ஆனந்த ஜோதி

அகத்தைத் தேடி 65: நிறைந்து பொங்கும் பூரணம்

தஞ்சாவூர்க் கவிராயர்

சூபி ஞானத்தை தமிழுக்குக் கடத்திய ஞானியரின் வரிசை நீண்டது. அந்த வரிசையிலே வைத்து எண்ணத் தக்கவர் கோட்டாறு ஞானியார் அப்பா என்று குறிப்பிடப்படும் ஷெய்கு ஞானியார் சாஹிபு ஒலியுல்லாஹ் ஆவார். பள்ளிப் படிப்பில் மனம் பற்றாது உலக நடைமுறைகளில் ஒன்றாது எப்போதும் சிந்தனையில் மூழ்கி மெளனியாய் உருண்ட காலங்களில் பால்யத்தின் பதினான்கு ஆண்டுகள் கழிந்தன.

கோட்டாறு வேம்படி பள்ளி

பாரசீக சூஃபி ஞானியாகிய மன்சூர் ஹல்லாஜ் அவர்களின் சீடர்களில் ஒருவராகிய குது புஸ்ஸமான் மெளலானா செய்யிது தாமீம் இபுனு செய்யது ஜமானுல் மிஹூபரிய்யி அவர்கள் நாகர்கோயிலில் உள்ள வேம்படிபள்ளி என்று அழைக்கப்பட்ட கோட்டாற்று பள்ளிவாசலில் தங்கியிருந்தார்கள். கோட்டாறு வேம்படி பள்ளியின் உட்புறம் ஐந்து நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்றிருக்கிறது. அங்கே அமர்ந்திருந்த தவச்சீலரின் முன்வந்து நின்றார் ஞானியார் அப்பா.

தமது பையிலிருந்த புத்தகத்தை எடுத்து ஞானியார், கைகளில் அந்தப் பெருமானார் தருகின்றார். அப்புத்தகம் தெள்ளத் தெளிந்த ஞானங்கள் நிரம்பிய சுர்யானி மொழி நூல் ஆகும். மொழியும் எழுத்தும் என்னவென்று அறியாத ஞானியார் அப்பாவை, அவருள் மூண்டெழுந்த கனல் ஒன்று கடகடவென்று வாசிக்க வைத்தது. நன்கு கற்றிந்தவர்களே தடுமாறும் சூட்சுமச் சொற்களின் சாட்டையை அநாயாசமாகச் சுழற்றினார் ஞானியார் அப்பா. வேப்பமரம் ஐநூறு ஆண்டு மெளனத்தை அவர்மீது பொழிந்தது.

ஆசிரியரின் நிறைவுற்ற பயணம்

செய்யிது தாமீம் அவர்களின் உடல் சிலிர்த்தது. அவரது குருநாதர் செய்யிதுனா ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹ் அவர்களது உத்தரவுப்படி பாரசீகத்திலிருந்து அவர் மேற்கொண்ட பயணம் தனது இலக்கை அடைந்துவிட்டது. ஞானியார் அப்பாவுக்கு, அன்று முதல் குருநாதராகிப் போதிக்கத் தொடங்கினார். ‘இறைவன் உமக்கு வல்லமைகள் அனைத்தையும் அருள்வாராக’ என்ற ஆசிர்வாதம் அவர் வாயிலிருந்து வசனமாக உதிர்ந்தது.

அன்று முதல் ஞானகுருவின் உபதேசப்படி நடந்துவந்தார். இளமையில் கற்காத குர்ஆனின் மறைபொருளான அர்த்தங்களை தம்மை நாடிவந்த மக்களுக்கு போதிக்கலானார். சில வேளைகளில் ஜதுபு எனப்படும் ஆனந்த பரவசநிலை அவருக்கு உண்டாகும். அப்போதெல்லாம் கானகங்களை நாடிச் சென்று ஏகாந்த மான தனியிடங்களில் நிட்டையில் ஆழ்ந்துவிடுவது அவர் வழக்கம்.

பூரணம் நிறைந்து பொங்கியது

ராமநாதபுரம் மாவட்டம் மணமேற்குடி சத்திரத்தில் ஞானியார் அப்பா தமது குருநாதரை மீண்டும் சந்தித்தார். நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களையும், அலி (ரலி) அவர்களையும், சற்குரு மன்ஸூர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட இறை நேசச் செல்வர்களையும் ஞானியார் அப்பா காணுமாறு செய்தார் அவர் குருநாதர். மணமேற்குடி சத்திரத்தில் வைத்துதான் தம்மை அறியாது கசிந்து உருகி பாடல்களை இயற்றத் தொடங்கினார் ஞானியார் அப்பா. ‘பூரணம் நிறைந்து பொங்கி புகழொளி மணியதாகி’ என்று தொடங்கும் பாடல் சிருஷ்டி தத்துவத்தை விளக்கி ‘செவ்வனே அமைத்தான் வல்லான்’ என்ற இறுதி வரியில் இறைவனின் கருணையை வியக்கிறது.

சடை அப்துல் காதிறு முதலான பலருக்கும் தீட்சை வழங்கினார். தீய செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு அவர் தீட்சை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பிழைபட்ட பாராயணம்

ஒரு முறை திருவாங்கூர் மகாராஜா முன்னிலையில் நம்பூதிரிகளின் கூட்டத்தில் இதிகாசப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் வாசித்த சுவடிகளில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டி பாராயணம் பிழைபட்டது என்று விளக்கினார் ஞானியார் அப்பா.

கோட்டாற்றைச் சேர்ந்த சங்கர நயினார் செட்டியார் ஞானியார் அப்பாவை வந்து தரிசித்துச் செல்வது வழக்கம். அவருக்கு சுசீந்தரம் சென்று தாணுமாலயனின் நடனத் தோற்றம் காணும் விருப்பம் நிறைவேறாமலே இருந்து வந்தது. அவரது மனக்குறையை ஞானியார் அப்பாவிடம் வெளியிடவும் தயங்க வில்லை. சட்டென்று தம்மிடமிருந்த சவுக்கத் துண்டை எடுத்துத் தூக்கி திரைபோல் விரித்தார் ஞானியார் அப்பா. அதிலே சுசீந்திரம் தாணுமூர்த்தி நடனக் காட்சி திரைப்படம் போல் தெரிந்தது. சங்கர நயினார் மகிழ்ச்சிக் கூத்தாடினார். மங்கையர் இருவரை ஞானியார் அப்பா மணம் முடித்து அவருக்கு மழலைச் செல்வங்கள் பிறந்தது பற்றியும் குறிப்புகள் உள்ளன.

மறைவை முன்னறிவித்தல்

‘நான் வருகிற வெள்ளிக்கிழமை இரவு உபாத்தாகுவேன்’ என்று குடும்பத்தாரிடம் அறிவித்து அதன்படி கி.பி. 1794 ஜமாத்துல் அவ்வல் மாதம் 14 வெள்ளிக்கிழமை இரவு உடலை நீத்தார். தசாவதானி செய்குத்தம்பிப் பாவலர், ஞானியார் அவர்களின் மகள்வழிப் பேரர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

SCROLL FOR NEXT