வேதங்களையும் திருக்குறளையும் பாரதியின் கவிதைகளையும் ஞானமார்க்கச் செய்தியாக மாற்றிய சுவாமி ஓம்காரானந்தா சமீபத்தில் காலமானார்.
கோவைக்கு அருகே பேரூரில், 1956-ம் ஆண்டு ஜனவரி 17-ம்தேதி, வைத்தியநாத கணபதி, அலமேலு அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். பெற்றோர் வைத்த இயற்பெயர் கோஷ்டேஸ்வர சர்மா. சுவாமி சித்பவானந்தாவிடம் சன்னியாச தீட்சை பெற்றபிறகு சுவாமி ஓம்காரானந்தா சரஸ்வதி ஆனார். வேதங்களில் பண்டிதரான அவரது தந்தையிடம் சிறுவயதிலேயே வேத பாடங்களில் நிபுணத்துவத்தைப் பெற்றார். சுவாமி விவேகானந்தரின் படைப்புகளின் வாயிலாக உருவான ஆன்மிகத் தேடல் அவரைத் துறவுக்கு ஈர்த்தது.
சுவாமி சித்பவானந்தரின் தாக்கத்தால் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு ஏற்பட்டது. சுவாமி பரமார்த்தானந்தாவின் வழிகாட்டலில் வேதாந்தத்தைக் கற்றார். பகவத் கீதை, உபநிடதங்களின் சாரத்தை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படி அவரால் சுவாரசியமாக விளக்கமுடிந்தது. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமானவர், பாரதியார் பாடல்களின் உட்கருத்து களை பசுமரத்தாணி போல கேட்பவர்கள் மனத்தில் பதிக்க அவரால் முடிந்தது.
சாதி, இனம்,வயது, பொருளாதாரம் என்ற எந்த பேதமும் பார்க்காமல் அனைத்து மக்களிடமும் சமபாவத்துடன் பழகியவர் அவர். அவரது உரைகளை, வழிகாட்டுதலைக் கேட்டு, அன்றாட வாழ்க்கையிலும் நேசத்தையும் கனிவையும் மகிழ்ச்சியையும் பலனாக அடைந்தவர்கள் பலர் உள்ளனர். சமூக நலப் பணி களுக்காக வேதாந்த சாஸ்திர பிரச்சார அறக்கட்டளை மற்றும் தக்ஷிணாமூர்த்தி சேவா சமிதி என்ற இரண்டு அமைப்புகளையும் உருவாக்கியவர் அவர்.
வேதாந்த சாஸ்திர அறக்கட்டளை வழியாக தேனியில் முல்லையாற்றின் கரையில் வேதபுரி என்ற குடியிருப்பை உருவாக்கி அங்கே சித்பவானந்தா ஆசிரமத்தை நிறுவி நடத்திவந்தார். சுவாமி சித்பவானந்தாவைப் பின்பற்றி தமிழ் செவ்வியல் படைப்பான திருக்குறளை வெகுமக்களிடம் ஆன்மிக உரைகள் வழியாக எடுத்துச் சென்றதன் வழியாக ஆன்மிக வரலாற்றில் அவர் பதித்த தமிழ் முத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்.