பல்வேறு நிலைகளில் இருந்த பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் அனைவரிடமும் அன்பார்ந்த உறவு கொண்டிருந்த ஒரு நல்ல மனிதருக்கு இயேசு உதவியுள்ளார். அன்றைய பாலஸ்தீனத்தின் கலிலேயா மாநிலத்தில் கப்பர்நாகும் என்னும் ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
படையில் நூற்றுவர் தலைவராக இருந்த அவரின் பணியாளர் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு, இறக்கும் தறுவாயில் இருக்க, ‘இனி என் பணியாளருக்கு இயேசுவால் மட்டுமே குணம் தர இயலும்' என்று நூற்றுவர் தலைவர் நம்புகிறார். ஆனால் அவர் யூதர் அல்ல.
எனவே நேரடியாக இயேசுவை அணுகத் தயங்கி, யூதத் தலைவர்கள் சிலரை தனக்காகப் பரிந்து பேச இயேசுவிடம் அனுப்புகிறார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “உம்மிடமிருந்து இந்த உதவியைப் பெறுவதற்கான எல்லாத் தகுதியும் இந்த நூற்றுவர் தலைவருக்கு உள்ளது. யூதர்களாகிய நம்மீது அன்பு கொண்டவர் இவர். அந்த அன்பின் அடையாளமாக எங்களுக்குத் தொழுகைக் கூடம் ஒன்று கட்டித் தந்தவர் இவர்” என்று அவர்கள் பகர்கின்றனர்.
யூதப் பெரியோரும் நூற்றுவர் தலைவரும் வேண்டியபடி அவரது பணியாளருக்குக் குணம் தர விரும்பிய இயேசு, அங்கிருந்த அனைவரோடும் அவர் இல்லம் நோக்கிக் கிளம்பினார். நூற்றுவர் தலைவர் இயேசுவுக்கு ஒரு தகவலை அனுப்பினார். “ஐயனே, உமக்குத் தொந்தரவு தர எனக்கு மனமில்லை. உம் திருவடி படும் தகுதி என் இல்லத்துக்கு இல்லை. நேரில் வந்து உம்மைச் சந்திக்க எனக்குத் தகுதி இல்லை. நோயுற்றிருக்கும் என் பணியாளருக்கு குணம் தருமாறு தானே உம்மை வேண்டுகிறேன்? நீர் எங்கிருந்தாலும் அங்கிருந்தே இதைச் செய்ய முடியுமே! என் அதிகாரத்தின் கீழ் உள்ள படைவீரர்கள் என் சொல்லுக்கு உடனே பணிகின்றனர். வருக என்றால் வருகின்றனர். இதைச் செய்க என்றால் செய்கின்றனர். அதுபோல் உமக்கு நோய்கள் மீது அதிகாரம் உண்டு என்பதை நான் அறிவேன். அதனால் நீங்கள் என் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அவசியமில்லை. உமது ஒரு சொல் போதும். அதை நீங்கள் அங்கிருந்தே சொல்லிவிடலாம் அல்லவா?' என்பதே அந்தச் செய்தி.
இதைக் கேட்டதும் இயேசு மிகவும் வியந்து, தனக்குப் பின்னே வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “யூத மக்கள் யாரிடமும் நான் இத்தகைய நம்பிக்கையைக் கண்டதில்லை” என்றார். நூற்றுவர் தலைவர் அனுப்பிய அவரது தூதுவ நண்பர்கள் திரும்பிச் சென்றபோது அவரது பணியாளர் நோய் நீங்கி, நலத்தோடு இருப்பதைக் கண்டனர்.
அரிய சாதனை எது?
தான் வேண்டியதைப் பெற்று, தான் கேட்டதை அடைந்த இந்த நூற்றுவர் தலைவரின் அரிய சாதனை எது? அவருக்கிருந்த அன்புறவுதான்.
இறைமகன் இயேசுவின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையும் மதிப்பும் அன்பும் அனைவரையும் வியக்க வைக்கின்றன. யூதர்களில் பலர் இயேசு உண்மையில் யாரென இன்னும் கண்டுகொள்ளாதிருந்த வேளையில், யூதரல்லாத அந்தத் தலைவரோ, அவர் யார் என்பதையும், அவரிடம் உள்ள பேராற்றல்களையும் கண்டுகொண்டார். இயேசுவின் உன்னதத்தை அவர் உணர்ந்த தால், அவரை நேரில் போய்ச் சந்திக்கவோ, அவரைத் தன் இல்லத்துக்கு அழைக்கவோ தனக்குத் தகுதியில்லை என்பதை உணர்ந்து, அதைத் தயக்கமின்றித் தெளி வாய் பறைசாற்றினார். இயேசு எங்கிருந்தாலும் தன் பணியாளர் நலம் பெற அவர் சொல்லும் சொல் ஒன்றே போதும் என்பதைப் புரிந்து கொண்டவராக இருந்தார்.
நமக்கு முதலில் வேண்டியது இறைவனோடு நல்லுறவு தானே? அவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையும் பக்தியும் அதன் அடையாளங்கள்.
ஊழியர் மீது அக்கறை
இரண்டாவதாக தன் பணியாளர் மீது இந்த நூற்றுவர் தலைவர் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் பாருங்கள்!
நூற்றுவர் தலைவரின் மனதில் பொங்கி வழியும் அன்பு இறைமகன், தன் குடும்பம், பணியாளர் என்று பல நிலைகளில் உள்ளோரை நீராட்டி, எங்கு போய்ச் சேர்கிறது எனப் பாருங்கள். தன் இனத்தை, தன் மதத்தைச் சாராத யூத மக்களைக்கூட அது சீராட்டுகிறது!
அவருக்காகப் பரிந்து பேச வரும் யூதத் தலைவர்கள் “நம் மக்கள் மீது அவர் அன்பு கொண்டுள்ளார். நாம் வழிபட ஒரு தொழுகைக் கூடத்தை அவரே கட்டித் தந்துள்ளார்” என்கிறார்கள்.
ஒருவர் உண்மையில் உயர்ந்த மனிதர் தானா என்பதை அறிந்து கொள்ள உதவும் உரைகல் இதுதான். தன் மொழி பேசாத, தன் இனம், தன் மதம் சாராத பிற மக்களை அவர் எப்படி நடத்துகிறார் என்பதை வைத்தே அவரின் உயர்வைக் கணித்துவிடலாம். ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்றோரை அனைத்துலகும் போற்றுவது இதனால்தான். இனம், மதம், சாதி என்று மனிதர்கள் கட்டியெழுப்பிக் கண்காணிக்கும் சுவர்களைக் கடந்து, பேதங்கள் ஏதுமின்றி மானிடர் யாவருக்கும் தங்கள் அன்பும் அக்கறையும் பணியும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வோர் இவர்கள்.
பாதைகள் சென்று சேருமிடம் ஒன்றுதான் என்பதை இவர்கள் புரிந்துகொண்டிருப்பதால், ‘வேறு பாதைகளில் செல்வோரும் நமது சக பயணிகளே. நம்மைப் போன்றே அவர்களுக்கும் புரிதலும் பரிவும் அன்பும் அக்கறையும் தேவை' என்பதை உணர்ந்து இவர்கள் செயல்படுகிறார்கள்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து பைபிளின் பக்கங்களிலிருந்து நம்முடன் பேசும் இந்த நூற்றுவர் தலைவர் நம்மிடம் என்ன சொல்கிறார்? ‘இறையருள் வேண்டுமா? உங்கள் வேண்டுதல் கேட்கப்பட வேண்டுமா? உங்களுக்கு நலம் வேண்டுமா? எல்லோ ருடனும் நல்லுறவு பேணுங்கள்!'
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com