ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: கம்பீர அனுமன்

ஓவியர் வேதா

திருநாலக்குன்றம் என்றும் சிகாநல்லூர் என்றும் அழைக்கப் பட்டு இப்போது குடுமியான்மலை ஆகியுள்ளது. ஊரே மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் இருக்கும் திருக்கோவிலில் நுழைந்தவுடன் கொடிமரத்தைத் தாண்டும்போது உடனடியாக நாம் தரிசிப்பது தெற்கு நோக்கியவாறு பத்தடி உயரத்தில் வீற்றிருக்கும் அனுமனைத்தான். வலது கரத்தை மேலே உயரத்தியபடி தலையைச் சற்றே தூக்கி கம்பீரமாக அஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார்.

வாயுபுத்திரனின் அணிகலன்களும், இடையில் உள்ள ஆடை அலங்காரமும் அவ்வளவு அழகு. கண்களில் குழந்தைமையும் ஆனந்தமும் தன்னால் முடியுமென்ற தன்னம்பிக்கையும் வெளிப்படுகிறது. ஜாம்பவான், வாயு புத்திரனின் பலத்தையும், ஆற்றலையும் எடுத்துக்கூறியதால் ஏற்பட்ட விளைவு அது. வாயிலே கோரைப் பற்களும், இடையிலே குறுவாளும் காணப்படுகின்றன. தோளில் உள்ள வஸ்திரம் காற்றில் பறப்பதுபோல் உள்ளது. வலது கையை மேலே உயர்த்திய நிலையிலும், இடது கையை இடுப்பில் வைத்தபடி, இடது காலை முன்வைத்து கடலைக் கடக்க ஆயத்தம் ஆவதுபோல் காட்சியளிக்கிறார்.

மார்பிலே முப்புரி நூல் இல்லை. வலது காலில் கங்கணமும், சிலம்பும் காணப்படவில்லை. அல்லது ஜாம்பவானின் வார்த்தைகளால் ஏற்பட்ட களிப்பில் விஸ்வரூபம் எடுத்துத் துள்ளிக் குதித்தபோது கழன்று விழுந்து விட்டதா என்று தெரியவில்லை. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் குடைவரைக் கோவிலாகக் கட்டப்பட்டு, பின்னர் சோழர்களாலூம், பாண்டியர்களாலும், குறிப்பாக முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கோவிலாகும். இக் கோவிலில் இசைக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

SCROLL FOR NEXT