முல்லா நஸ்ரூதின் தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது ஹக்கீம் ஆரிப் வருகை புரிந்தார். “நலமா, முல்லா. உங்கள் குடும்பத்தினர் சௌகரியமாக இருக்கிறார்களா?” என்று ஆரிப் விசாரித்தார்.
“எனது சௌகரியத்துக்கு ஒரு குறையும் இல்லை. எனது மனைவி பற்றித்தான் வருத்தம் எனக்கு. அவளுக்கு காது கேட்பதில்லை. ஏதாவது மருத்துவம் செய்யமுடியுமா?” என்று கவலையுடன் கேட்டார் முல்லா.
வயோதிகம் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம் என்று கூறிய ஆரிப், தனது மருத்துவமனைக்கு அவரை அழைத்துவந்தால் சோதனை செய்வதாக கூறினார். அதற்கு முன்னர் முல்லாவிடம் வீட்டில் ஒரு சோதனையைச் செய்துபார்க்க ஆரிப் பரிந்துரைத்தார்.
“மாலை வீட்டுக்குப் போகும்போது, வீட்டு வெளிவாசல் கதவில் நின்று உங்கள் மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள். அவர் பதில் அளிக்காவிட்டால், வீட்டின் முன்வாசல் படியில் நின்று கூப்பிட்டுப் பாருங்கள். இப்படி தூரத்தைக் குறைத்தபடி அவரைக் கூப்பிட்டுப் பாருங்கள். அதிலிருந்து அவரது செவித்திறன் குறைபாட்டின் அளவைத் தெரிந்துகொள்ளலாம்.”
நஸ்ரூதீன் மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டை நோக்கி ஓடினார். தனது மனைவி பாத்திமாவின் பெயரைச் சொல்லி வாசல் கதவிலிருந்து அழைத்தார். “பாத்திமா. இன்றைக்கு இரவு உணவு என்ன?”என்று கேட்டார்.
பதில் எதுவும் இல்லாததால், வீட்டின் முன்கதவுக்கு வந்து அதே கேள்வியைக் கேட்டார். அங்கேயும் பதில் இல்லை.
வீட்டுக்குள் நுழைந்து சமையலறைக்குள் போய், பாத்திமாவின் காதில் அதே கேள்வியைக் கேட்டார் முல்லா.
பானையைக் கிளறிக் கொண்டிருந்த பாத்திமா, பாத்திரத்தைக் காட்டி, “உங்களுக்கென்ன செவிடா. எத்தனை தடவை சொல்கிறேன். மீன் அவியல், வாதுமைப்பழ அல்வா செய்கிறேன்.” என்றார்.