ஆனந்த ஜோதி

ஆன்மீக நூலகம்: ரூமியின் வாழ்வில் ஞானக்கதைகள் நூறு

செய்திப்பிரிவு

மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு இத்ரீஸ் ஷாஹ் எழுதிய இந்த நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நிகழ்வு விசேtஷமானது. சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள சிம்லாவில் பிறந்து இங்கிலாந்துக்குப் பெயர்ந்தவர். சூபி ஞானமரபு தொடர்பில் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். சூபியிசத்தை உலகளாவிய ஞான அம்சமாகப் பார்த்த இத்ரீஸ் ஷாவின் இந்த நூலை மொழிபெயர்த்திருப்பவர் ரமீஸ் பிலாலி. இந்த நூலிலிருந்து சில பகுதிகள் வெளியிடப்படுகின்றன.

தர்வேஷும் ஒட்டகமும்

ஒருநாள், மௌலானாவின் முன்னிலையில் கூடியிருந்தோர் அந் நாட்டின் ஆளுநரான மொழ்னுத்தீன் என்பவரைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவரது ஆட்சியில் மக்கள் மிகவும் சௌகரியத்துடனும் உடல்நலத்துடனும் வாழ்ந்தனர் என்றும் அவரது வன்மை மிகப்பெரிது என்றும் பேசினர். மௌலானா சொன்னார். ‘அது எதார்த்தம்தான்; நூறு மடங்கு உண்மைதான். ஆனால், வாழ்க்கைக்கு இன்னோர் அம்சமும் இருக்கிறது. இது தொடர்பாக கதை ஒன்றும் சொன்னார்.

முன்பு ஒருமுறை குழு ஒன்று ஹஜ் யாத்திரையாக மக்காவுக்குப் பயணித்தது. அந்தக் குழுவில் இருந்த தர்வேஷ் ஒருவரின் ஒட்டகம் நோய்வாய்ப்பட்டது. அவர்கள் எவ்வளவு சிகிச்சை செய்தும் அந்த ஒட்டகம் எழுந்து நிற்கவில்லை. எனவே, அந்த ஒட்டகம் சுமந்துவந்த பைகளை எல்லாம் அவரவர் எடுத்துக் கொண்டு வேறு ஒட்டகங்களில் பகிரந்து ஏற்றிவிட்டார்கள். வாகனம் ஏதுமின்றி அந்தத் தர்வேஷைத் தனியே விட்டு விட்டார்கள். தர்வேஷை அப்பயணக்குழு அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மௌலானா பின்வரும் கவிதையைப் பாடினார்

வழிகாட்டி ஒருவரை

உன்னுடன் அழைத்துச் செல்

பாதையோ மிகவும்

பாதகமானது.

நல்லூழின் நட்சத்திரம்

என்று சொல்வேன் அவரை.

அவர் ஒரு வழிகாட்டியாய் இருப்பது

அகவை மிகுந்தவர் என்பதால் அன்று,

திகழும் ஞானத்திறத்தால் மட்டுமே.

காரணம் எப்படி, காரியம் அப்படி

மளிகைக் கடைக்காரன் ஒருவன் தன் கடையில் கிளி ஒன்றை வைத்திருந்தான். ஒருநாள் கடைக்குள் நுழைந்த பூனை ஒன்று எண்ணெய் பாத்திரத்தைக் கவிழ்த்துவிட்டு ஓடிவிட்டது. கடைக்குத் திரும்பிவந்த வியாபாரி அந்தக் கிளிதான் எண்ணெயைக் கொட்டி விட்டது என்று நினைத்தான். கோபத்தில் அவன் கிளியின் தலையில் பலமாகத் தட்டினான். அதன் தலையிலிருந்து இறகுகள் எல்லாம் கொட்டிவிட்டன.

சிறிது நேரம் கழித்து வழுக்கைத் தலையன் ஒருவன் கடைக்கு வந்தான். அவனைப் பார்த்து கிளி கத்தியது. ‘யோவ், நீயும் எண்ணெயைக் கொட்டிவிட்டாயா?’

ஏசுவும் திருநாமமும்

ஏசுவுடன் நடந்து கொண்டிருந்த ஒருவன் சில எலும்புகளைக் கண்டான். இறந்தோரை மீண்டும் உயிர்பெற வைப்பது எப்படி என்று தனக்குக் கற்பிக்குமாறு அவன் ஏசுவிடம் கெஞ்சினான்.

இது உனக்கான தன்று. நீ முதலில் உன்னை உயிர்பெறச் செய்வதில் கவனம் செலுத்து. அதை விட்டுவிட்டு நீ பிறரைப் பற்றியே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறாய்.

ஏசுவின் அறிவுரை அவன் செவிகளில் நுழையவில்லை. அவன் பிடிவாதம் பிடித்தான். உயிரூட்டும் திருநாமத்தை அவனுக்குக் கற்பித்துவிட்டு ஏசுநாதர் அவனைப் பிரிந்து சென்றுவிட்டார்.

திருநாமத்தைப் பரிசோதித்துப் பார்க்க அவன் நாடினான். அதனை அந்த எலும்புகள் மீது ஓதினான். அவன் கண்முன்னால் அவற்றின் மீது சதையும் பின்னர் தோலும் உண்டாகின. புலி ஒன்று எழுந்துவிட்டது. அவன் மேல் பாய்ந்து அடித்து அவனைக் கொன்றுவிட்டது.

ரூமியின் வாழ்வில் ஞானக்கதைகள் நூறு
இத்ரீஸ் ஷாஹ்
தமிழில்: ரமீஸ் பிலாலி
சீர்மை வெளியீடு,
37/13, பூரம் பிரகாசம் சாலை
பாலாஜி நகர்
ராயப்பேட்டை, சென்னை - 14
தொடர்புக்கு: 8072123326
விலை: ரூ.200/-

SCROLL FOR NEXT