திருவரங்கத்தில் மகாபண்டிதரான வைணவ ஆச்சாரியார் ஒருவர் இரவு வேளையில் காவிரியின் அக்கரைக்குச் செல்வதற்காக ஒரு பரிசலில் பயணம் செய்தார். அதே பரிசலில் கணபுரத்தாள் என்ற பெண்மணியும் இருந்தார். அவர்களைத் தவிர திருவரங்கத்தைச் சேர்ந்த சிலரும் பரிசலில் பயணித்தனர். காவிரி நடுவில் செல்லும்போது, லேசாக மழைதூறத் தொடங்கி சீக்கிரத்திலேயே வலுத்தது. ஆற்றிலும் நீர்வரத்து அதிகமாகி பரிசல் தள்ளாடத் தொடங்கியது. நீச்சல் அறிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் ஆற்றில் குதிக்க முன்வந்தால், மற்றவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டுசேர்த்துவிடலாம் என்று பரிசல் ஓட்டுபவர் ஆலோசனை கூறினார். நீர்வரத்து அதிகமாகி படகின் பாரம் தாங்காமல் படகு கவிழும் நிலை வந்தது. உடனே பரிசல் ஓட்டுபவர், யாராவது இறங்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். யாரும் நீரில் குதிக்க முன் வரவில்லை. உடனே பரிசலில் பயணித்த கணபுரத்தாள், ‘நீ நூறு வருடங்கள் நன்றாக இரு. என் ஆச்சார்யனைக் கொண்டுபோய் பத்திரமாகக் கரைசேர்த்துவிடு’ என்று கூறி ஆச்சார்யனை நோக்கிக் கைகூப்பியவளாக ஆற்றில் குதித்துவிட்டாள்.
பரிசல் ஸ்ரீரங்கம் அடைந்ததும் அந்த வைணவாச்சாரியார் கணபுரத்தாளை பரிசல்காரரோடு சேர்ந்து தேடினார். ஆற்றின் நடுவில் கோரை மணல் மேடு ஒன்று கணபுரத்தாளைக் காப்பாற்றி வைத்திருந்தது. அங்கிருந்து கண புரத்தாள் குரல் கொடுக்க பரிசல்காரர் சென்று கரைக்கு அழைத்து வந்தார்.
‘தேவரீர் கோரை மணல் மேடாக இருந்து அடியாளைக் காப்பாற்றினீரே சுவாமி’ என்று கணபுரத்தாள் ஆச்சாரியரைச் சேவித்தார். யத் பாவம் தத்பவதி என்று கூறி ஆச்சாரியனும் ஆசிர்வதித்தார். உனது விசுவாசம் இப்படியிருந்தால் அது அப்படியே ஆகட்டும் என்பது அதன் பொருள்.
கனபுரத்தாளைப் போல் ஆச்சாரியனைக் கரையில் சேர்ப்பதற்காக, தான் நீரில் குதிக்கும் துணிவும் பக்குவமும் எனக்கு இல்லையே சுவாமி! என் சுய நலத்துக்காக வசதி வாய்ப்புகளை தேடிச் சென்று வாழ நினைக்கிறேனே நான் எனத் தன்னை வெறுத்துப் புலம்பினாள் நம் திருக்கோளுா் பெண் பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com