ஆனந்த ஜோதி

ஆன்மீக நூலகம்: புராதன மொழியழகில் ஆழ்வார் வரலாறு

மானா பாஸ்கரன்

ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிய வைணவ இலக்கியமாகத் திகழ்வது நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம். அந்நூலை அடிப்படை யாகக் கொண்டு இந்த ‘ஓரெழுத்தில் ஆழ்வார்கள்’ என்கிற நூலை ப.ஜெயக்குமார் எழுதியிருக்கிறார்.

பொய்கையாழ்வார் தொடங்கி மதுரகவி ஆழ்வார் வரை பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றை, அவர்களது பக்திச் சிறப்பை இந்த நூலில் விதை நெல்லாக விதைத்திருக்கிற ஜெயக்குமார், இதை எழுத தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதை வடிவம்தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மரபுக் கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, ஹைக்கூ, ஹைபுன் என்று கவிதை உலகம் பரிமாணம் பெற்று, அதற்குரிய வடிவ அழகை அடைந்துவிட்ட இந்நாளில், இந்நூலாசிரியர் ஆழ்வார்கள் கதையை சொல்ல ‘ஓரெழுத்து கவிதை’ என்கிற வடிவத்தை புதிதாக தேர்ந்தெடுத்துள்ளார்.

உதாரணத்துக்கு, பொய்கை ஆழ்வார் என்றால், அவரது வரலாற்றை இப்படி எழுதுகிறார்.

’பொய்கையின் இருப்பிடம்/பொலிவான ஐப்பசி திருவோணத்தன்று/பொருந்திய சித்தார்த்தி வருட செவ்வாயில்/பொன்மயமான தாமரைப்பூ மேலே சுயம்புவாய்’ என்று ‘பொ’ என்கிற எழுத்திலேயே மொத்த வரலாற்றையும் கவிதை நடையில் எழுதியிருக்கிறார்.

தமிழின் வார்த்தை வளம் இவருக்குப் பெரிதும் கைக்கொடுத்துள்ளது. வழக்கில் இல்லாத இலக்கியச் சொல் பலவற்றை, இந்த ஓரெழுத்துக் கவிதையில் இவர் கையாண்டுள்ளார். பூம்பாடகத்துள், பூம்பலியன்றி, பேராரம் பூண்ட, பஞ்சாயுதனை, பச்சிமத்தில், விடமம் போன்ற சங்ககாலத் தமிழ் வெளிப்பாடுகளை எல்லாம் இவர் கையாண்டுள்ளது இந்நூலுக்கு புராதன மொழியழகை கொண்டு வந்து தருகிறது.

ஓரெழுத்தில் ஆழ்வார்கள்

ப.ஜெயக்குமார்

வெளியீடு: உமாதேவி பதிப்பகம்

8529, எல்.ஐ.ஜி - 1,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு

அயப்பாக்கம், சென்னை – 77

விலை ரூ:300

SCROLL FOR NEXT