கன்னி மரியாளின் திருமகனாய் இவ்வுலகில் பிறக்க விருக்கும் இயேசுவின் வருகைக்கு மக்களைத் தயார்படுத்துவதற்கு அனுப்பப்பட்டவர் தான் செக்கரியா, எலிசபெத் தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்த யோவான் ஆவார்.
எலிசபெத்துக்கு இறைவன் செய்த அற்புதம் பற்றி அறிந்ததும் அவரது உறவுப் பெண்ணாகிய மரியா விரைந்து போய் எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்தினார். எலிசபெத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. அவர் மரியாவுக்குக் கிடைத்துள்ள மகத்துவத்தைப் புரிந்துகொண்டு அவரை 'என் இறைவனின் தாய்' என்றும் 'பெண்களில் ஆசி பெற்றவர்' என்றும் மனதாரப் பாராட்டி வாழ்த்தினார்.
"இறைவனை நினைத்து என் உள்ளம் பேருவகை கொள்கிறது. அவரைப் போற்றி என் மனம் அவர் பெருமையைப் பாடுகிறது" என்று மரியாள் பாடுகிறார்.
பணத்தால், பதவியால், ஆணவத்தோடு செயல் படும் மனிதர்களுக்கு அச்சத்தையும், தாழ்நிலையில் இருந்து தினமும் வாடும் ஏழை எளிய மக்களுக்கு எழுச்சியும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய சில வரிகள், மரியாள் மனமகிழ்ந்து பாடிய அப்பாடலில் வருகின்றன. "செருக்குற்றவரை இறைவன் சிதறடிப்பார். வலியவரை அவர் அரியணையில் இருந்து தூக்கி எறிவார். தாழ்நிலையில் இருக்கும் எளியோரை உயர்த்துவார்.
செல்வந்தருக்கு ஏதும் தராமல் வெறும் கையராய் அனுப்பிவிட்டு, இறைவன் வறியோரை நலன்களால் நிரப்புவார்" என்ற வரிகள் மரியாள் பாடிய பாடலில் உள்ளன. அந்தப் பாடல் வரிகள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் வரலாற்றில் அவ்வப்போது நிஜமாகி, பசித்திருக்கும் எளிய மக்களின் இதயங்களில் நம்பிக்கையை வளர்த்துள்ளன. தங்கள் நிலையை உணராத செல்வந்தர்களையும் தங்கள் பசியைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்களையும் அரியணையில் இருந்து அகற்றுமாறு, அவர்களை மனமுருகி நம்பிக்கையோடு மன்றாட வைத்துள்ளன.
வானதூதர் பரிந்துரைத்த பெயர்
மூன்று மாதங்கள் தங்கியிருந்த பின்னர் மரியாள் வீடு திரும்ப, எலிசபெத் தன் மகனைப் பெற்றெடுத்தார். குழந்தைக்குப் பெயர் சூட்டும் நாள் வந்தபோது, உறவினர்கள் ஏதேதோ பெயர் சொல்ல, தாய் எலிசபெத் தன் மகனுக்கு 'யோவான்' எனப் பெயரிட வேண்டும் என்கிறார்.
தன் கணவர் செக்கரியாவுக்கு ஆல யத்தில் நிகழ்ந்ததை அவர் மனைவி எலிசபெத் தெரிந்துகொண்டதுபோல, மரியா கருவுற்றிருப்பது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த யோசேப்புக்குத் தெரிய வந்தது. ஆனால், மரியா கருவுற்றிருப்பதற்குப் பின்னால் கடவுளின் திட்டம் இருப்பதையும், வானதூதர் வந்து அதனை அறிவித்ததையும் யோசேப்பு அறியவில்லை. கருவுற்றிருப்பது மட்டுமே அவருக்குத் தெரிய வந்ததால், என்ன நடந்திருக்கலாம் என்று எல்லா மனிதரையும் போலவே யோசித்தார்.
அன்றைய பாலஸ்தீனத்தில் பெற்றோர், பெரியோர் பேசி ஏற்பாடு செய்து நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. ஆனால் நிச்சயிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் முன்பு போலவே தங்கள் இல்லங்களில் தனித்தே வாழ்ந்தனர். சில மாதங்கள் கழிந்த பிறகு, பெரும்பாலும் ஓராண்டு கடந்த பிறகே திருமணம் நடந்தது. அதன்பிறகே, மணமகனின் இல்லத்துக்கு மணமகள் செல்ல, அவர்களின் தாம்பத்திய வாழ்வு தொடங்கியது. நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடக்கும் முன்பு பெண் கருவுற்றால், அவளை ஊருக்கு வெளியே இழுத்துப் போய் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசேயின் சட்டம். வேறு ஒரு ஆணுடன் கொண்ட உறவால் வேறொரு ஆணுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் கருவுற்றால், அவளை விவாகரத்து செய்யவும் இந்தக் கடும் தண்டனையைக் கோரவும் ஆணுக்கு உரிமை இருந்தது.
மரியா கருவுற்றதற்கும் தனக்கும் தொடர் பில்லை என்னும் நிலையில், 'தன்னை விட அதிகமாக வேறு யாரையோ மரியா நேசித்திருக்க வேண்டும். அது உண்மை என்றால் நிச்சயதார்த்தம் நிகழும் முன்பு தன்னிடம்கூட அதை ஏன் அவள் சொல்லவில்லை? அன்பும் அருளும் நிறைந்த மிக நல்ல பெண்ணல்லவா மரியா? அவள் மீது தான் கொண் டிருந்த பேரன்பிற்குத் துரோகம் இழைக்க அவள் ஒருபோதும் இசைந்திருக்க மாட்டாளே!...' என்பது போன்ற எண்ணங்கள் சுற்றிச்சுற்றி வந்து யோசேப்பின் மனதை நோகடித்தன.
ஆனால் இதமான அன்பும் இரக்கமும் கொண்ட யோசேப்பு இந்த வேதனை யாவையும் புறம்தள்ளிவிட்டு, மரியாவுக்கு உடல் சார்ந்த, உளம் சார்ந்த எந்தப் பாதிப்பும் இல்லாமல், யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் அவரை விலக்கிவிடத் தீர்மானித்தார். தன்னை நம்பி அன்பு செய்வோரை இறைவன் எப்போதும் கைவிட்டதில்லை. எனவே வானதூதர் மூலம் நடந்ததை, தான் நடத்தியதை இறைவன் யோசேப்புக்கு கனவில் சொல்ல, ஒரே கணத்தில் மரியா, யோசேப்பு இரண்டு பேரின் கவலைகளும் நீங்கின.
அவர்கள் மட்டுமே அறிந்த உண்மைகள் ஊருக்குத் தெரியும் முன்பே திருமணம் நிகழ்ந்து மரியாவை தன் மனைவியாக யோசேப்பு ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர், ஆழ்ந்த அன்போடும் அக்கறையோடும் ஒரு கணவர் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் அவர் கருத்தாய் நிறைவேற்றினார்.
தன்னைவிட வயதில் இளைய மரியாவின் நம்பிக்கையையும் அவருக்கு இறைவன் தந்த அரும்பேற்றி னையும் நினைத்து, மகிழ்ந்து வாழ்த்திப் பாராட்டும் பெருந்தன்மை எலிசபெத்துக்கு இருந்தது. வலியையும் கசப்பையும் ஒதுக்கிவிட்டு, தான் அன்பு செய்த பெண்ணுக்கு யாராலும் எந்தவொரு சிறு துன்பமும் நிகழாமல் பார்த்துக்கொள்ளும் பெருந்தன்மை யோசேப்புக்கு இருந்தது.
இவர்கள் இருவரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்.
(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com