ஆனந்த ஜோதி

இயேசுவின் உருவகக் கதைகள் 58: பணிவிடைக்குத் தயங்காத அன்பு

எம்.ஏ. ஜோ

இயேசுவின் வாழ்வில் முக்கியமான தொரு நாளில் அவரது சீடர்கள் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்றை இயேசு செய்த பிறகு அவர்களுக்கு ஒரு கட்டளையும் இட்டார்.

யூத மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடிய ‘பாஸ்கா’ எனப்பட்ட பெருவிழாவை இயேசுவும் அவரது சீடர்களும் ஒன்றுசேர்ந்து கொண்டாடினர். அவர்கள் உண்டு முடித்த பின்பு அவர் செய்ததுதான் அவரது சீடர்களின் மனதில் பெரும் வியப்பையும் சிறிது குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இயேசு பந்தியில் இருந்து எழுந்து, ஒரு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த சீடர்களுக்கு பேரதிர்ச்சி!

முன்பொரு நாள் ஒரு பரிசேயர் அளித்த விருந்தின்போது, பாவி என்று கருதப்பட்ட ஒரு பெண்ணும், இன்னொரு சமயம் பெத்தானியாவில் லாசர், மார்த்தா இருவரின் சகோதரியான மரியாவும் இயேசுவின் பாதங்களில் நறுமணத் தைலம் பூசி தமது கூந்தலால் துடைத்தனர். இயேசுவின் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பையும் அன்பையும் வெளிப்படுத்த இந்தப் பெண்கள் இந்த அன்புச் செயலைச் செய்தனர்.

மனத்தில் படுவதைத் தயங்காமல் உடனே சொல்லும் பேதுரு இயேசுவை அதற்கு அனுமதிக்கவில்லை. “நீர் என் காலடிகளைக் கழுவ விடவே மாட்டேன்” என்று அவர் பிடிவாதமாய்ச் சொல்ல, “இதற்கு உடன்படாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்கிறார் இயேசு. “நீர் கழுவ என் பாதங்களைத் தந்தால்தான், உம்மோடு எனக்குப் பங்கு என்றால், பாதங்களை மட்டுமல்ல, என் கைகளையும் தலையையும் கூடக் கழுவும்” என்று சொல்லி பேதுரு உடன்படுகிறார்.

சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைத்த பின்னர், இயேசு அமர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்கள் போதகரும் ஆண்டவருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவருடைய காலடிகளைக் கழுவப் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு முன்மாதிரியைக் காட்டினேன்” என்றார்.

“ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் எனும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றார். ஒருவர் எப்படி மற்றவரிடம் அன்பு செலுத்துவது? “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்று சொன்னார் இயேசு.

காதுகொடுத்துக் கேட்பது

ஒருவரை அன்பு செய்வது என்றால் அவரின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற நம்மால் முடிந்ததை எல்லாம் செய்வது. நாம் அன்பு செய்யும் நபர் தன் மனத்தில் உள்ளதைச் சொல்ல விரும்புகிறார் என்றால், நாம் காதுகொடுத்து கவனமாக அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அவருக்கு பசி என்றால், அவர் பசி தீர நான் உணவு தயாரித்துத் தர வேண்டும் அல்லது வாங்கி வர வேண்டும். அவர் நோயுற்றால் அவர் நோயிலிருந்து மீளும் வரை அவரைப் பரிவோடு கண்காணிக்க வேண்டும். பணியாளர்களை வைத்துள்ள எஜமானர்களைத் தவிர மற்ற சாமானிய மனிதர்கள் எல்லாம் நீருற்றி தங்கள் பாதங்களை தாங்களே கழுவிக் கொள்வதுதான் வழக்கம். ஆனால் நாம் அன்பு செய்யும் நபரோ அதைச் செய்ய முடியாத நிலையில் இருந்தால், நாம் அவர் பாதங்களைக் கழுவ வேண்டும். இப்படி ‘பணிவிடையை மறுக்காத, அதற்குத் தயங்காத அன்பே நான் உங்களுக்குக் கற்பிக்க விரும்பும் அன்பு' என்று இச்செயல் மூலம் இயேசு விளக்கினார்.

ஆழ்ந்து சிந்தித்தால் இயேசு தம் சீடருக்கு கற்பிக்க விரும்பிய இன்னொரு நுட்பமான காரியத்தையும் நாம் புரிந்துகொள்ளலாம். நம்மிடம் அன்பு காட்டும் ஒருவருக்கு நாம் அன்பு காட்டுவது எளிது. ஆனால் நமக்குத் துரோகம் நினைப்போருக்கு? நம்மைத் தெரியாது என்று சொல்லி கைவிடத் தயங்காதவருக்கு?

இயேசு ஒரு பணியாளரைப் போல குனிந்து, பணிந்து பாதங்களைக் கழுவிய பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரை முப்பது வெள்ளிக்காசுக்காகக் காட்டிக் கொடுக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டவர்.

இன்னொருவர் பயத்தில் ‘இயேசுவா? அவர் யாரென்றே எனக்குத் தெரியாது' என்று மும்முறை மறுதலிக்கப் போகிறவர். இதனை அறிந்தும் இயேசு அவர்களுக்கு இந்த அன்பைக் காட்டினார்.

அரிய அன்புக்குச் சான்று

இயேசுவைப் பின்பற்றும் அனைவருக்கும் இத்தகைய அன்பு கைகூடுவது இல்லை என்பது உண்மை. ஆனால் இந்த அரிய அன்புக்குச் சான்றுகளாய் விளங்கும் அவரது தற்காலச் சீடர்கள் பலர் மீண்டும் மீண்டும் உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்.

1994ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நிகழ்ந்த கொடிய இனச் சண்டையில் பெரும்பான்மையாக இருந்த ஹூட்டுஸ் (Hutus) இனத்தவர்கள் ஏறத்தாழ எட்டு லட்சம் டுட்ஸிஸ் (Tutsis) இனத்தவரைக் கொன்று குவித்தனர்.

டூட்சிஸ் இனத்தைச் சார்ந்த இஃபிஜினியா எனும் பெண்ணின் கணவரையும் அவரது ஐந்து குழந்தைகளையும் இரக்கமின்றிக் கொன்ற ஹூட்டுஸ் கும்பலில் இருந்த ஒருவன் அவளுக்கு நன்கு தெரிந்தவன். அவளின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வாழ்ந்தவன்.

நூறு நாட்கள் நடந்த இந்த இனப் படுகொலைகள் ஓய்ந்தபின் நடந்த வழக்கில் அவனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் ஏழு ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின் நீதிமன்றத்தில் அவன் “இஃபிஜுனியா என் மேல் இரக்கப்பட்டு என்னை மன்னிக்க வேண்டும்” என்று மன்றாடி னான். நீதிபதி அவள் என்ன நினைக்கிறாள் எனக் கேட்ட போது, தான் முழு மனதோடு மன்னிப்பதாகச் சொன்னாள் இஃபிஜீனியா.

சி.என்.என் தொலைக்காட்சியைச் சேர்ந்த பன்னாட்டு நிருபர் கிறிஸ்டியான் அமன்போர் நேர்காணலுக்காக இஃபிஜீனியாவின் இல்லத்துக்குச் சென்றபோது அங்கே ஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்துண்ண அவள் அழைத்திருந்த நபர்களில் ஒருவன், அவளது கணவனையும் ஐந்து குழந்தைகளையும் கொன்றவன். “இது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்ற அமன்போரின் கேள்விக்கு அவள் சொன்னாள், “இதைத்தானே இயேசு நமக்குச் சொன்னார்?”

அந்தப் பெண் இயேசுவின் செயலை மனிதர்களும் பிரதிபலிக்க முடியும் என்பதற்குச் சான்றானாள்.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

SCROLL FOR NEXT