவில்லை. கடவுளின் மீதாகவும் இருக்கலாம், மனிதர்களின் மீதாகவும் இருக்கலாம், சகல ஜீவராசிகளின்மீதும் இருக்க லாம் என்பதுதான் பாட்டின் விசேஷம்.

மணலி முத்துகிருஷ்ணன் என்பவர் துபாஷாக இருந்தபோது அவரின் வீட்டில் ஒரு நடன நிகழ்ச்சி நடந்தது. அதற்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கவர்னராக இருந்த ஜெனரல் பிகட் தலைமை தாங்கினார். அங்கு கரூர் சிவராமய்யா தெலுங்கு, ஆங்கிலம் இரண்டு மொழி வார்த்தைகளையும் சேர்த்து அந்தக் காலத்திலேயே `தெங்கிலீஷில்’ ஒரு ஜாவளியை எழுதியிருக்கிறார்.

`Oh My lovely Lenana ஏலனே பொம்மனன்டி’ என்னும் அந்தப் பாடலுக்கான நடனத்தை சொர்ண மால்யா குழுவினர் அரங்கேற்றியது, சதிர் என்னும் நடனத்தின் பன்மைத் துவத்தை பறைசாற்றியது.

கலாசார சங்கமம்

விராலிமலை பாரம்பரியத்தில் கோயில் சதிரின்போது இசைக்கப்படும் நோட்டுஸ்வரங்கள் மேற்கத்திய இசை பாணியில் இருக்கும். அதற்கு குழுவினர் வழங்கிய நடனம், மேற்கத்திய பாணியில் அமைந்திருந்தது.

“இந்தியாவில் மன்னர்கள், ஆங்கிலேயர், முகமதியர்கள் எனப் பலரின் ஆட்சிகள் நடந்திருக்கின்றன. பல கலாச்சாரங்கள் இங்கு புழங்கி யிருக்கின்றன. அப்படிப்பட்டவற்றில் இருந்து சிலவற்றை எடுத்து கற்பனையால் மெருகேற்றித் தங்களுடைய கலாச்சார வடிவத்தில் அதைக் கொண்டு வந்திருக் கின்றனர் தமிழர்கள். இப்படி அந்தக் காலத்தில் ஆடப்பட்ட சதிர் நடனத்திலிருந்தும் சில விஷயங்களை எடுத்தாண்டிருப்பதையும் இந்த நிகழ்ச்சி களின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன்” என்கிறார் சொர்ணமால்யா.

வாய்ப்பாட்டு - அஜீஸ், நட்டுவாங்கம் - அனந்த, மிருதங்கம் - கணேஷ், புல்லாங்குழல் - அதுல் குமார், ஹார்மோனியம் – சந்திரசேகர் ஆகியோரின் சேர்ந்திசையால் சதிர் மேளம் என்னும் வாகனத்தில் ரசிகர்கள் இனிமையாகப் பயணித்தனர்.

படங்கள் உதவி: ஸ்மிருத்திகா சஷிதரன்

SCROLL FOR NEXT