ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: உமையொரு பாகன்

ஓவியர் வேதா

மாமலை மங்கை ஓர் பால் குறியுடையன்" என்று அர்த்தநாரீஸ்வரர் திருமேனியைத் தனது திருப்பூந்துருத்தி முதலாம் பதிகத்தில் பாடுகிறார் அப்பர் ஸ்வாமிகள். தஞ்சை -திருக்கண்டியூர் சாலையில், திருக்கண்டியூருக்கு அருகில், ஸப்த ஸ்தான தலங்களில் ஒன்றான திருப்பூந்துருத்தி திருத்தலத்தில் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பின்புறம் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில் [ கோஷ்டத்தில்] மேற்கு திசை நோக்கியவண்ணம் அருள்பலிக்கிறார்.

இவர் ரிஷபத்தின் தலை மீது வலது கரத்தை ஊன்றியபடி சாய்ந்த நிலையில் நின்று இருக்கும் பாங்கே மற்ற அர்த்தநாரீஸ்வரர் திருவுருவங்களில் இருந்து மாறுபடுகிறது. சொக்கவைக்கும் அழகில் சொக்கேசனாக உமையொருபாகனாக காட்சியளிக்கிறார். ஆண்மையின் கம்பீரமும், பெண்மையின் நளினமும் வெளிப்படுகின்றன. வித்தியாசமான சடா முடியும், சிவனின் காதில் மகர குண்டலமும், உமையின் காதில் குழையும் மார்பிலும், கழுத்திலும் உள்ள அணிமணிகள் ஆணுக்குரியனவும், பெண்ணுக்குரியனவும் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன.

அணிந் துள்ள முப்புரி நூலில்கூட உமையின் பாகத்தில் மணிகளைப் போலவும், மார்புக்கு கீழ் சாதாரண நூலாகவும் காணப்படுகிறது. சிவனின் மேல் கரத்தில் மழு உள்ளது. கீழ்க் கரத்தை ரிஷபத்தின் தலை மீது ஊன்றி, சாய்ந்த நிலையில் இடுப்பைச் சற்று ஒசித்து நிற்கும் அழகோ அழகு. அன்னை தன் கரத்தை சாய்ந்த இடுப்பின் மீது ஒயிலாக வைத்திருக்க, கையில் உள்ள நீலோற்பலம் மலர் நேராக இல்லாமல் அவள் தோள் மீதே சாய்ந்தபடி இருப்பது வசீகரிக்கிறது. அன்னையின் ஆடை அமைப்பும், வஸ்திரக் கட்டும் மிகவும் அற்புதம்.

ரிஷபம்கூடத் தலையை சற்று திருப்பி நிற்கிறது. அதன் மீது ஒய்யாரமாக சாய்த்து நிற்கும் கடவுளின் கோலத்தைக் கற்பனை செய்த அந்த முகம் தெரியாத சிற்ப கலைஞனையும், படைப்பாளிகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மன்னர்களையும் நெஞ்சார வாழ்த்தத் தோன்றுகிறது. இந்தச் சிற்பம் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் வடிக்கப்பட்டது என்று முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

SCROLL FOR NEXT