இவர் பெயர் தும்புரு. இவர் காசியப முனிவருக்கு மூத்த மகனாக மனித உடலும் குதிரை முகமுமாக அவதரித்தவர். நாரதர் இவருடைய குரு. நாரதரைப் போலவே இசையில் வல்லவர். நாரதரின் இசைக்கு ‘நாரத கானம்’ என்றும், தும்புருவின் இசைக்கு ‘தேவகானம்’ என்றும் பெயர். இவர் கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் ஆகியோரின் தலைவர். இவர்களில் சிலர் பறவை உடலும் மனித முகமும் கொண்டவர்கள். ஒருமுறை நாரதர், தும்புருவின் கையில் வைத்து இருந்த பொன்னும், மணியும் பதித்த வீணையைக் கண்டு விவரம் கேட்க, பூலோகத்தில் ‘ப்ராசீனபர்ஹி’ என்ற பேரரசனைப் புகழ்ந்து பாடியதால் கிடைத்தது என்கிறார்.
நாரதர், கோபத்துடன் இறைவனைத் தவிர நரஸ்துதி கூடாது எனத் தெரியாதாவென்று கேட்டார். தும்புரு பூலோகத்தில் போய் வீழவேண்டுமென்று சாபமும் இட்டார். திருப்பதி திருமலையில் உள்ள கோண தீர்த்தம் என்னும் பகுதியில் தும்புரு வீழ்ந்தார். இதுவும் இறைவனின் திருவுளமே என்று நாராயணனைத் துதித்து பரமபதம் அடைந்தார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்க அதுவும் நிறை வேற்றப்பட்டது. அன்று முதல் கோண தீர்த்தம் தும்புரு தீர்த்தம் ஆனது. தும்புருவின் கையில் உள்ள வீணையின் பெயர் களாவதி ( மகதி ).
தும்புருவைப் போலவே மனித உடல், குதிரை முகம், கையில் வீணையுடன் உள்ள உருவத்தை ‘சிரோன்’ என்று இசைத் தெய்வமாக கிரேக்கர்கள் கொண்டாடுகின்றனர். தும்புரு தேவகானம் பாட, நந்தி தேவர் மத்தளம் இசைக்க, பதஞ்சலியும், வியாக்ரபாதரும் அதைக் கண்டு ரசிக்கும் பாங்கில் எப்போதும் ஆடும் நடராஜர் திருவடி அருகில் இருக்கும் பேறுபெற்றவர்கள்.
நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் திருக் கோவிலில் ரங்க விலாசத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு வடக்குப் பிரகாரத்தில் இவர் காணப்படுகிறார். இவரது வித்தியாசமாக கிரீடமும், சுருண்ட அலைஅலையாக காணப்படும் தலைமுடியும், கழுத்திலும் கரங்களிலும் இடையிலும் வித்தியாசமான அணிமணிகளும், இடையில் உள்ள ஆடைகள் காற்றில் பறப்பதுபோல அற்புதமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. வலது கரத்தால் வீணையை மீட்டியபடி அதற்கேற்ப இடது கரத்தை அசைத்துக்கொண்டு, தேவகானம் பாடும் தோரணையும், முகத்திலும் கண்களிலும் மகிழ்ச்சியையும் அப்படியே கல்லில் வடித்த சிற்பியின் கலைத் திறனையும் என்ன சொல்லி பாராட்ட. நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவில் தூண் ஒன்றிலும் வீணையை இரு கைகளாலும் மீட்டியபடி காட்சி தருகிறார் தும்புரு.