எதிர்பாராமல் எங்கோ சந்தித்த ஒருவரோடு தயக்கமின்றி, மனம் திறந்து உரையாடியதால் பெரும் மாற்றம் நிகழ்ந்த அனுபவம் நம்மில் சிலருக்கு வாய்த்திருக்கலாம். இயேசு, வலியப்போய் ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து, அந்த உரையாடல் நீண்டுகொண்டே போய், இறுதியில் அவள் முற்றிலும் மாறிப் போன நிகழ்ச்சி ஒன்று பைபிளில் இருக்கிறது.
இயேசு ஒருமுறை சமாரியா மாநிலத்தில் இருந்த சிக்கார் எனும் ஊருக்குச் சீடர்களோடு வந்தார். சீடர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்வதற்காக நகருக்குள் செல்ல, தனியாக இருந்த இயேசு களைப்பாக உணர்ந்ததால் ஒரு கிணற்றின் ஓரத்தில் அமர்ந்தார். மதிய நேரம் என்பதால் வெயிலின் தாக்கமும் இருந்தது.
அந்த வேளையில் சமாரியப் பெண் ஒருவர் அந்தக் கிணற்றில் நீர் சேந்த வந்தார். இயேசு அவரிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடு” என்றார். பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்ட ஒரு சமுதாயத்தில், அதுவும் யூதர்கள் வெறுத்து ஒதுக்கிய சமாரிய இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிடம் இயேசு குடிக்கத் தண்ணீர் கேட்டது அவளுக்கு வியப்பைத் தந்தது. “நீர் யூதர். நானோ சமாரியப் பெண். என்னிடம் நீர் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று அவள் கேட்கிறாள். “உன்னிடம் தண்ணீர் கேட்பது உண்மையில் யார் என்று உனக்குத் தெரிந்தால், நீ அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் உனக்கு வாழ்வு தரும் நீரைத் தந்திருப்பார்” என்கிறார் இயேசு.
வாழ்வு தரும் தண்ணீர் எது என்பது அவளுக்குப் புரியவில்லை. அந்தக் கிணற்று நீரைத்தான் குறிப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு “இந்தக் கிணறு ஆழமானது. தண்ணீர் சேந்த உம்மிடம் ஒன்றுமில்லை. வாழ்வு தரும் தண்ணீர் எப்படி உமக்குக் கிடைக்கும்?” என்று அப்பெண் கேட்கிறாள்.
மறுமுறை தாகம் ஏற்படாது
தான் பேசுவது சாதாரண கிணற்று நீரைப் பற்றி அல்ல என்பதை உணர்த்த இயேசு சொன்னார், “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் வழங்கும் வாழ்வு தரும் தண்ணீரைப் பருகுபவருக்கு அதன்பின் தாகம் ஏற்படாது. அது அவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி, அவருக்கு நிலைவாழ்வை அளிக்கும்” என்றார்.
மீண்டும் மீண்டும் தாகம் எடுப்பதனால் தானே தினமும் தண்ணீர் சேந்த கிணற்றுக்கு வர வேண்டியிருக்கிறது? எனவே அவள் சொன்னாள், “ஐயா, அப்படியானால் எனக்கு அத்தண்ணீரைத் தாரும். அதை நான் பருகினால், அதன் பிறகு எனக்குத் தாகம் ஏற்படாது. தினமும் நான் இந்தக் கிணற்றைத் தேடிவர வேண்டியதில்லை” என்றாள்.
“நீ போய் உன் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வா” என்று இயேசு சொல்ல, “எனக்குக் கணவர் இல்லையே” என்றாள் அவள். அதற்குப் பதிலாக இயேசு சொன்னதுதான் அவள் கண்களைத் திறக்கின்றன. “கணவர் இல்லை என்று நீ சொல்வது சரிதான். முன்பு உனக்கு ஐந்து கணவர்கள் இருந்தாலும், இப்போது உன்னுடன் வாழ்பவர் உன் கணவர் இல்லை. எனவே நீ சொன்னது உண்மைதான்” என்றார் இயேசு.
“ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் என் பதைக் கண்டுகொண்டேன்” என்கிறாள் அப்பெண். வழிபடும் இடம் பற்றிய புரிதலில் யூதருக்கும் சமாரியருக்கும் இருந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய அப்பெண், இவை அனைத்தையும் பற்றி விளக்கிச் சொல்ல மீட்பர் வருவார்” என்கிறாள். “உன்னோடு பேசிக்கொண்டி ருக்கும் நான்தான் அந்த மீட்பர்” எனச் சொல்கிறார் இயேசு.
உலகின் மீட்பர்
உணவு வாங்கப் போன சீடர்கள் திரும்பி வந்தனர். கொண்டுவந்த குடத்தை அங்கேயே விட்டுவிட்டு அப்பெண் ஊருக்குள் சென்று, “என் வாழ்வில் நடந்த யாவற்றையும் என்னிடம் சொன்ன அரிய மனிதரை வந்து பாருங்கள். நாம் இத்தனைக் காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் மீட்பர் இவர்தானா?” என்று மக்களிடம் சொல்ல, அவர்கள் கிணற்றோரம் அமர்ந்திருந்த இயேசுவைக் காணக் கூட்டமாக வந்தனர். அவரைப் பார்த்த பலர், அவர்மீது நம்பிக்கை கொண்டு, தங்களோடு தங்குமாறு அவரை அழைத்தனர். இரண்டு நாட்கள் அங்கு தங்கி, அந்தப் பெண்ணிடம் பேசியதுபோல அவர்களிடமும் இயேசு பேச, பலர் அவர்தான் உலகின் மீட்பர் என்று நம்பி அவரை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி நமக்குச் சொல்வது என்னவாக இருக்கலாம்? கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துப் போக காலையிலோ அல்லது மாலையிலோ பெண்கள் குழுவாக வருவதுதான் அந்தக் காலத்து வழக்கம். இந்தப் பெண் மதிய நேரத்தில் தன்னந்தனியாக தண்ணீர் எடுக்க வந்ததற்கு அவள் வாழ்ந்த துயரமான வாழ்க்கை காரணமாக இருந்திருக்கலாம். ஐந்து கணவர்களோடு வாழ்ந்துவிட்டு, கணவன் அல்லாத ஒரு ஆணோடு வாழும் அப்பெண்ணின் வாழ்க்கை விலக்கப்பட்டதாக கருதப்பட்டி ருக்கலாம்.
மனித மனத்தின் தாகம் உண்மையான, நிலையான அன்புக்குத் தொடர்ந்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறது. அப்படியான சூழலில் சிக்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் பேதைமையை கடுஞ்சொல் சொல்லாமல் அவளது இதயத்துக்கு இயேசு உணர்த்தினார்.
எனவே இயேசு குடிதண்ணீர் கேட்டது, தனது தாகத்தைத் தணிப்பதற்கு அல்ல. அவளது தாகம் தீர வேண்டுமானால், அவள் இறைவனைக் கண்டுகொள்ள வேண்டும்; இறைவன் அனுப்பிய மீட்பரைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதைப் புரியவைக்கவே, இயேசு அவளோடு பேசத் தொடங்கினார்.
நமது மனத்தின் இருள் அடர்ந்த பகுதிகளை எதிர்கொள்ளும் துணிவின்றி நாமும் ஓடிக்கொண்டே இருக்கலாம். எவரெவரையோ, எதை யெதையோ தேடிக்கொண்டே இருக்கலாம். எவ்வளவுதான் ஓடி எதையெதையோ தேடினா லும் நமது தாகம் தீர்வதில்லை. “இறைவா, எங்கள் இதயம் உமக்காகப் படைக்கப்பட்டது. எனவே உம்மில் நிலை கொள்ளும்வரை எங்கள் இதயத்துக்கு ஓய்வே இல்லை” என்றார் புனித அகஸ்டின்.
நம் மனத்தின் தாகத்தைப் புரிந்து கொண்டு நம்மைத் தேடிவரும் இறைவனிடம் நாம் தொடர்ந்தவொரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும். நாம் எதிர்கொள்ளத் தயங்கும், நம்மைப் பற்றிய கசப்பான உண்மைகளை, அவர் சுட்டிக்காட்டும் போது நாம் ஏற்றுக்கொண்டு, இறைவ னிடத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அது நிகழ்ந்தால் அப்பெண்ணைப் போல, நாமும் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com