ஆனந்த ஜோதி

எவரின் பித்ருக்கள் இவர்கள்

நாரணோ ஜெயராமன்

தத்துவ ஞானி, சிந்தனையாளர் வில் டூரண்ட் அவர்களின் இறுதிநூலான 'இறுதி இலைகள்' நூலில் 'நமது ஆன்மாக்கள்’ என்றொரு கட்டுரை உள்ளது. அதில், சகலமானவற்றிலும் ஆத்மாவைப் போன்று ஒரு ஆக்கசக்தி உள்ளது என்கிறார். “எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு விதத்தில் உயிரூட்டப்பட்டிருக்கின்றன- உயிரற்ற கல்லில் எலக்ட்ரான்களின் நடனம் உள்ளது போன்று.” என்கிறார்.

ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாக, ஒரு காக்காய் ஜோடி ஒன்று, எங்கள் வீட்டு மொட்டைமாடித் தண்ணீர்த் தொட்டியின் மேல்தளத்தில் சணல், நார், ஒட்டடைத் திரட்டு ஆகியவற்றைத் திரட்டிக் கூடுகட்டுவதில் ஈடுபட்டிருந்ததைக் கவனித்தோம். பின் நிகழ்ந்த அனுபவத்திலிருந்து , ஒரு பிரசவ அறை உருவாக்க நிலையில் இருந்ததை அறிந்தோம். அதன்பிறகு நாங்கள் துணி உலர்த்தச் செல்லும்போதெல்லாம், எங்கள் தலைமீது இரண்டு காகங்களும் வட்டமடித்துப் பறந்து மூர்க்கமாய் கொத்த வரும். இரண்டு மூன்று தினங்கள் இருவராகச் சென்று, ஒருவர் கருப்புக்குடையை விரித்து உயர்த்தி பிடிக்க மற்றொருவர் துணி உலர்த்துவோம். அப்படியும், காகங்களின் மிரட்டல், விரட்டல் ஓயவில்லை. அவற்றின் ஜாக்கிரதை உணர்வைப் புரிந்துகொண்டு துணி உலர்த்தச் செல்வதைத் தவிர்த்தோம்.

பிறகு, வெகுநாட்கள் கழித்து காகங்கள் கட்டிய கூடு சிதைந்து, வீட்டுப்புறக்கடையில் விழுந்திருந்தது. மேலே சென்று பார்த்தபோது அன்றும், மேலும் சில தினங்களுக்கும் காகங்களின் கவனம் எங்களைத் தொடர்ந்தது. நடுவில் சில நாட்கள் ஊரில் இல்லாததால், இச்சம்பவம் நினைவுப்பெட்டகத்தில் பின்தள்ளப்பட்டுவிட்டது.

புரட்டாசி மாதப் பிறப்பன்று, தர்ப்பணம் முடித்த பின்னால், வழக்கம்போல் வீட்டுக் கொல்லைப்புற காம்பவுண்ட் சுவர் மேல் பித்ருக்களுக்காக அன்னம் வைத்தோம். சிறிது நேரத்தில் இரண்டு காகங்களும் குழந்தை என்று சொல்லத்தக்க மற்ற ஒன்றும் வந்தன. குஞ்சுக்காகம் தத்தித் தத்தி நடந்து வந்தது. ஒரு காகம் சுற்றுமுற்றும் பார்த்து அன்னத்தை அலகால் கொத்தியது. மற்றொரு காகம் தன் அலகால் எடுத்த அன்னத்தை, குஞ்சுக்கு ஊட்டியது. இலையில் பரிமாறிய உணவைச் சாப்பிட்டவாறே நான், இக்காட்சியைப் புளங்காகிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாம் சுவீகரித்துக்கொண்ட வெவ்வேறு சித்தாந்தங்களின் பிதாமகர்களுக்கு அவர்களின் பிறந்தநாளிலும் மறைந்த நாளிலும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதுபோல் நம் வாழ்க்கைக்கு ஆதார வேராக இருந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களும் மஹாளய பக்ஷத்தில் உபசாரமும் உபாசனையும் செய்யப்படுகிறது. இந்த பக்ஷத்தில் பித்ருக்கள் நம்முடன் வந்து தங்குகிறார்கள் என்ற நம்பிக்கை இங்கே இருக்கிறது. எள் - தண்ணீர் ரூபத்தில் அவர்களுக்கு அளிக்கும் அன்னத்தைப் புசிக்கிறார்களாம்.

கவிஞர் ஆத்மாநாம் சொல்வதுபோல, எங்கள் வீட்டுக்கு வந்த காகங்கள் எவரின் பித்ருக்களோ என்று எண்ணிக்கொண்டேன்.

SCROLL FOR NEXT