ஆனந்த ஜோதி

இயேசுவின் உருவகக் கதைகள் 47: அன்பு கமழும் அனுபவங்கள்

எம்.ஏ. ஜோ

இயேசு இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அவரது நண்பர்களின் வீட்டில் நடந்த அன்பு கமழும் நிகழ்வு முக்கியமானது. இயேசு உயிர்ப்பித்த லாசரும் அவனது சகோதரிகள் மார்த்தாவும் மரியாவும்தான் இயேசுவை அழைத்து விருந்தளித்தனர்.

இறந்தோருக்குக்கூட உயிர் தரும் இவர் நிச்சயமாக மீட்பராகத்தான் இருக்க வேண்டும் என்று மக்கள் நம்பத் தொடங்கியிருந்தனர். இதைப் பார்த்து கடும் சினம்கொண்ட யூதத் தலைவர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டினர். இயேசுவை மட்டுமல்ல, அவரால் மீண்டும் உயிர் பெற்ற லாசரையும் கொல்லத் தீர்மானித்தனர்.

இந்தச் சூழலில்தான் லாசர் வீட்டுக்கு இயேசு வந்தார். தன் சகோதரனுக்கு மீண்டும் உயிர் தந்த தன் அன்புப் போதகர் இயேசுவுக்கு மார்த்தா மகிழ்ச்சியோடு விருந்து தயாரித்துப் பரிமாறினார்.

நமக்கு எதனில் திறமை உண்டோ, அதனால் எதனை நாம் எளிதாய், இனிதாய்ச் செய்ய முடியுமோ, அதன் மூலம்தான் நாம் அன்பு செய்வோருக்கு நமது அன்பை வெளிப்படுத்துவோம். ஓவியர் அழகான ஓவியம் ஒன்று தீட்டி தான் நேசிப்பவருக்குப் பரிசளிக்கலாம். கவிஞர் நேர்த்தியான கவிதை ஒன்றை எழுதி தன் காதல் மனைவிக்கு வழங்கலாம். மார்த்தாவும் இயேசுவுக்கான உணவைத் தயாரிக்க இப்படித்தான் திட்டமிட்டிருந்தாள்.

மார்த்தாவின் இளைய சகோதரி மரியா இயேசுவின் மீது தனக்கிருந்த அன்பை வெளிப்படுத்த பல நாட்களாய்த் தான் பத்திரமாய் வைத்திருந்த நறுமணத் தைலம் ஒன்றை நிறைய எடுத்து வந்து, இயேசுவின் காலடிகளில் பூசி, தன் கூந்தலால் துடைத்தார். அதன் நறுமணம் அந்த இல்லம் முழுவதையும் நிறைத்தது. அந்த நறுமணத் தைலத்தின் விலை உழைப்பாளி ஒருவர் ஓர் ஆண்டு முழுவதும் உழைத்துச் சம்பாதிக்கும் ஊதியத்திற்குச் சமம். ஆனால் அதன் விலையைப் பார்க்காமல், அதன் அளவைப் பார்க்காமல் தன் அன்பிற்குரிய இயேசுவின் காலடிகளில் அதனைப் பூசினார் மரியா.

இயேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாசுக்கு இதை காணப் பொறுக்கவில்லை. “இந்த தைலத்தை விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான்.

மரியாவைத் தடுக்காதீர்

தன் மீதிருந்த அன்பை வெளிப்படுத்த இப்படியொரு அரிதான, அழகான ஒன்றைச் செய்த மரியாவை தன் சீடர்களில் ஒருவரே குறை சொல்வதைப் பார்த்த இயேசு, “மரியாவைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னார். அவருக்கு ஆதரவாக இன்னும் இரண்டு காரியங்களையும் சொன்னார். இறந்தவரின் உடலைக் கல்லறையில் அடக்கம் செய்யும் முன் நறுமணத் தைலம் பூசுவது வழக்கம். யூதத் தலைவர்கள் இயேசுவைக் கொல்ல வழி தேடிக் கொண்டிருப்பதால் அவரது இறப்பு விரைவில் நிகழக்கூடும் என்பதை உணர்ந்த மரியா, அதனை நினைவில் கொண்டு இதனைச் செய்திருக்க வேண்டும் என்றார் இயேசு.

காலடிகளில் பூசிய தைலத்தை விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாமே என்று சொன்ன யூதாசு, ஏழைகளின் மீது அக்கறை கொண்டவன் அல்ல. பணத்தின் மீது பேராசை கொண்டவன். இயேசுவின் சீடர்கள் குழுவில் பொருளாளராக இருந்த அவனிடமே பணப்பை இருந்தது. சீடர்கள் யாவருக்கும் உரிய அந்த பொதுப் பணத்தில் இருந்து அவ்வப்போது தனக்கென்று பணத்தைத் திருடிய திருடன் அவன் என்பதும் இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எப்படியெல்லாம் திருடி பணம் சேர்க்கலாம் என்று சிந்திக்கும் ஒருவனுக்கு ஏழைகள் மீது அக்கறை எப்படி வரும்? சேர்த்து வைப்பதிலே குறியாய் இருக்கும் ஒருவனுக்கு கொடுக்க எப்படி மனம் வரும்? ஏழைகளைப் பற்றி அவன் சொன்னது தன் பணத்தாசையை மறைக்க அவன் பயன்படுத்திய தந்திரம்தான்.

வலிமிகுந்த வெற்றிடம்

எப்போது ஒரு மனிதனுக்கு பணம் இவ்வளவு முக்கியமான ஒன்றாக மாறிவிடுகிறது? மனித மனத்திற்குக் கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காத போது. அன்பு கிடைக்காததால் ஏற்படும் வலி மிகுந்த வெற்றிடத்தை பணத்தைக்கொண்டு நிரப்பிவிடலாம் என்று இவர்கள் தப்புக் கணக்கு போடுகின்றனர்.

அன்பைத் தரவும் பெறவும் முடிந்தவர் களுக்கு அன்புக்கு இணையானது எதுவுமில்லை என்பது புரிந்துவிடுகிறது. இவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த நினைக்கும்போது, ஒன்றின் விலையை ஒருபோதும் பார்ப்பதில்லை. அன்பில்லாத வர்களின் கண்களுக்குத்தான் விலையும் செலவும் பணமும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன.

ஈஸ்வர சந்தான மூர்த்தி எழுதிய கவிதை ஒன்று இருக்கிறது. ‘உடைந்துபோன நிலைக்கண்ணாடிக்காய் / வீடே அலறும்படிக் கத்துகிறோம் / நானும் அவளும் / ஆனால் / ஒவ்வொரு துண்டாய் எடுத்து / ஒட்ட வைக்கிறாள் மகள் / முகம் நிறையப் புன்னகை சுமந்து / துண்டுகளை அவள் நேர்த்தியாக்குகிறாள் / அவள் எப்போதும் எல்லாவற்றையும் / நட்போடு தான் பார்க்கிறாள் / நாங்கள்தான் காசாகப் பார்க்கிறோம்.'

ஏழை, எளியோர், நோயுற்றோர், பாவிகள் என்று அனைவரையும் அன்பு செய்த இயேசுவுக்கு அன்பின் அருமை புரியாதா என்ன? எனவேதான் மரியாவின் அன்புச் செயலுக்கு ஆதரவாக அவர் இருந்தார். இறப்பு அருகில் நின்று அச்சுறுத்தும் இறுக்கமான ஒரு சூழலில் தனக்குக் கிடைக்க வேண்டிய அன்பை அதன் மதிப்பை அறியாத சீடன் தடுத்தபோது அவர் அனுமதிக்கவில்லை.

அன்பின் நறுமணம்

யூதாசைப் போன்று பணமே முக்கியம் என்று நம்பி ஏமாந்து போகாமல், ஏழைகள் என்று வெறும் பேச்சுக்காக எதையோ சொல்லி ஏமாற்றாமல், மரியாவைப் போன்று அன்பின் மகத்துவத்தை உணர்ந்த ஞானிகளாய் நாமிருக்க வேண்டும். அன்பின் அருமை புரியாமல் பேசுவோர் சொல்வதைப் புறந்தள்ளி, அன்பின் நறுமணம் அகிலம் எங்கும் பரவும் அன்புச் செயல்களை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். “அன்பு கமழும் மென்மையான அனுபவம் எல்லாம் / அழகு வாய்ந்த இனிமையான நினைவுகள் எல்லாம்” என்ற வரிகள் வரும் ஆலயப் பாடல் ஒன்று யூடியூபில் உள்ளது. “மன்னவா உன் வாசல் தேடி” என்று அது தொடங்குகிறது. இத்தகைய அனுபவங்களைத் தரவும் பெறவும் நமக்கு இறையருள் வாய்க்க வேண்டும்.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

SCROLL FOR NEXT