தினமும் அவன் வருவான். சரியாகக் காலை ஐந்தரை மணிக்கு, ஆறரை வரை என் தோட்டத்தின் பூச்செடிகளின் கிளைகளிலோ வேலிக்கம்பிலோ வந்து அமர்ந்திருப்பான். எவ்வளவு சின்னஞ்சிறிய உடல் அவனுக்கு. செக்...செக்...ட்வீட் என்று அவன் அழைப்பான். நீண்டநேரம் அப்படி அழைத்தால்தான் அவன் தோழி விழித்தெழுந்து வருவாள். அவளுக்குப் பாட்டுப் பாடுவதைவிட, தன் தோழனின் முகத்தைப் பார்த்தபடி சிறகசைப்பதும் வாலாட்டுவதும்தான் பிடிக்கும். அவன் அமர்ந்திருக்கும் கிளையில் அமர்ந்து வட்டம் சுற்றுவாள், பறந்து உயர்வாள், சச்சரவிட்டுச் செல்வதுபோலப் போய்விடுவாள்.
திரும்பிவந்து ஆண்பறவையை உரசிக்கொண்டு அமர்வாள். அவன் பாடுவதை நிறுத்தும்போது மென்மையாக அவன் வாயோடு வாய் சேர்ப்பாள். லேசாகக் கொத்துவாள். மீண்டும் வட்டம் சுழல்வாள். அவன் உத்வேகத்துடன் பாடுவான் - செக்...செக்...ட்வீட்...ட்வீட்...ட்வீட்…
அப்போதெல்லாம் என் மேசையின் பக்கத்தில் ஒரு கூட்டாளி இருப்பாள். பணிவண்பும் அழகும் கொண்ட புஸ்ஸி என்னும் பூனை. அவள் வருவது காலையில் வழக்கமாகக் கிடைக்கும் பிஸ்கட்டுகளுக்காகவும் பாலுக்காகவும்தான். அவற்றை நான் மறக்காமல் கொடுப்பேன். அவள் சாப்பிட்டுவிட்டு நன்றிகாட்டி வெளியே செல்வாள். இன்று காலையிலும் அவள் பக்கத்தில் இருந்தாள்.
இன்று காலையில் குளித்துவிட்டு நாங்கள் காலைப் பிரார்த்தனைக்கு வந்தபோது பார்த்தது என்ன? எங்கள் அருமைப் பறவை, தினமும் பாட்டுப் பாடி எங்களை எழுப்பும் தோழன் சிதறிக்கிடக்கிறான். புஸ்ஸி வாயை நக்கிக்கொண்டு, அங்கே கிடந்த மென்சிறகுகளை மீண்டும் ஒருமுறை முகர்ந்து பார்த்தாள்.
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மாநிர் ரஹிம்
அல்- ஹம்துலில்லாஹிரப்பில் ஆல்அமீன்
அர்ரஹமான் - ர் - ரஹீம்.
பிரார்த்தனை இந்த இடத்துக்கு வந்தபோது துக்கத்தால் என் குரல் தடுமாறியது.
“ரஹிம்"
என் மனம் அந்த இடத்திலேயே ஒரு சுழலில் அகப்பட்டது போல,
"ரஹ்மாநிர் ரஹிம்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. கருணை வள்ளலும் கனிவு நிரம்பியவனுமான அல்லாஹூ தன் படைப்புகளான சிறு பறவையையும் அதை திருப்தியாகத் தின்ற புஸ்ஸியையும் ஒன்றுபோல நேசிப்பதன் விளங்காப் பொருள் பற்றி இன்று முழுதும் நான் தியானித்திருந்தேன்.
குழந்தைகள் வழக்கமான பிரார்த்தனையைச் சொன்னார்கள்.