ஆனந்த ஜோதி

இறைத்தூதரை வரவேற்கும் மதீனா!

வா.ரவிக்குமார்

அருளாளர்கள் ஒரு இடத்தில் இருப்பதிலும் முக்கியத்துவம் இருக்கிறது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்வதிலும் முக்கியத்துவம் இருக்கிறது. அப்படிப்பட்ட இடப்பெயர்வின்போது இறைத்தூதர் நபி பெருமகனுக்கு (ஸல்) ஏற்பட்ட இடர்களையும் அதை அல்லாவின் துணையோடு அவர் கடந்ததையும் திருக்குர்ஆன் விவரிக்கிறது.

அல்லாஹ் ஒருவரே நம்மை உய்விக்கும் ஒரேவழி என்னும் இறைச்செய்தியை மக்காவை விட்டு இடம்பெயர்ந்து மதினாவுக்கு சென்று பரப்ப நபிபெருமானார் (ஸல்) முடிவுசெய்தார்கள். அதற்காக அல்லாவின் கட்டளைக்காக காத்திருந்தார்கள்.

ஒரு நிசப்தமான இரவில் மக்காவிலிருந்து, மதினாவுக்குச் செல்லுங்கள் என்னும் உத்தரவு நபிகளுக்கு வருகிறது. அன்று இரவு அண்ணல் நபி (ஸல்) வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பே, ஆயுதங்களுடன் எதிரிகள் அவரின் வீட்டை சூழ்ந்துகொள்கின்றனர். அண்ணல் நபி சிறிதும் அஞ்சவில்லை. தன் கரங்களால் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகளின் முன்னிலையில் அண்ணல் நபி வீசினார்.

“அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும் பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடி விட்டோம். ஆதலால் அவர்களால் எதையும் பார்க்க முடியாது” (திருக்குர்ஆன் 36:9)

இந்த வசனத்தை கேட்ட உடனே, எதிரிகள் அனைவரும் அப்படியே உணர்ச்சியற்றவர்களாக ஸ்தம்பித்து நின்றனர். அல்லாஹ், திருமறையில் சொன்னது போல் அவர்கள் கண் திறந்திருந்தும் பார்க்க முடியவில்லை. கைகளில் வாள் இருந்தும் அவற்றை அசைக்க முடியவில்லை. மிகவும் நம்பிக்கையுடன் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார்.

இப்படியாக மதினாவுக்குள் பிரவேசிக்கும் இறைத்தூதரை வரவேற்கும் `தலா அல் பத்ரு அலைனா’ பாடல் பாரம்பரியமாக அரபு மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. பாரம்பரியமாக அரபு மொழியில் எழுதப்பட்ட பாடலின் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாட, அந்தப் பாடலுக்கான தமிழ் வரிகளை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துப் பாடியிருக்கிறார். இஸ்லாமியப் பாடல்களுக்கே உரிய ஆர்ப்பாட்டமில்லாத, ஆழ்கடல் அமைதிக்குத் துணைபோகும் இசையை பாடலுக்கு யுவன் அமைத்துள்ளோர்.

“வாதாவின் மலைகளிலிருந்து / முழு நிலவு எங்கள் முன் உதிக்க

இறைவனிடம் நன்றிகள் பல சொல்லி / தூதரே உங்களை வரவேற்க

தூதரே நீர் இறைவனின் சொல்லை / கடமை ஆக்கி தந்தீரே

சிறந்தவர் நீர் வருகவே / எங்கள் மதீனா கண்ணியம் பெற்றதே..”

என்று அரபு மொழிப் பாடலின் அர்த்தத்தை அப்படியே பொத்திப் பாதுகாத்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஸஃப்ரூன் நிஸார்.

சற்றேறக்குறைய ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக பாலகனாக தம்முடைய மழலை மாறாத குரலில் ஏ.ஆர். அமீன் `மௌலா வா சல்லிம்’ என்னும் பாடலை மணிரத்னம் இயக்கி வெளிவந்த ‘ஓகே கண்மணி’ திரைப்படத்தில் பாடியிருந்தார். இப்போது குரல்வளையில் `மகரக்கட்டு’ நீங்கி, இளம் வாலிபனின் குரல் பாரம்பரியமான `தலா அல் பத்ரு’ அரபு மொழிப் பாடலைப் பாடும் போது நம் காதுகளுக்கு தரிசனமாகிறது!

தலா அல் பத்ரு அலைனா பாடைலக் கேட்க: https://youtu.be/qtoUsx9olis

SCROLL FOR NEXT