உன்னையும் சேர்த்தால் ஒன்பது
முல்லா தனது வீட்டின் வாசலில், ஒரு தண்ணீர் வாளியை வைத்து அதற்கு முன்னர் அமர்ந்து, தூண்டிலைப் போட்டு மீன்பிடிக்கும் பாவனையில் இருந்தார். முல்லாவின் மேல் பிரியம் கொண்ட நண்பர், "என்ன முல்லா, எத்தனை மீன்களை இதுவரை பிடித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். முல்லா அவரிடம் வெடுக்கென்று, “உன்னையும் சேர்த்தால் ஒன்பது" என்று பதிலளித்தார்.
போட்டி கிடையாது
முல்லாவின் ஊருக்கு வந்த புதியவர் ஒருவர், இங்கே நேர்மையான வாழ்க்கையை வாழ்வதற்காக வந்தேன் என்றார். அருமையான விஷயம் என்று ஆமோதித்த முல்லா, “இங்கே அதற்குப் போட்டியே இருக்காது" என்று பதில் அளித்தார்.
ஓட்டுநர் இல்லை
முல்லா நஸ்ரூதின் மாடி பஸ் ஒன்றில் ஏறினார். உடனடியாக மேல் தளத்துக்குப் படியேறிச் சென்றார். சில நிமிடங்களில் தடதடவென்று ஒடிவந்த முல்லாவைப் பார்த்த நடத்துநர் என்ன ஆச்சு? என்று கேட்டார். “அங்கே இருப்பது அத்தனை பாதுகாப்பானதில்லை" என்று தீவிரமான முகத்துடன் கூறினார் முல்லா. நடத்துநர் குழம்பியபடி காரணம் கேட்டார். பேருந்தின் மேலடுக்கில் ஓட்டுநர் இல்லை என்று சொல்லிவிட்டு ஆசுவாசமாக அமர்ந்தார் முல்லா.
மனசாட்சியை பலவீனபடுத்துங்கள்
முல்லா நஸ்ரூதின் மனநல மருத்துவரைப் பார்க்கச் சென்றார். “நெறிகள் எதைச் சொல் கிறதோ அப்படி நான் இல்லை. ஆனால் எனது மனசாட்சியோ தன் தொந்தரவை விடுவதாகவும் இல்லை. எனக்கு உங்கள் உதவி தேவை டாக்டர்” என்றார் முல்லா. முல்லாவின் பிரச்சினை புரிகிறது என்றார் மருத்துவர். “தவறு செய்யாத வண்ணம் மனவலிமையை உங்களுக்கு நான் அதிகப்படுத்த வேண்டும். அவ்வளவுதானே.” என்றார் மருத்துவர். “அதெல்லாம் வேண்டாம். எனது மனசாட்சியைச் சற்று பலவீனப் படுத்துங்கள். அதுதான் எனக்குத் தேவை" என்றார் முல்லா.
ஐந்தாம் முறை
பஃபே விருந்து ஒன்றுக்கு முல்லா தன் மனைவியுடன் சென்றார். அந்த விருந்தில் பரிமாறப்பட்ட பொரித்த கோழிக் கறியைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் தனது தட்டில் நிரப்பிச் சாப்பிட்டார் முல்லா. இதைப் பார்த்துச் சங்கடமடைந்த அவர் மனைவி, இத்தனை தடவை கேட்டு ஒரே கறியைச் சாப்பிடுவது, உங்களுக்கு அநாகரிகமாகத் தெரியவில்லையா என்றார். “இல்லை அன்பே. வறுத்த கோழியை உனக்கு வேண்டு மென்று கேட்டுத்தான் திரும்பத் திரும்ப வாங்கி வருகிறேன்.” என்றார்.