ஆனந்த ஜோதி

அகத்தைத் தேடி 70: தரங்கம்பாடியும் தன்மவழியும்!

தஞ்சாவூர்க் கவிராயர்

தரங்கம்பாடி கடற்கரை ஓரமிருக்கும் டேனிஷ் கோட்டைக்கு 1706-ம் ஆண்டு வாக்கில் மறைப்பணியாளராக வந்திறங்கிய ஸீகன்பால்கு, தமிழகத்தை நாகரிகம் அடையாத மக்கள் கூட்டம் வாழுமிடம் என்றுதான் நினைத்தார். ஆனால் நம்ம ஊர் கோவில் களையும் கலைகள், ஓலைச்சுவடிகளில் அவர் கண்ட இலக்கியத்தின் உச்சங்களை எல்லாம் பார்த்துத் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டார்.

தமிழரின் அற ஒழுக்கமும் பண்பாட்டு விழுமியமும் கிரேக்கர்களுக்கும், ரோமானியர் களுக்கும் இணையானவை என்று உலகுக்கு அறிவித்தார்.

ஒரு அச்சுக்கூடத்தைச் சொந்தமாக வைத்திருந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷின் பேச்சிலிருந்துதான் ஸீகன்பால்குவின் இன்னொரு பரிமாணத்தைத் தெரிந்து கொண்டேன்.

“தமிழர்களின் அறக்கொள்கைகளையும் கிறித்தவர்களின் அறக் கோட்பாடுகளையும் இணைத்து தன்மவழி என்ற அறநூலினை அவர் உருவாக்கினார். ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட அந்நூல் இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை”.

கண்டேன் தன்மவழியை

தஞ்சை ப்ரகாஷ் மறைந்து இருபதாண்டுகள் கழித்து ஒருநாள் தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத் துறையின் விற்பனைக் கூடத்தில் ‘தமிழ் கிறித்தவ அறம் ஸீகன்பால்கு தன்மவழி’ என்ற நூல் இருப்பதைப் பார்த்தேன். ஜெர்மனியின் பிராங்கே நிறுவன ஆவணக் காப்பகத்தில் ஓலைச்சுவடி வடிவத் தில் இந்நூல் இருந் தது. இதைக் கண்டு பிடித்த தமிழரான பேராசிரியர் பொ. டேனியல் ஜெய ராஜ் அதை அப்படியே படியெடுத்து, 2017-ல்பிராங்கே நிறுவன நிதி உதவியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி வெளியிட்டிருக்கிறார்.

தமிழரின் அறநெறிகளையும், கிறித்தவத்தின் அறக்கோட்பாடுகளையும் ஒன்றிணைத்து ஸீகன்பால்கு படைத்த நூல்தான் தன்ம வழி. இந்நூலில் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாமர மக்கள் பேசிய கொச்சைத் தமிழையும் அக்கால இலக்கணம் மற்றும் எழுத்து முறையையும் தெரிந்து கொள்ளலாம்.

ஓலைச்சுவடியில் உள்ளபடியே உரைநடை அச்சிடப்பட்டு அதன் கீழே அடிக் குறிப்பாக அதனை வாசிக்க எளிதான வாக்கியங்களில் எழுதியும் அக்கோட்பாடு களுக்கு தொடர்புடைய தமிழ் அற நூல்களின் வரிகளை எடுத்துக்காட்டி இருப்பது தன்ம வழியின் தனிச்சிறப் பாகும்.

தன்மவழியில் “ஞானத்திலே தெளிஞ் சிருக்கிற பெரியவர்கள் சொன்ன புத்தியை கேள்” என்று கூறிவிட்டு அது தொடர்புடைய திருக்குறளைக் கொடுக்கிறார். “அறியவற்றுளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்”. பின்னர் கொன்றை வேந்தனை உதாரணம் சொல்கிறார், மூத்தார் சொல் வார்த்தை அமிர்தம் என்று.

தன்மவழியில், ‘லோகத்ததா ருடைய மயக்கத்தை அறிஞ்சு தள்ளிப்போடு’ என்று சொல்லிவிட்டு, அறநெறி சாரத்திலிருந்து, “பிறப்பு இறப்பு மூப்புப் பிணியென்று இந்நான்கும் மறப்பர் மதியிலா மாந்தர்” என்று காட்டுகிறார்.

தன்மவழி வழியாக அவர் சொல்லும் சில செய்திகள் இவை.

உலக நன்மைகளுடைய அற்பத்தனத்தை அதிகமாய் விசாரியாதே

நல்ல சாவாய்ச்சாக எப்போதும் ஆயத்தமாய் இரு

உச்சித வசனங்களுள்ள ஞானம் பொஷத்தகங்களை வாசிக்கவும் கேட்கவும் ஆசையாய் இரு.

அருட்பணி ஆற்ற வந்த ஸீகன்பால்கு தமிழ்ப் பண்பாட்டுக்கும் மொழிக்கும், இலக்கியத்துக்கும், வாழ்வியலுக்கும், ஆன்மிகத்துக்கும் செய்திருக்கும் முன்னெடுப்புகள் சிறப்பு வாய்ந்தவை.

தமிழ் மொழியைக் கற்க திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மணலில் சிறுவர்களோடு சேர்ந்து கைவிரல்களால் எழுதி எழுத்துக் களை எழுதக் கற்றுக்கொண்டார். போர்த்துக்கீசிய மொழி தெரிந்த அழகப்பன் என்பவர் மூலம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். மக்களுடன் உரையாடி அவர்க ளோடு ஊடாடி அவர்கள் பேசிய கொச்சை மொழியை உள்வாங்கிக் கொண்டார் ஸீகன் பால்கு. அந்தக் கொச்சை அவரது தன்மவழியில் உண்டென்றாலும் அவரது ஆன்ம ஞானம் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவது.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

SCROLL FOR NEXT