“மனிதர்களின் செயல்கள், சிந்தனையால் இயக்கப்படுவதே சரியானது" என்றார் சுவாமி பார்த்தசாரதி. குரு பூர்ணிமா (ஜூலை 24) தினத்தை ஒட்டி வேதாந்தா அகாடமி நிறுவனம் குரு பூர்ணிமா சிறப்பு சொற்பொழிவை ஒருங்கிணைத்திருந்தது. இணையவழியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ‘உங்கள் தேர்வுகளின்படி வாழுங்கள், தானாக அமைந்தபடி அல்ல’ (Live by Choice Not by Chance) என்னும் தலைப்பில் சுவாமி ஏ.பார்த்தசாரதி உரையாற்றினார். சுவாமி பார்த்தசாரதி கூறியதாவது:
“தாவரங்களோ விலங்குகளோ தேர்வுகளை மேற்கொள்ள முடியாது. ஒரு புலி தாவரங்களை உண்டு வாழ முடியாது. ஒரு பசுமாடு இறைச்சியை உண்ண முடியாது. மனிதனால் மட்டும்தான் எதைச் செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து வாழ முடியும்.
ஒருவர் எந்தத் துறையில் செயல்படப் போகிறார் என்பதற்கான தேர்வு அவருடைய ஸ்வதர்மத்துக்கு ஏற்றதாக, அதாவது அவருடைய இயல்புக்குப் பொருந்துவதாக அமைய வேண்டும். பரதர்மத்துக்குரியதாக அதாவது இயல்புக்கு பொருந்தாததாக அமையும் துறையில் வெற்றியடைய முடியும். ஆனால், மனநிறைவைப் பெற முடியாது. ஸ்வதர்மத்துக்கு ஏற்ற துறையைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தேர்வினால் உந்தப்பட்ட சரியான செயலாக இருக்க வேண்டும். எது சரியான செயல்?
உடல்தான் செயலை நிகழ்த்தும் கருவி. ஆனால் உடல் தானாக செயல்படுவதில்லை. மனம் அல்லது சிந்தனைதான் செயலை இயக்குகிறது. காலையில் அதிக நேரம் உறங்குவது, மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கி தொழில் நடத்தி வாழ்வது. நீரிழிவு நோய் இருந்தாலும் இனிப்புகளை உண்பது - இவை எல்லாம் மனதுக்கு பிடித்தவையாக இருக்கும். வசதியானவையாக இருக்கும். தினமும் அதிகாலையில் எழுவது, உடற்பயிற்சி செய்வது, வேத நூல்களைப் படிப்பது இவை எல்லாம் மனதுக்கு அசதியைத் தரலாம். ஆனால் இவையெல்லாம்தான் செய்யப்பட வேண்டியவை என்பது பிரித்தறியும் சிந்தனைக்கு (Discriminative Intellect) தெரியும்.
உங்களுக்கு விருப்பமானது எதுவோ அதைச் செய்ய சொல்வது மனம். நீங்கள் செய்ய வேண்டியது எதுவோ, அதைச் செய்யச் சொல்வது சிந்தனை. நம்முடைய செயல்கள் மனம் சார்ந்தவையாக அல்லாமல் சிந்தனை சார்ந்தவையாக இருந்தால் நம் வாழ்வு செழிக்கும். 100 சதவீதம் பிரித்தறிந்து, சிந்தித்து செயல்படுகிறவர்கள் மகத்தான வாழ்வை வாழ்வார்கள்.
அறிவு (intelligence) வேறு, சிந்திக்கும் ஆற்றல் (Intellect) வேறு. அறிவை நீங்கள் ஆசிரியர்களிடமிருந்து, நூல்களிலிருந்து பெற முடியும். சிந்திக்கும் ஆற்றலை நீங்களேதான் வளர்த்துக்கொள்ள வேண்டும். வெளியிலிருந்து யாரும் கற்றுத் தர முடியாது. அறிவு தேவைதான் ஆனால் சிந்தனை இல்லாத அறிவு, எந்தப் பயனும் தராது. உங்கள் அறிவைப் பயன்படுத்த சிந்தனை அவசியமானது.
மனம் விரும்பியபடி வாழ்கிறவர்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள். நன்கு சிந்தித்து சரியான செயலைத் தேர்ந்தெடுத்து, அதன்படி வாழ்கிறவர்கள் இன்பத்துடன் வாழ்வார்கள். தாவரங்களுக்கு உடல் மட்டுமே உள்ளது. விலங்குகளுக்கு உடலும் மனமும் உள்ளன. மனிதர்களுக்கு மட்டுமே உடல், மனம், சிந்தனை ஆகிய மூன்றும் உள்ளன. மனிதர்கள் சிந்தனையைப் பயன்படுத்தி வாழ வேண்டும். சிந்தித்து சரியான செயல்களைத் தேர்ந்தெடுத்து, அதன்படி செயல்பட்டு வாழ வேண்டும். தானாக அமைந்த வாழ்வை வாழக் கூடாது.”
தொகுப்பு: கிருஷ்ணன்