ஆனந்த ஜோதி

அகத்தைத் தேடி 68- சும்மா: கடவுளைத் திறக்கும் கடவுச்சொல்!

தஞ்சாவூர்க் கவிராயர்

வெகு மக்களிடையே சர்வ சாதாரணமாகப் புழங்குகிற சொல் ‘சும்மா’. இதே சொல் ஞானிகளும், சித்தர்களும் சொல்லி வைத்த கடவுளைக் காண உதவும் கடவுச் சொல்லாக, சூட்சும சூத்திரமாக, மந்திரச் சொல்லாக இருக்கிறது.

பொது வழக்கில் சும்மா என்பது செயலற்றிருத்தல் என்ற பொருளைக் குறிக்கிறது. ஆனால், செயலற் றிருப்பதே மிகப்பெரும் தேகாப்பியாசம் என்கிறார் யாழ்பாணத்துச் சுவாமிகள்.

உடம்புக்குள் மனம் எனும் ஒரு சமுத்திரம் ஆர்ப்பரிக்கும் அலைகளோடு நிலைகொண்டிருக்கிறது. சித்தர்களும், யோகிகளும் அதைத் தமது தவவலிமையால் அடக்கும்போது உடல் ஒரு பேரியக்கத்தில் உறைகிறது. அதனால்தான் சித்தர்கள் வெளிப் பார்வைக்கு சும்மா இருப்பதாகத் தோன்றினாலும் அவர்கள் இருப்பு என்பது இயக்கத்தின் உச்ச நிலையாக உள்ளது.

ஒரு சிறுவன் பம்பரம் விளையாடு கிறான். சாட்டையை இழுத்துவிட்டு பம்பரத்தை சுழற்றி விடுகிறான். பம்பரம் சுழல்கிறது. சுழற்சி வேகம் உச்சத்தை அடையும்போது பம்பரம் நின்றுவிட்டதான தோற்றம் கொள்கிறது. அஃது இயக்கத்தில் உறைந்துள்ளது. ஆம். பம்பரம் யோக நிலையில் மூழ்கிவிட்டது!

இதேபோல்தான் பிரபஞ்சம் சுழல்கிறது. அனந்தகோடி ஆண்டு களுக்கு முன்னால் அதைச் சுழலவிட்ட சாட்டை எது? சுழல்வித்தவன் எவன்?

சும்மா என்பது சித்தர்கள் கண்ட இயக்கமற்ற இயக்கம். அதனை எட்டுவது எளிதல்ல. ‘கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம். கரடிவெம்புலி வாயையும் கட்டலாம், ஒரு சிங்க முதுகின் மேற்கொள்ளலாம், வேறொருவர் காணாத உலகத்து உலவலாம். விண்ணவரை ஏவல் கொள்ளலாம்’ என்று சொல்லிக்கொண்டே வந்து ‘சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற திறம் அரிது’ என்கிறார் தாயுமானவர்.

‘சும்மா இரு சொல் அற’ என்கிறார் அருணகிரி நாதர். ‘சும்மா இருக்க வைத்த சூத்திரத்தை நானறியேன்’ என்கிறார் பட்டினத்தார். சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என்ற தாயுமானவரின் பராபரக் கண்ணி பரம்பொருளின் அருகே நம்மைக் கொண்டு செல்கிறது.

சதா விரிந்து சென்று கொண்டிருக்கும். இப்பேரண்டத்தில் சடநிலையில் எந்தப் பொருளுமில்லை. எல்லாம் இயக்கத்தின் வசப்பட்டுள்ளது.

சிருஷ்டியின் துடிப்பு

எல்லாவற்றுக்குள்ளும் ஏதோ ஒரு நகர்வு இருந்துகொண்டே இருக்கிறது. இதை நியூட்ரான், புரோட்டான் சுழற்சியாக வரைபடம் போட்டுக் காட்டுகிறார் விஞ்ஞானி.

அதுவே சிருஷ்டியின் துடிப்பு என்கிறார் மெய்ஞ்ஞானி. இருவருமே ஏறத்தாழ கடவுளை நெருங்கிவிட்டார்கள். கற்பனைக்கும் எட்டாத ஒரு பெரும் அணுவெடிப்பை உண்டாக்கி அதில் வெடித்துச் சிதறிய அணுத்துகள்களை கடவுளின் துகள் என்று அண்மையில் அறிவியலாளர்கள் பெயரிட்டது (Gods particle) நினைவிருக்கலாம்.

சுகப்பிரம்ம ரிஷி காட்டு வழியாகப் போய்க் கொண்டி ருக்கையில் கடவுளைப் பாரக்க வேண்டுமென்ற தாக மேலீட்டால் கடவுளே! கடவுளே! என்று கத்திக்கொண்டு போனாராம். அப்போது காட்டிலிருந்த கல், மண், மணல், நீர், புல், மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றிலிருந்தும் ஏன்? ஏன்? என்று மறுமொழி உண்டாயிற்று. அதாவது கடவுள் ஞானமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதை சுகமுனிவர் கண்டார் என்று பாரதி எழுதியுள்ளார்.

கூழாங்கற்களை உயிரற்ற சடப்பொருளாக எண்ணி காலால் எற்றிவிடாதீர்கள். அவை உயிரோடு இருக்கின்றன என்பார் அரவிந்தர்.

சும்மாவும் விழிப்புணர்வும்

எங்கள் வீட்டில் சாம்பல் நிறப் பூனை ஒன்று இருக்கிறது. எங்கள் வீட்டு வாசலில் எப்போதும் கண்மூடிப் படுத்திருக்கும். அது தூங்கவில்லை. சும்மா தியானத்தில் மூழ்கியிருக்கிறது. இச்சமயத்தில் அதன் புலன்கள் வெகு கூர்மையாகச் செயல்படுவதைக் கண்டிருக்கிறேன். எங்கோ சிறு அசைவு. காது விடைக்கும். ஓசைப்படாமல் ஒரு சிறு பாய்ச்சல். நிசப்தத்தின் ஊடாக நீந்திச் செல்லும் திரும்பும்போது அதன் வாயில் ஒரு ஓணானோ, அணிலோ துடிக்கும்.

பறவைகள் பற்றி தமது மலைப் பிரசங்கத்தில் யேசு இவ்வாறு கூறுகிறார்.

“ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்கள்... வானத்துப் பறவைகளை நோக்குங்கள் அவை விதைப்பதுமில்லை, அறுப்பது மில்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்…”

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

SCROLL FOR NEXT