கூரத்தாழ்வானின் இளைய மகனான பராசரபட்டர், ஸ்ரீரங்கநாதனின் சுவீகார புத்திரனின் ஸ்தானத்தில் இருந்தவர். வருஷம் முழுவதும் விழாக்கோலமாக விளங்கும் ஸ்ரீரங்கத்தில், நம்பெருமாள் எழுந்தருளும்போது வழியில் பக்தகோடிகள், இறைவன் மீது கொண்ட ஆா்வத்தால் ஆசையுடன் நெருங்கி வருவார்கள். அப்போது கைங்கர்யக்காரர்கள் கூட்டத்தை விலக்குவதற்கு மான்தோலைப் பட்டையாக்கி தரையில் ஓங்கி அடிப்பார்கள். இப்படிச் செய்யும்போது அந்த அடி பராசரர் மேல் பட்டுவிடுகிறது. பராசர பட்டர், நம்பெருமாளைச் சேவித்துவிட்டு அங்கிருந்து நீங்கிவிட்டார்.
பராசரபட்டர் தோளில் அடிபட்டதைக் கண்டு பொறுக்க முடியாத அவரது சீடர்கள், கோயில் கைங்கர்யக்காரர்களிடம் சண்டைக்குச் சென்றனர். இந்த விஷயம் பராசரபட்டரின் காதுகளை வந்தடைய, அவர் கைங்கர்யக்காரர்கள் தங்கள் கடமையையே ஆற்றினார்கள் என்று சமாதானம் சொல்லி, தவறு என்னுடையதுதான் என்று சொல்லி, இன்னொரு தோளிலும் அடியுங்கள் என்று மறுதோளை பட்டர் காட்டினார்.
நம்பெருமாள் தேவரீரை நம்பி அந்தக் கைங்கர்யத்தைக் கொடுத்திருக்கிறான். நம்பெருமாளுக்கு அந்த மான்தோல் பட்டை மேல் அபிமானம் உள்ளது. அவன் அபிமானிக்கும் அந்த தோல் அடியேன் மேல்பட்டது அடியேன் தோள் செய்த பாக்கியமே என்று கூறினார்.
தேவரீரது பக்தி, கைங்கர்ய ருசி அனைத்தும் கொண்டாடத்தக்கது. அடியேனை மன்னித்து அருளுங்கள் என்று பிரார்த்தித்து பராசரபட்டரின் திருவடிகளைப் பணிந்தார் மான் தோல் பட்டையால் அடித்த கைங்கர்யக்காரர்.
இப்படிப் பொறுமை காட்டிய பராசரரைப் போல, நான் பொறுமையும் கருணையும் இல்லாமல் இருக்கிறேனே என்று மனம் வருந்தினாள் நம் திருக்கோளுர் பெண் பிள்ளை.
(ரகசியங்கள் அடுத்த வாரம் நிறைவடையும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com