மார்க்கண்டேயன் என்னும் பக்தனுக்காக, காலனைக் காலால் கடிந்த தலம் திருக்கடவூர். அந்தச் சிவபக்தன் பாணாபுரத்திலுள்ள பாணபுரீசுவரரை வழிபட்டு, சிவனின் வழிகாட்டுதலைப் பெற்றுத்தான் திருக் கடவூரை அடைந்ததாக கருதப்படுகிறது.
ராமன், வனவாசத்தின் பொருட்டுத் தண்டகாரணியத்தில் சில காலம் தங்கினார். அங்கேதான் ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். கவர்ந்த சீதையைத் தேடி தென்திசை நோக்கி ராமன் பயணித்தார். அப்படிச் செல்கையில் ஒருநாள் பாணாபுரத்தை அடைந்தார். அங்கு பாணபுரீசுவர லிங்கத்தைக் கண்டு வழிபட எண்ணினார். அங்கே அப்போது தீர்த்தம் இல்லை. ஆகவே ராமன் சிவலிங்கத்துக்குத் தெற்கே பூமியில் அம்பு எய்தார். அம்பு துளைத்த இடத்தில் ஓர் குளம் உண்டாயிற்று.
அக்குளத்திலிருந்து தீர்த்தம் எடுத்து லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வில்வத்தால் அர்ச்சித்தார். ராமன் பூஜைக்கு மனமிறங்கிய ஈசன், உனக்கு என்ன வரம்வேண்டும் கேள் என்றருளினார். சீதை இருக்கும் இடம் எனக்குத் தெரிய வேண்டும் என்றார். தென்திசையில் சென்று வானரர் களின் நட்பைப் பெற்று இலங்கைக்குச் செல்ல வழிகாட்டியதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது. இப்படியாக ராமன் வழிபட்ட பழமையான திருக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் மிகக் கம்பீரமாக வாணாபுரம் எனும் பாணாபுரம் கிராமத்தில் உள்ளது.
பாணபுரீசுவரர் அபிராமி அம்பிகை
கோபுர தரிசனத்தை முடித்து முன்மண்டபம் சென்றால் பலிபீடம், நந்தியைத் தரிசிக்கலாம். அடுத்து மகாமண்டபம், இதன் நுழைவுவாயிலின் மேலே அழகிய சுதைச் சிற்பத்தைக் காணலாம். பாணபுரீசுவரரை ராமன் வில்வம் கொண்டு அர்ச்சிப் பதையும் அருகே லட்சுமணர் நிற்பதையும் காண்கிறோம். மகாமண்டபத்தின் கிழக்கே அர்த்த மண்டபத் துக்கு உள்ளே கரு வறையில் பாணபுரீசுவரர் பெரிய பாணத்திருமேனி யுடன் விளங்கியருள்கிறார்.இதற்கு வடக்கே அபிராமி அம்பிகை சன்னிதி, தெற்குமுகமாக அமைந்துள்ளது.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய திருக் குடந்தைப் புராணத்தில் கும்பேஸ்வரர் படலத்தில் 16 முதல் 20-ம் பாடல் வரை அமைந்த பகுதியில் பாணாபுரம் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. மேலும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய, திருவிடைமருதூர் தலபுராணத்திலும் பாணாபுரம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.