கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். இந்தச் சொலவடை, ஆலயங்களின் கோபுரங்களுக்கு மட்டுமல்லாமல், கோபுர தரிசனம் தீபாவளி மலருக்கும் பொருந்தும். ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் வெண்ணெய் தின்னும் குட்டிக் கிருஷ்ணனை முகப்போவியத்தில் காணும்போதே மனத்துக்கு நிம்மதியின் தரிசனம் கிடைத்துவிடுகிறது.
ஆன்மிகம் சார்ந்த கட்டுரைகளோடு அறிவியல், தொல்லியல், சிற்பங்கள், தத்துவம் எனப் பல துறைகளின் தரிசனத்தையும் தாங்கும் கட்டுரைகள் மலரை அலங்கரிக்கின்றன. காஞ்சி பெரியவரின் மகான்களுக்கு அருளிய மகாலட்சுமி, டாக்டர் சுதா சேஷைய்யனின் ஸ்ரீ மத்வாச்சார்யார் உள்ளிட்ட கட்டுரைகளால் நமக்கு ஆன்மிக வெளிச்சம் கிடைக்கிறது. கல்கியின் சேற்றில் இறங்கிக் களையெடுத்த ராஜாஜி, டாக்டர் நல்லி குப்புசாமியின் தமிழ் நாடக மேடை ஒரு பார்வை உள்ளிட்ட கட்டுரைகளால் சமூக ஒற்றுமையின் வெளிச்சம் கிடைக்கிறது. கண்ணதாசனின் ஸ்ரீ கிருஷ்ண கவசம், கவிஞர் வாலியின் பாரதி ஒரு பிள்ளையார்சுழி உள்ளிட்ட கவிதைகளால் மொழியின் வெளிச்சம் தரிசனமாகிறது. குஜராத்தி கவிஞர் நானாலால் தல்பத்ராம், ஸ்ரீநாத்ஸ்ரீ ஆன கோவர்த்தன கிரிதாரி, அமுதகீதம் வழங்கிய அம்புஜம் கிருஷ்ணா உள்ளிட்ட கட்டுரைகளின்வழி இசையின் தரிசனம் கிடைக்கிறது. ஏகாதசியின் மகத்துவத்தை உணர்த்தும் ஏராளமான தகவல்கள் மலர்களின் பக்கங்களில் ஆங்காங்கே கவனம் ஈர்க்கின்றன. வெறுமே கவன ஈர்ப்பையும் தாண்டி, கருத்துக்கும் வளம் சேர்க்கின்றன அந்தக் குட்டிச் செய்திகள்.
கோபுர தரிசனம் தீபாவளி மலர்
பக்.316 | ரூ.150
தொடர்புக்கு : 044- 24516122