கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., ஒரு தேசபக்தர்; செக்கிழுத்த செம்மல் என்றுதான் நமது பாடப்புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் ஒரு மிகச் சிறந்த தமிழ் அறிஞர். எண்ணிய மாத்திரத்தில் செய்யுள்கள் இயற்ற வல்லவர். தமிழ் இலக்கண இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், புராண இதிகாசங்கள், நீதி நூல்கள், வேதாந்த நூல்கள் ஆகியவற்றை ஆழ்ந்து பயின்றவர். தமிழ் ஆங்கிலம் என இருமொழிப் புலமை மிக்கவர். நம்மை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர் அரசை எதிர்த்ததால் கிடைத்த சிறைத்தண்டனையில் அவர் படைத்த தத்துவ நூல் தான் ‘மெய் அறம்’.
தத்துவ நாட்டம்
நூலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவோ என்று பாரதி மனம் வெதும்பிப் பாடியது வ.உ.சி.யைப் பார்த்துதான். வ.உ.சி.பாரதியாரை மாமா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவர்.
வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்த வ.உ.சி.க்கு இளமையிலேயே அவரது அகத்தில் மெய்ஞ் ஞானத் தேடல் ஏற்பட்டு விட்டது. அவரது தற்சரிதத்தில் ‘தத்துவ நூலினும் தமிழுயர் நூலினும் சித்தம் அமிழ்த்திச் சிந்தனை புரிவேன்’ என்று எழுதியிருப்பார்.
வறுமை வாட்டியபோதும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு செல்வமெல்லாம் அழிந்தபோதும் உலகமே அவரை பழித்தபோதும் கலங்காது நெஞ்சை நிமிர்த்தி அவர் நின்றதற்கு இத்தகைய தத்துவச் சிந்தனையை அவர் கைக்கொண்டதே காரணம்.
‘மெய்ப்பொருள் தொழுது, மெய்ப் பொருள் கண்டு, மெய்ப்பொருள் ஆசி விளங்கினேன் சிலநாள்’ என்று தற்சரித்திரத்தில் அவர் சத்தியப் பிரகடனம் செய்கிறார்.
வேதாந்த ஞானம் விரிந்தது
வ.உ.சி. திருக்குறளுக்கு எழுதிய உரை தமிழுக்கு அவர் தந்த தனிப்பெரும் கொடை. திருக்குறளின் பல்வேறு இடங்களை அவர் வாழ்வியலோடு தொடர்புபடுத்தி உரை எழுதியிருக்கிறார். பல்வேறு இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்திருக்கிறார். சிவஞான போதத்துக்கு அவர் எழுதிய உரையில் சூத்திரங்களுக்குத் தனிப் பெயரிட்டு எழுதியிருக்கும் விளக்க உரை ஆய்வு நோக்கில் ஆழமானது. மேலை நாட்டு தத்துவ ஞானி ஜேம்ஸ் ஆலனின் அறக் கருத்துக்களை அவற்றில் உளம் தோய்ந்து மொழிபெயர்த்திருக்கிறார். அகமே புறம், மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் முதலியவை அவரது மொழிபெயர்ப்பு நூல்கள்,
‘யான் என்னும் பற்றை விடுவதற்கு நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர் களோ அப்பொழுது மேன் மேல் வளரும் இன்பம் உங்கள்பால் வந்து சேரும்...ஆனால் இலாபத்தை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு ஒன்றை விடுவதைப் பார்க்கிலும் பெரிய மயக்கமாவது துன்பத்தைத் தரும் மூலமாவது வேறில்லை. வேண்டிய வற்றை விட்டுவிடுவதற்கும் நஷ்டத்தை அநுபவிப்பதற்கும் பிரியங்கொள்ளலே உண்மையான வாழ்விற்கு மார்க்கம்’
ஆன்மிகம், விதியின் மீதான நம்பிக்கை, சமயக் கருத்துக்கள் பலவற்றைப் பற்றியும் அவரது வேதாந்த விளக்கங்கள் பல்வேறு சஞ்சிகைகளில் அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்தன.
கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே, மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ் ஆகியன அவற்றுள் சில.
காணாமல் போன கையெழுத்துப் பிரதிகள்
வ.உ.சி. எழுதிய பத்திற்கும் அதிகமான நூல்களில் பல பணமில்லாததால் கையெழுத்துப் பிரதியாகவே இருந்து காணாமலே போயின. ஆயுளை நீட்டிக்கும் ஆறு, ஊழை வெல்லும் உபாயம், சிவ மதம், விஷ்ணு மதம், புத்த மதம், இஸ்லாம் மதம், கிறிஸ்துவ மதம், மனித மதம், முக்தி நெறி ஆகிய நூல்கள் கிடைக்காமலே போய்விட்டன.
வ.உ.சி. மரணப் படுக்கையில் இருந்தபோது எழுதிவைத்த உயிலில் தம்மிடம் எஞ்சியிருக்கும் சிதில மடைந்த பூர்விக வீடொன்றையும், சிறு காணி நிலத்தையும் கொண்டு தமக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டதைக் கேட்டு பைத்தியமான தனது தம்பிக்கு சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், இளம் வயதில் விதவையான தங்கைக்கு, தோட்டமும், அன்ன வஸ்திரத்துக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்றும் தமது கைவசமிருந்த சட்டப் புத்தகங்களை 200 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்றும் குறிப் பிட்டிருந்தார். மனைவி பெயரில் சொத்து ஒன்று 750 ரூபாய் அடமானத்தில் இருக்கிறது.
வரவேற்க ஆளில்லை
நாட்டுக்காக தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து ஆறு ஆண்டுகள் கொடுஞ்சிறை வாசம் அனுபவித்துவிட்டு விடுதலை பெற்று வ.உ.சி. வெளிவந்தபோது அவரை வரவேற்க சுப்பிரமணிய சிவாவைத் தவிர சிறைவாசலில் யாருமே இல்லை. எந்த சக்தி அவரை தேசப்பணியில் ஈடுபடுத்தியதோ அதே சக்தி அவரை புதுவைக்கு இட்டுச் சென்றது. அங்கே பாரதியார், அரவிந்தர், சிதம்பரம் பிள்ளை மூன்று பேரும் அளவளாவிப் பேசினர். அந்த சந்திப்பின் விசேஷம் என்னவென்று வ.ரா. குறிப்பிடுகிறார்.
மூன்றுபேரும் வானைப் பிளக்கும் படி இடிஇடியென்று சிரித்துக் கொண்டிருந்தார்களாம்.
சுற்றிவரும் பகையையும், சூழ நிற்கும் துன்பங்களையும், காத்திருக்கும் காலனையும் காலால் எற்றிவிடும் அந்த நகைப்பு கால காலங்களைத் தாண்டி நம் காதில் விழுகிறது!
(தேடல் தொடரும்)
தஞ்சாவூர்க்கவிராயர்
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com