உடல் ஒரு யந்திரம். அதனை இயக்கும் சூத்திரக் கயிறு மனம். ஓயாது அலை பாயும் மனத்தின் வசம் உடல் சிக்குண்டிருக்கிறது. உயிராகிய மனத்தை ஓரிடத்தில் உட்காரப் பணித்துவிட்டால் வாழ்தல் வசப்படும். தம் வசமின்றி வாழும் மனிதரை உய்விக்கவே மகான்கள் தோன்றினர். பேச்சொழிக்கும் வழிகாட்டி பிரம்மம் உணர்த்தினர். சொல்லை மந்திரமாக்கி ஓதினர். மெளனித்து அமர்ந்து தமது ஆன்மிக ஆற்றலால் சொல்லுக்கு உருவேற்றி மந்திரச் சொற்களை உருவாக்கினர்.
இத்தகைய மந்திரச் சொற்கள் இதி காசங்களிலும், இலக்கியங்களிலும் பக்திப் பனுவல்களிலும் பரவிக் கிடக்கின்றன. வாசிப்போருக்கு அவை வார்த்தைகளை மீறிய அனுபவத்தைத் தருகின்றன.
‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச்சுதடி’ என்ற வள்ளலாரின் பாடலில் வருகிற இந்த மந்திரச் சொற்கள் ஞானவெளியில் நம்மையும் நடமிடச் செய்யும் வல்லமை கொண்டவை.
கம்பராமாயணத்தில் குகன் கூறுவதாக அமைந்த பாடலில் வரும் ‘தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?’ என்பது நட்பின் மந்திரமாகய் நமக்குக் கிடைக்கிறது.
மந்திரம் போல் வேண்டுமடா
நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குள் வந்த பாரதியின் முகமெல்லாம் கறுத்திருந்தது. எங்கே போயிருந்தீர்கள் என்று செல்லம்மா வினவியபோது ‘மந்திரச் சொல் தேடி மாடிக்குப் போயிருந்தேன்’ என்கிறான் பாரதி.
“மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம்
மதமுறவே அமுத நிலை கொண்டெய்தி”
‘காற்று’ வசன கவிதை பற்றி கு. ப. ராஜகோபாலன் எழுதுகிறார்: "கந்தன் வள்ளியம்மை வியவகாரங்கள் பாரதி சமாதி போன்ற ஒரு நிலையில் கண்டவை என்று எனக்குத் தோன்றுகிறது. முடிவில் கவி ‘நமஸ்தே வாயோ த்வமேவ பிரத்யக்ஷம் பிரம்மாஸி’ என்ற சுருதி வாக்கியத்தைச் சொல்லும்போது எனக்குப் புல்லரிப்பு ஏற்படுகிறது. இந்தக் காட்சியைப் படிக்கும்போது வேதரிஷிகளின் நினைவும் சித்த பருஷர்களான நீட்ஷே, வால்ட் விட்மன் நினைவும் எனக்கு வருகிறது. வெம்மையும் தண்மையும் பிரகிருதியும் புருஷனும் போலக் கலந்து வரும் நிலைமையில் இந்த உயர்ந்த வாக்குப் பிறக்கிறது”.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நாலே வரிகளில் தாம் எழுதப்போகும் காவியம் முழுமையும் சொல்லால் ஆன ஒரு மந்திரச் சிமிழுக்குள் அடைத்துத் தந்துவிடுகிறார்.
‘அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாவதும்
உரைசொல் பத்தினியை
உயர்ந்தோர் ஏத்தனும்
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்று
நாட்டுதும் யாமே
பாட்டுடைச் செய்யுள்’
திருவள்ளுவர் வாக்கிலே ‘சொல்லேர் உழவர்’, ‘வெல்லும் சொல்’ என்பது போல மந்திரச் சொற்கள் பல மின்னித் தெறிக்கின்றன.
உலகத்தின் பழம்பெரும் மொழிகளான தமிழ், ஹீப்ரு, சமஸ்கிருதம் நீங்கலாக வேறெந்த மொழியினும் மந்திரச் சொற்களைக் காண்பதற்கில்லை. மலைகளிலும் அடர்ந்த கானகங்களிலும் வாழும் தென் அமெரிக்க பாபுவோ நியூகினி மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் வாழும் ஆதிவாசிகளின் மொழிகள் மந்திரச் சொற்களால் ஆனவை என்பதற்கு சான்றுகள் உள்ளன. Teachings of DonJuan என்ற ஆங்கிலப் புனைவு நூலின் ஆசிரியர் கார்லஸ் காஸ்டநாடா ஒரு தென் அமெரிக்க பூர்வ குடியினமான செவ்விந்திய முதுபெரும் கிழவரிடம் பெற்ற அனுபவங்களும், சொற்களின் உச்சரிப்பில் அவர் செய்து காட்டிய அற்புதங்களும் பிரமிக்க வைக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சாகித்ய அகாதமியால் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு இந்திய கவி சம்மேளனத்துக்குச் செல்ல நேரிட்டது.
குவாஹாத்தி விமான நிலையத்திலிருந்து கொட்டும் மழையில் ஒரு பழைய ஜீப்பில் மலைப்பாதையில் பயணித்த அனுபவம் பயங்கர அழகுடன் அமைந்தது. எங்களுடன் ஒரு பூர்வகுடி ஆசாமி பாடிக்கொண்டே வந்தார். அவர் பாடிய பாடலை நண்பர் மொழிபெயர்த்துச் சொன்னார்.
‘ஒரு கையில் மின்னல்! ஒரு கையில் மழை! கண்ணே நீ எங்கிருக்கிறாய்? என்பது அந்த வரிகளில் ஒன்று.
மழையில் காதலியைக் கானகத்தில் தொலைத்த காதலனின் புலம்பல். யார் எழுதியது என்றேன். நான்தான் என்றார் வெட்கத்துடன். மழை பெய்யும் அந்த இரவில் அந்த ஆதிவாசி இளைஞனின் பாடல். புரியாத மொழியில் இருந்தாலும் உடலைச் சிலிர்க்கவைக்கும். அந்தக் குரலின் ஏக்கமும் பாவமும் அவன் உணர்வுகளைப் புரியவைத்தன. காதலின் மந்திர உச்சாடனமாய் இன்றளவும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
(தேடல் தொடரும்)
தஞ்சாவூர்க்கவிராயர்
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com