தவ வாழ்க்கை வாழ்ந்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களுக்கு அறநெறிகளையும் அருளுரைகளையும் வழங்கிய மகா பெரியவரின் வாழ்க்கை, ஆளுமை ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இந்த நூலில் உள்ள ஐம்பது கட்டுரைகள் வழியாகக் கிடைக்கின்றன. ‘மகா பெரியவா – சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை’ என்ற தலைப்பில் இந்நூலை வீயெஸ்வி எழுதியுள்ளார்.
பாலப் பருவத்தில் சுவாமிநாதன் என்ற பெயரைப் பெற்றிருந்தது, துறவறம் மேற்கொண்டது, சங்கீத ஞானம், ஆசிரியரின் பரிசோதனை, முறுக்குப் பாட்டியுடன் சண்டை, சதாராவில் நடராஜர் கோயில், அன்பின் சக்தி, அம்பாள் கவலையை அழிச்சுட்டா, சகலமும் ஈஸ்வரார்ப்பணம், லோகத்துக்காக பாடு என்று மதுரை சோமுவுக்கு அருளியது, பிரபஞ்சமும் லிங்கோத்பவரும், நாம் வேறு பிறர் வேறு அல்ல, நரிக்குறவர்களிடம் அன்பு காட்டியது, முக்தி மண்டப சபை, புதுக்கோட்டை விஜயம், சிவன் கட்டளைகள், தாயாரின் மறைவு, கம்பனும் காஞ்சியும், கனகாபிஷேகம், பிருந்தாவன பிரவேசம் என்று மகா பெரியவரின் பால பருவம் முதல் அவரது ஆன்மா இறைவனடி சேரும் சமயம் வரையிலான அனைத்து நிகழ்வுகளும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
பல துறைகளில் மகா பெரியவருக்கு இருந்த ஈடுபாடு, புலமை பற்றியும் விரிவாக இந்நூல் உரைக்கிறது. வாழ்க்கைச் சம்பவங்களைத் தெளிவாக விளக்கும் விதமாக கேசவ்-ன் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
எப்போதும் மனத்தை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக்கொண்டிருந்தால், சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்; இது அனைவருக்கும் சித்திக்கும். பகவத் சேவை செய்வதும் மனிதர்களின் நன்மைக்குத்தான்; தினமும் ரெண்டு வேளையும் சகஸ்ரநாமம் சொல்லணும். இவை போன்ற மகா பெரியவரின் பொன் மொழிகளும் இந்த நூலில் கிடைக்கின்றன.