உபரிசரவசு என்ற அரசன் தர்மத்தின் வழியில் ஆட்சிபுரிந்தவன். அவனது நீதி தவறாத நெறியைக் கண்டு மகிழ்ந்த தர்மதேவதை, தரையில் கால் பாவாமல் சஞ்சரிக்கும் வரத்தை அருளினார்.
ஒருசமயம் உபரிசரனின் ஆட்சிக் காலத்தில், யாகத்துக்கு பசுவைப் படைப்பது குறித்து ரிஷிகளுக்கும் தேவர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தானியங்களைக் கொண்டு ஒரு யாகப் பசுவை உருவாக்கி, அதற்குரிய மந்திரங்களைப் பிரயோகித்து அதையே அவிசாக யாகத்தில் அளிப்பதற்கு ரிஷிகள் தீர்மானித்தனர். தேவர்களோ அதை எதிர்த்தனர்.
இந்தப் பிரச்சினை நீதிமானான உபரிசரவசு முன்னர் வந்தது. “என் கையை வெட்டினால் எனக்கு வலிக்கிறது. துக்கம் தாங்கமுடியாமல் உள்ளது. சுகம், துக்கம், பயம், தாகம், பசி, வலி, காமம் அனைத்தும் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் பொதுவானது. மனிதர்கள் நமக்குப் பூமியில் வாழ உரிமை இருப்பதுபோல மிருகங்களுக்கும் பூமியில் வாழ பூரண உரிமை இருக்கிறது.” என்றார். இதனால் தேவர்கள் கோபம் கொண்டு அரசனுக்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த ஆகாய மார்க்கமாகச் செல்லக்கூடிய வரத்தைத் திரும்பப் பெற்றனர்.
இறைவனால் படைக்கப்பட்ட எவ்வுயிரையும் மாய்க்கும் சக்தியை நாம் பெறவில்லை. என் உயிரைப் போலே மண் உயிரை காப்பேன். எனக்கு நீங்கள் சாபமிட்டாலும், அதை ஏற்கிறேன் எனத் தேவா்களைப் பார்த்துக் கூறினான் உபரிசரவசு.
இப்படி, உபரிசரனுக்கு இருந்த உயிர்கள் மீதான கருணை அடியாள் எனக்கு இல்லையே சுவாமி என்று கூறி, தான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லையென்று, மக்கள் உய்ய வேண்டுமென்ற காருண்யத்துடன் விளங்கிய ராமானுஜரிடம் ஜீவகாருண்யத்தின் மேன்மையை விவரிக்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com