வங்க நாடக மேடையின் தந்தை என்று அழைக்கப்படும் கிரிஷ் சந்திரகோஷ் மிகச் சிறந்த நாடக ஆசிரியர். இசை அமைப்பாளர். நடிகர், இயக்குனராக ஒளி வீசிய கலைஞர். வடகிழக்கு இந்தியாவின் நவீன நிகழ்த்துக் கலையின் பிதாமகர்.
1884 செப்டம்பர் 21-ம் நாள் கிரிஷ் நடத்திய சைதன்யலீலை என்ற நாடகம் ஸ்டார் நாடக மன்றத்தில் நடைபெற்றது. இந்த நாடகத்தைக் காண அருகிலிருந்த காளி கோயிலின் அர்ச்சகர் ஒருவர் வந்தார். அந்த அர்ச்சகர் வேறு யாருமல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதத்தின் மாபெரும் துறவிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ராமகிருஷ்ண பரமஹம்சர்தான்.
ஒருவர் நாடக மேடையின் ஜொலிக்கும் நட்சத்திரம். மற்றொருவர் ஆன்மிக வானில் சுடர்விடும் விண்மீன். இந்த இரண்டு பெரும் ஜாம்பவான்களின் சந்திப்பு ஒரு பெரும் மாற்றத்துக்கு வித்திட்டது. நாடகம் தத்ரூபமாக இருந்ததாக பரமஹம்சர் சொன்னதாக கிரிஷ் கேள்விப்பட்டார்.
கிரிஷ், உடனடியாக ராமகிருஷ்ணரைக் காணச் சென்றார். கிரிஷ் குனிந்து வணங்க எத்தனிக்கும் முன்ன தாகவே ராமகிருஷ்ணர் கிரிஷைக் குனிந்து வணங்கி னார். உடனே கிரிஷ் குனிந்து வணங்க மறுபடியும் குருநாதர் குனிந்து வணங்கினார். இப்படியே இருவரும் மாறி மாறி வணங்குவதில் ஈடுபட்டனர். கிரிஷ் தமது வணக்கத்தை நிறுத்தும்படி ஆயிற்று. இல்லவிட்டால் மாலைவரை இது தொடர்ந்து நடந்திருக்கும்.
புரட்டிப்போட்ட மரணங்கள்
கிரிஷின் மேதமை என்பது அவரைத் தலைகீழாய்ப் புரட்டிப்போட்ட மரணங்களில் வேர்கொண்டிருந்தது. சிறுவயதில் பெற்றோரை இழந்தார். அவரது சகோதர சகோதரிகளும் அவர் கண்முன்னே ஒருவர் பின் ஒருவராக மாண்டனர். அவரது இரண்டு மனைவியரையும் மரணம் தழுவியது. அவரது குழந்தைகளையும் மரணம் விட்டுவைக்கவில்லை. முடிவற்ற துயரம் அந்தப் புகழ்பெற்ற கலைஞனை குடிப்பழக்கத்தில் கொண்டு தள்ளியது. அவரது எழுத்தின் வீரியமும் வியாபகமும் வீறுகொண்டு எழுவதைக் குடிப்பழக்கத்தால் தடுக்க முடியவில்லை. கிரிஷின் தனிப்பட்ட துயரங்களைக் கேட்ட ராமகிருஷ்ணனர், காளியின் அழகையும் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரது பிறப்பின் நோக்கத்தையும் அவர் அகத்துக்கு உணர்த்தினார்.
கிரிஷின் மீது ராமகிருஷ்ணர் செலுத்திய தாக்கம் வங்க நாடகங்களின் போக்கையே மாற்றி அமைத்தது. வங்க நாடக மேடைக்குப் புத்துயிர் ஊட்டிய புரவலராக ராமகிருஷ்ண பரமஹம்சர் விளங்கியது பலரும் அறியாத செய்தியாகும்.
சில நேரம் கிரிஷ் குடிபோதை யில் இளம் பெண்கள் புடைசூழ நள்ளிரவுக்குப் பிறகும் கூத்தும் கும்மாளமும் நடைபெறும். பின் திடீரென்று நான் குருநாதரைப் பார்க்க வேண்டுமென்று வாடகை வண்டியில் பாய்ந்தேறி பரமஹம்சரை நாடி வருவார். நள்ளிரவில் பரமஹம்சருடன் நடனமாடத் தொடங்குவார். ராமகிருஷ்ணருக்கு இது புதிதல்ல. பயணம் செய்யும்போது வண்டிகளிலிருந்து இறங்கி சாலையில் செல்லும் குடிகாரர்களுடன் நடனமாடிக் களிப்பவர்தான் அவரும்.
நம்மை வருத்தும் பழக்கங்கள்
நம்மைப் பீடித்திருக்கும் பழக்கங்கள், உண்மையில் ஏதோ ஒன்றிலிருந்து வெளியேறவும் உண்மை எதுவெனத் தேடவும் தொடங்கி விரக்தியில் முடிந்ததால் ஏற்பட்டவை என்று ராமகிருஷ்ணர் கூறுவது வழக்கம். கொடுமையான நிஜங்க ளிலிருந்து தப்பித்து அவற்றினும் உயரிய ஒன்றுக்கான தவிப்பும், தேடுதலும் போதை மருந்தையோ, மதுவையோ நாடச் செய்கின்றன. இவர்களை கெட்டவர்கள் என்பீர்களா? அவர்களுக்கு இப்போதிருக்கும் வாழ்க்கையைவிட, உண்மையைவிட உயர்ந்த ஒன்று தேவைப்படுகிறது என்பார் ராமகிருஷ்ணர்.
ஒருமுறை ராமகிருஷ்ணரிடம் கிரிஷ் கேட்டார்: ‘நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்ன செய்யக் கூடும்?’
ராமகிருஷ்ணர் சொன்னார்: ‘இறைவனை ஒரு நாளைக்கு மூன்று தடவை அழைப்பாயாக.’
‘இல்லை… அது என்னால் இயலாது.’
‘இரண்டு தடவை… அல்லது ஒரே தடவை?’
‘இல்லை… நான் உறுதியளிக்க முடியாது.’
‘அப்படியானால் எனக்கு ஒரு அதிகாரப் பத்திரம் (Power of Attorney) எழுதிக் கொடுத்து விடு. உனக்கு நான் கடமைப்பட்டு விடுவேன். உனக்காக நான் பொறுப்பாளி ஆகிறேன். இப்போது உனக்கென்று உறுதி ஏதும் இல்லை. நீ என்ன சொல்வாய். அவர் செய்வது எல்லாம் நான் செய்வதே. அப்படித்தானே? ஆகவே மறுப்பு சொல்லாதே. நான் இதைச் செய்வேன் அதைச் செய்ய மாட்டேன் என்று.’
கிரிஷ் இறுதிவரை அப்படியே வாழ்ந்தார். ராமகிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் தன் பாரத்தைப் போட்டுவிட்டார்.
முதல் சந்திப்பு
முதன்முதலாக பரமஹம்சரைச் சந்தித்த போது கிரிஷ் கூறிய சொற்கள் இரண்டே இரண்டுதான். ‘நான் பாவி’.
‘கீழானவன் எப்போதும் பாவம் பற்றியே பேசுகிறான். பாவியாகிறான்.’ என்றார் ராமகிருஷ்ணர்.
‘குருதேவா! நான் உட்கார்ந்திருக்கும் இந்த இடம் நான் செய்த பாவங்களால் புனிதத்தை இழந்துவிடும்.’
‘அப்படிச் சொல்ல முடியாது’ என்றார் குருதேவர்.
‘ஆயிரம் வருஷங்களாக அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு அறைக்குள் நீ ஒரு சிறிய விளக்கைக் கொண்டுவந்தால், அது கொஞ்சம் கொஞ்சமாக இருளைப் போக்குமா அல்லது உடனே அந்த அறை வெளிச்சமாகி விடுமா?’
கிரிஷின் கண்கள் திறந்தன.
‘நான், ராமகிருஷ்ணர் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று’, என்று கிரிஷ் கூறுவது வழக்கம்.
காளிதேவியின் சிலை முன்பாக வீற்றிருந்த ராமகிருஷ்ணர் காளியின் முன் வைக்கப்பட்டிருந்த நைவேத்தி யத்தை பூனை ஒன்று தின்ன வந்தபோது அதை விரட்டாமல் நைவேத்தியத்தை எடுத்து பூனைக்கு ஊட்டிவிடுகிறார். பூனையின் வடிவத்தில் காளியைக் கண்டதைப் போல் அதன் முன் விழுந்து வணங்குகிறார். வேதாந்தத்தின் உச்சமே எல்லா உயிர்களின் மீதும் காட்டும் கருணையே என்பதைப் புரிந்து கொள்ளாத ஆத்திகர் கூட்டம் அவரை கோயிலின் அர்ச்சகர் வேலையில் இருந்து வெளியேற்ற முனைந்தது.
கலகக்கார கலைஞரான கிரீஷின் மனத்தை ராமகிருஷ்ணரின் இது போன்ற பழமைவிரோத, மூடபக்திக்கு எதிரான செய்கைகள் ஈர்த்தன. அவரது நாடகங்களில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறலாயின. ராமகிருஷ்ணர் கிரிஷின் நாடகக் கொட்டகைகளை நாடிச் சென்றதன் காரணம் நாடகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, சமூகத்தின் பார்வையில் இழிவானவர்களாக கருதப்பட்டவர்களையும் மீட்பதே அவர் நோக்கம். (அக்காலத்தில் நாடக நடிகைகள் சமூக விலக்கம் செய்யப்பட்டிருந்தனர்). கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற ராமகிருஷ்ணரின் செய்தி கிரிஷின் நாடகங்களில் ஒலித்தது. ‘நீ கடவுளைத் தேட வேண்டுமெனில் மனிதரிடம்தான் தேட வேண்டும்’ என்பார் ராமகிருஷ்ணர் கிரிஷிடம். சகோதரி நிவேதிதையும் கிரிஷூம் ஒரே தெருவில் வசித்தார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
கிரிஷின் ஆஸ்துமா மோசமாகிக் கொண்டு வந்தது. 1912-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, கிரிஷ், ராமகிருஷ்ண ருடன் இரண்டறக் கலந்தார். அவர் உடல் அழகாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம் குழைத்து ஒரே ஒரு வார்த்தையை எழுதினார்கள். ‘ராமகிருஷ்ணர்!’
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com