ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 72: சூல் உறவு கொண்டேனோ திருக்கோஷ்டியூராரைப் போலே

உஷாதேவி

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளின் தொண்டராக விளங்கியவர் திருக்கோஷ்டியூர் நம்பிகள். இவரிடம் மந்திர உபதேசம் கற்க ராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் வந்தார். சவுமிய நாராயணரை மனதில் நினைத்துப் பிரார்த்தித்து விழுந்து வணங்கி திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகைக்கு விழுந்து வணங்கியபடிக்குச் சென்றார்.

ராமாநுஜரைப் பார்த்ததும் நம்பிகள், ‘யாருக்கு என் சொல்லுவேன்’ என்று கூறி எழுந்து உள்ளே சென்று விட்டார். ராமாநுஜர் நெடுநேரம் நின்று காத்திருந்தார். வேறுவழி தெரியாமல் ரங்கம் திரும்பினார். இப்படியாகப் பலமுறை முயற்சி செய்தும் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மனமிரங்கவில்லை.

ஒருமாத காலம் உணவருந்தாமல் வாடினார். ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் உற்சவத்திற்கு வந்த திருக்கோஷ்டியூராரைப் பார்த்து, அரங்கனே ராமாநுஜருக்கு மந்திர உபதேசம் அளிக்கும்படி கோரினார். தகுதியிருந்தால் மட்டுமே உபதேசிப் பேன் என்று நம்பிகள் பதிலளித்தார்.

சில நாட்கள் கழித்து, ரங்கம் செல்லும் பிராமணர் ஒருவரை அழைத்து, ராமாநுஜரிடம் தண்டும் பவித்திரமுமாக வரச் சொல்லி செய்தி அனுப்பினார். ராமாநுஜர், முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் அழைத்துக் கொண்டு நம்பிகளிடம் சென்று சேர்ந்தார். இப்படி 18 முறை விடாமுயற்சியுடன் நடந்து தன் உபதேசங்களைப் பெற்றார்.

இப்படி நடையாய் நடந்து தான் பெற்ற விஷயங்களின் மேன்மையை உணர்ந்தவர், அனைத்து மக்களும் இவற்றின் பயனை அடைந்து உய்ய வேண்டுமென்று முடிவுசெய்தார் ராமாநுஜர். ‘ஆசையுடையோர் எல்லாம் வாரீர் ஆரியர்காள்’ என்று அழைத்துத் தான் கற்ற ரகசியங்களை உபதேசித்தார். இதைக் கேள்விப்பட்ட நம்பிகள் வெகுண்டெழுந்தார். ‘வாரி இறைத்தீரோ எம் திருவடியில் செய்த சத்தியத்தை மீறினீரோ, இதன் விளைவு தெரியுமோ’ என்று கேள்விகளைத் தொடுத்து, ராமாநுஜருக்கு நரகம்தான் கிடைக்கும் என்று சாபம் இட்டார். ஆனால், ராமாநுஜர், ‘ஆமாம், நரகம் கிடைக்கும். அடியேன் ஒருவன் நரகம் புக, இத்தனை ஜீவாத்மாக்களும் மோட்சம் அடைவார்கள் அல்லவா’ என்று பதில் அளித்தார்.

தெய்வம் மானுட வடிவத்தில் கருணையோடு வந்திருக்கிறது என்பதை உணர்ந்துக்கொண்டார் திருக்கோஷ்டியூர் நம்பி. ராமாநுஜனைப் பார்த்து கைகூப்பித் தொழுதார்.

திருக்கோஷ்டியூராரைப் போல ராமானுஜரிடத்தில் உறவுகொள்ளவில்லையே நான் என தன் அறியாமையை நொந்து கொண்டாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT