இந்தச் சிற்பத்தில் இருப்பவர் யார் என்று கேட்டால் உடனே ஒரு முனிவர் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால், இவர் மூவுலகையும் சுற்றி வரும் திரிலோக சஞ்சாரி, கலகக்காரர், குறும்புமுனி நாரதர் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் குறும்பு முனிவர் சோழர் காலத்தைச் சேர்ந்தவர். சிதம்பரம் கோயில் கிழக்கு கோபுரத்தின் வடக்குப் பகுதியில் தரிசனம் தருகிறார்.
இவர் கையில் வைத்திருக்கும் வீணையின் பெயர் மகதி. இந்த வீணையை மீட்டி உள்ளத்தில் உள்ள அன்புக்கும், பக்திக்கும் இசை வடிவம் தருகிறார். அகத்தியர் தந்த சாபம் ஒன்றால், தேவலோகத்தில் இருந்த வீணை, பூமிக்கு வந்தது என்ற ஒரு புராணக் கதையும் உண்டு. அந்தக் கதையிலும் நாரதரே வீணையை வாசித்தவர்.
இவரது கானத்துக்கு ‘நாரதகானம்’ என்று சிறப்பு பெயர் உண்டு. தலையில் சிவனைப் போல நீண்ட ஜடாமுடி, முகத்தில் நீண்ட தாடி, மீசையுடன் காணப்படுகிறார். கைகளிலும், தோள்களிலும், இடையிலும் வித்தியாசமான அணிமணிகளும் சிறப்பாகவும் நுட்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் உள்ள ஆடையில் மெல்லிய கோடுகள் தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக சோழர்களின் படைப்புகளில் சிவன், அம்மன், முனிபுங்கர்களும் நீண்ட ஜடாமுடியுடன் காணப்படுவார்கள். நாரத முனிவரும் அவ்வாறே காணப்படுகிறார். சோழர்களுக்கே உரித்தான சிம்மம் எங்கும் காணப்படவில்லை... சிறந்த ஞானம், அறிவு பெற்றவர்கள் ஜடா முடியும், நீண்ட தாடி, மீசையுடனும் இருப்பார்கள்.
நாரதரும் ஞானத்திலும், கல்வி கேள்விகளிலும், அறிவிலும், தவத்திலும் சிறந்த வராதலாலும், சதாசர்வ காலமும் மூவுலகையும் சுற்றிக் கொண்டு இருப்பதாலும் சோழர் கால சிற்பிகள் தாடி, மீசையுடன் வடித்துள்ளனர் போலும்.