இயேசுவின் அன்பிற்குரிய ஓர் இறைவாக்கினர், அநியாய மாகக் கொல்லப்பட்ட நிகழ்வு பைபிளில் உள்ளது.
இயேசுவின் வருகைக்காக யூத மக்களைத் தயார்படுத்தி திருமுழுக்கும் அளித்த யோவான், காட்டில் கடுந்தவ வாழ்வு வாழ்ந்தவர். இயேசு பொது வாழ்வுக்கு வருவதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு யோவான் அவரைத் தேடி வந்த மக்களிடம் உரையாற்றி, மனம் மாறித் திருந்தி வாழ அவர்களை அழைத்தார்.
ரோமப் பேரரசின் அனுமதியோடு கலிலேயோவை ஆண்ட அரசன் ஏரோது அன்டிப்பஸின் இரண்டாம் திருமணத்தில் இருந்த முரண்பாடுகளை மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர். அவன் தனது முதல் மனைவியை ஒதுக்கிவிட்டு, தன் சகோதரன் ஃபிலிப்பின் மனைவி ஏரோதியாவோடு வாழ்ந்துவந்தான். இந்த ஏரோதியாவின் தந்தை அரிஸ்டோபுளூஸ் ஏரோதுவுக்கு ஒன்றுவிட்ட சகோதரன். எனவே மகள் முறையில் வரும் பெண்ணை அவன் மனைவியாக்கியிருந்தான்.
யோவான் சிறிதும் தயங்காமல் இதைத் தவறு என்று கண்டித்தார். சினம் கொண்டு சீறி எழுந்த ஏரோதியா, யோவானைச் சிறையில் அடைக்குமாறு வற்புறுத்த, அவளுக்கு இணங்கி, ஏரோது அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணையிட்டான். அவரைச் சிறையில் அடைத்ததோடு ஏரோதியாவின் சினம் அடங்கவில்லை. அவரைச் சிறையிலேயே கொன்று விடவும் விரும்பினாள். ஆனால் ஏரோது யோவானைச் சிறையில் அடைத்திருந்தாலும் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்ததால் சிறையிலும் அவருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தான். யோவான் உரைத்த உண்மைகள் அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அவர் சொன்னவற்றை மனமுவந்து கேட்டான். ஏரோதியாவால் அவன் மனத்தை மாற்ற முடியவில்லை.
மதி இழந்த ஏரோது
ஏரோதியாவுக்கு அரசன் ஏரோதின் பிறந்தநாள் சாதகமாக அமைந்தது. தன் பிறந்தநாளை முன்னிட்டு ஏரோது தன் அரசவையினருக்கும் பெருங்குடி மக்களுக்கும் பெரிய விருந்து ஒன்று அளித்தான். அந்த விருந்தின்போது ஏரோதியாவின் மகள் சலோமி நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தாள். பிறந்தநாள் விருந்து தந்த உற்சாகம், மது தந்த மயக்கம், மகளின் நடனம் தந்த களிப்பு அனைத்தும் சேர்ந்து ஏரோதுவை மதி இழக்கச் செய்தன.
நடனமாடிய மகளை அழைத்து, “உன் நடனத்துக்குப் பரிசாக என்ன வேண்டும், கேள். தருகிறேன். நீ என்ன கேட்டாலும் தருவேன். என் அரசின் பாதியைக் கேட்டால் கூடத் தருவேன்” என்று வாக்களித்தான். அவள் போய் தன் தாய் ஏரோதியாவிடம் “என்ன கேட்கலாம்?” எனக் கேட்க, தன் கொலைவெறியை நிறைவேற்ற சரியான தருணம் வந்துவிட்டதைப் புரிந்துகொண்ட ஏரோதியா, “யோவானின் தலையைப் பரிசாகக் கேள்” என்று சொன்னாள். அப்படியே சிறுமி ஏரோதுவின் முன் வந்து நின்று, “யோவானின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குத் தாரும்” என்று கேட்டாள். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத ஏரோது உள்ளூர வருந்தினாலும், எல்லோருக்கும் முன் அளித்த வாக்குறுதியை மீறிட மனமின்றி, ஒரு காவலனை அனுப்பி, சிறையில் இருந்த யோவானின் தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் போய் அவரின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து அதை அவளிடம் கொடுக்க, அவள் அதைக் கொண்டுபோய் தன் தாயிடம் கொடுத்தாள்.
இந்தக் கொடுஞ்செயலுக்குக் காரணமானவர்கள் நான்கு பேர். முதல் குற்றவாளியான ஏரோதியாவை இத்தகைய பெண்ணாக ஆக்கியவை எவை? யோவான் சொன்னது உண்மையா, பொய்யா என்று யோசிக்காதது - அவர் சொன்ன உண்மை சுட்டதால் வந்த கோபத்தைச் சரியான முறையில் கையாளத் தவறியது - அந்தக் கோபம் வளர்ந்து ஊதிப் பெருத்து பழிவாங்கும் வெறியாக மாறும்வரை அதை அடைகாத்தது - சதித்திட்டம் தீட்டிச் சரியான தருணத்துக்காகக் காத்திருந்தது - போதுமான விவரங்களை அறியாத தன் மகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி இந்த மாபாதகத்தில் அவளையும் பங்கேற்க வைத்தது.
நடனமாடிய ஏரோதியாவின் மகளை இந்தப் பயங்கரமான படுகொலையில் இரண்டாம் குற்றவாளியாக ஆக்கியவை எவை? தாய் சொல்வது எத்தனை பெரிய பாவம் என்று உணராதது - சுயமாகச் சிந்திக்கும் திறன் இன்றி, தாய் சொன்னதை அப்படியே அரசனிடம் ஒப்பித்தது.
கொடுமையைச் செயலாக்குவதும் குற்றம்
ஏரோது அரசன் மூன்றாவது குற்றவாளியா அல்லது முதல் குற்றவாளியா என்று நாம் விவாதிக் கலாம். அவனை இப்பாதகத்தில் ஈடுபடச் செய்தவை என்ன? எதைக் கேட்டாலும் தருவேன் என்று ஆணையிட்டுக் கூறும் ஆணவம் – மது அருந்தி மதியிழந்த முட்டாள் தனம் - அரசனாக இருந்தால் எந்த அக்கிரமத்தையும் அரங்கேற்றலாம் என்று நினைக்கும் இறுமாப்பு.
அரசன் ஆணையிட்டதும் அவனது ஆணை சரியா தவறா என்று சிறிதும் யோசிக்காமல், இறைவாக்கினரின் தலையை வெட்டும் அக்கிரமத்தை உடனே நிறைவேற்றிய காவலன் நான்காம் குற்றவாளி. ‘நான் காவலன் தானே? அரசனுக்குப் பணிவதைத் தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?’ என்ற எண்ணத்தில் உள்ள கயமைத் தனம் - ‘மற்ற மூவரும் கேட்கும் கொடுமையைச் செயலாக்குவது நான்தானே?’ என்ற உண்மையை உணராத குருட்டுத்தனம் இவைதான் இவனையும் குற்றவாளியாக ஆக்குகின்றன.
ஏறத்தாழ 60 லட்சம் யூதர்களை அவர்கள் யூதர்கள் என்ற ஒரே காரணத்துக்காகக் கொன்று குவித்த ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டபின், மன்னிக்கவே முடியாத அவனது கொடூரமான கொள்கையைச் செயலாக்கிய அவனது அமைச்சர்கள், ஆலோசகர்கள், அதிகாரிகள், ராணுவத்தினர் எல்லோரும் சொன்னது இதுதான். “எங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாங்கள் நிறைவேற்றினோம். அவ்வளவுதான்.”
அவ்வளவுதானா?
மௌனம் வேண்டாம்
உண்மையை உரக்கச் சொல்வோர், நிமிர்ந்து நின்று நீதிக்காகக் குரல் எழுப்புவோர், ஏழை எளிய மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடுவோர் என்று நல்லவர்கள் துன்புறுவது எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் தொடர்கின்ற கொடுமை என்றால், நாம் கொள்ளவேண்டிய முன் எச்சரிக்கை என்ன? அப்படியான கொடுமைகளைத் தவிர்த்து எப்படி வாழ்வது?
இந்த நான்கு பேரையும் குற்றவாளி கள் ஆக்கும் குணங்களில் ஒன்று நம்மிடம் இருந்தால்கூட நாம் எச்சரிக்கை கொள்ளவேண்டிய தருணம் அது. நாம் விழக்கூடிய பாதாளம் அதுவே. குற்றம் அறியாத ஒரு நல்லவரின் சாவுக்குக் காரணமாகவோ, உடந்தையாகவோ இருக்கும் பெரும் பாவத்தை இப்படித் தான் கண்டுணர முடியும். அநீதியைக் கண்டும் காணாமல் இருப்பதும் பாவமே.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com