ஸ்ரீ வரமங்கலநகர், தோத்தாத்ரி, ஆதிசேஷன் தவமியற்றியதால் நாகணைசேரி, இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்குநேரி எனப் பெயர் பெற்ற திருத்தலம் வானமாமலை ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் பெருமாள், தெய்வநாயகப் பெருமாள் என்ற திருநாமத்துடனும், தாயார் ஸ்ரீ வரமங்கை நாச்சியார் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தின் மண்டபத் தூண் ஒன்றில் காணப்படும் சிற்பம் இது. ஒரு அடி அகலமும், ஒன்றரை அடி உயரமும் உள்ள இந்தச் சிறிய சிற்பத்தில் தான் எத்தனை நுட்பமான வேலைப்பாடுகளைச் செய்துள்ளார் சிற்பி. ஒரு இளம்பெண் கொடிகளை விலக்கிக் கொண்டு தலையைச் சற்றே சாய்த்தும் இடுப்பை வளைத்தும் பார்ப்பது போல் உள்ளது. பெண்ணின் முகத்தில் தலைவனைக் கண்டதால் ஏற்படும் மகிழ்ச்சியை சிற்பி உண்டாக்கியுள்ளார்.
அழகிய கொண்டை, கொண்டையில் காதின் மேல்புறத்தில் இருந்து தோள் வரை தொங்கும் வளையங்கள், காதில் கர்ண குண்டலங்கள், கழுத்திலும், கரங்களிலும், இடையிலும் வித்தியாசமான அணிமணிகளும் சிறப்பாகவும் நுட்பமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வளைந்து, நெளிந்து செல்லும் கொடிகளில் வேலைப்பாடுகள் பிரமிப்பாக உள்ளன. செடி கொடிகள் என்றாலே பாம்பும் இருக்கும் என்பதைப் பெண்ணின் வலது கரத்தின் அருகில் மிகத் துல்லியமாகக் காட்டியுள்ளார் சிற்பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் முதலாம் சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டு, பதினேழாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்ட திருக்கோயில் இது.