“கல் புன்னகைக்குமா ? புன்னகை என்றல் காதல் கசியும் புன்னகை அல்ல, வெற்றிக் களிப்பில் விரிந்த புன்னகை அல்ல, இதழோரத்தில் ஏளனம் சிந்தும் இகழ்ச்சிப் புன்னகை அல்ல, நாணிச் சிவந்த முகத்தில் ஓடிக் கடந்த புன்னகையும் அல்ல, மன நிறைவில் மலர்ந்த புன்னகை.
ஆயிரம் பேருக்குச் சோறு போட்டு அவர்கள் பசியாறுவது கண்டு மனம் மகிழ்ந்து உதிர்க்குமே ஒரு புன்னகை. அந்தத் தாய்மை மிளிரும் புன்னகை. அப்படி ஒரு புன்னகையை பார்க்க வேண்டுமானால் நீங்கள் அன்னபூரணியை சந்திக்க வேண்டும்.” என்கிறார் எழுத்தாளர் மாலன். ஆம், அந்த அன்னபூரணியைச் சந்திக்க நீங்கள் கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோயிலுக்கு வர வேண்டும்.
திருக்கோயிலின் அலங்கார மண்டபத்தில் அமைந்துள்ள இந்த அமரச் சிற்பம், மந்தகாசம் தவழும் முகமும், கருணை பொழியும் கண்களும், வலதுகரத்தில் செந்தாமரையும், இடது கரத்தில் வேலைப்பாடுகளுடனும் அமைந்த அழகிய கலசமும், கழுத்திலும், மார்பிலும், இடையிலும் ரத்தின மணிகளால் ஆன மலைகளும், மதி மயக்க, இடையைச் சற்றே ஒடித்து நிற்கும் பாங்கே தனி அழகு. இந்தச் சிலையை செதுக்கிய சிற்பியின் கற்பனையையும், அபார திறமையையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
நேரில் சென்று பார்த்து ரசித்தால்தான் முழுமையாக உணரமுடியும். கையில் இருக்கும் கலசத்தை தட்டி பார்த்தால் காலி பாத்திரத்தை தட்டும் ஓசை ஏற்படுகிறது. சிற்பத்தின் கிரீடத்தின் மேல்பகுதியைத் தட்டினால் பாதி நிறைந்த பாண்டம் போல் ஓசை கேட்கிறது.கிரீடத்திற்கும் தலைக்கும் இடையே உள்ள இடைவெளி என சிந்தித்திருக்கிறான் பெயர் தெரியாத அந்தச் சிற்பி. அம்மனின் கை விரல்கள், பாதத்தின் விரல்கள்,அதில் காணப்படும் நகங்கள் என அனைத்தையும் துல்லியமாக வடித்துள்ளான் அந்தக் கலைஞன். சிலை இருக்கும் இடமே ஒரு தெய்விக அருள் நிறைந்த இடமாகத் தோன்றுகிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் (1145 - 1173) ராஜராஜசோழனின் பேரன் இரண்டாம் ராஜராஜன் கட்டிய திருக்கோயில் இது.